இளையராஜா மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவிற்கு நோட்டீஸ் …

மலையாளத் திரைப்படமான மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் வரும் கண்மணி அன்போடு பாடல் உரிமையை வாங்கிய பிறகுதான் படத்தில் பயன்படுத்தியதாக இளையராஜாவின் நோட்டீஸ்களுக்கு தயாரிப்பாளர் சரியான பதில் கொடுத்துள்ளார். இது தற்போது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சக்கைப்போடு போட்ட திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். கேரள மாநிலம் கொச்சியை அடுத்த மஞ்சம்மல் என்கிற கிராமத்தில் இருந்து 11 பேர் கொண்ட நண்பர்கள், கோவாவிற்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு பின் அது தோல்வியில் முடிய, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்து குணா குகையை பார்க்கின்றனர்.
அந்த குகையின் அழகைப்பார்த்து வியந்து போன நண்பர்கள் புகைப்படம் எடுப்பதற்காக தடையை மீறி செல்கின்றனர். அப்போது, ஒரு பள்ளத்தில் நண்பன் சுபாஷ் விழுந்துவிட அங்கிருந்த அனைவரும் பதறிப்போய் என்ன செய்வது என்று தெரியாமல் கதறி அழுகின்றனர். இதன் பிறகு என்ன நண்பன் சுபாஷை எப்படி காப்பாற்றினார்கள் என்பது தான் இப்படத்தின் கதை. மஞ்சும்மல் பாய்ஸ்: 2006ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில், கண்மணி அன்போடு காதலன் பாடல் ஒலிக்கும் போது டைட்டில் கார்டோடு படம் தொடங்குகிறது. அதே போல, கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரும் மெய்சிலிர்க்கும் வகையில் மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல என்று பாட்டை கேட்டு ஒட்டுமொத்த தியேட்டரும் விசில் அடித்து ரசித்தனர். இத்தனை ஆண்டுகளாக காதலன் காதலிக்காக பாடிய பாடலாக பார்க்கப்பட்டு வந்த இந்த பாடல்,மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் மூலம் நண்பர்களுக்கான பாடலாக மாறி உள்ளது. இந்த படம் வெளியான பிறகு ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவையும் ஒரு கலக்கு கலக்கியது.
இந்நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு கண்மணி அன்போடு காதலை பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக மஞ்சும்மல் பாய்ஸ், படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் வழக்கறிஞர் சரவணன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் பதிப்புரிமை சட்டப்படி பாடலின் முழு உரிமையாளர் என்பதால், முறையாக உரிமை பெற்று பாடலை பயன்படுத்த வேண்டும் அல்லது பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும், பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும் அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு படத்தின் தயாரிப்பாளரான ஷான் ஆண்டனி பதிலளித்துள்ளார். அதில், பாடலின் உரிமையாளர்களான பிரமிட் மற்றும் ஸ்ரீதேவி சவுண்ட்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களிடம் முறைப்படி அனுமதி வாங்கி தான் அந்த பாடலை பயன்படுத்தினோம். அதாவது தெலுங்கு உரிமை மற்றும் மற்ற மொழி உரிமை என இரண்டு நிறுவனத்திலும் நாங்கள் முறையாக அனுமதி பெற்று இருக்கிறோம். எனவே இந்த பாடலை பயன்படுத்த எங்களுக்கு முழு உரிமை உள்ளது. இந்த புகார் தேவையற்ற புகார் என இளையராஜாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.