Now Reading
‘ப்ளாஸ்ட்’ திரைப்படம் விமர்சனம்

‘ப்ளாஸ்ட்’ திரைப்படம் விமர்சனம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அர்ஜுனின் ‘ஆக்‌ஷன் கிங்’ அடைமொழிக்கு தீனி போடும் விதமாக வெளியாகியுள்ளது ‘ப்ளாஸ்ட்’. ட்ரெய்லரிலேயே படத்தின் கதைக்களத்தை தெரியப்படுத்தி விட்டாலும் திரைக்கதையில் மேஜிக் செய்து வெற்றிபெற்றாரா இயக்குநர் என்பதை பார்க்கலாம்.

கராத்தே மாஸ்டரான ராஜாராம் (அர்ஜுன்) தனது மகள் நிலாவை (ப்ரீத்தி முகுந்தன்) சிறுவயதிலிருந்தே துணிச்சல் மிக்க பெண்ணாக வளர்க்கிறார். தற்காப்பு கலைகளையும் கற்றுக் கொடுக்கிறார். தனக்கு மட்டுமின்றி பிறருக்கு நடக்கும் அநீதிகளையும் தட்டிக் கேட்கிறார் நிலா.

ராஜாராமின் மனைவியும் (அபிராமி) தற்காப்புக் கலையில் தேர்ந்தவர். இப்படியான குடும்பத்தில் ஒரு வில்லன் கூட்டம் மூலமாக ஒரு பிரச்சினை வருகிறது. அதை மொத்த குடும்பமும் தங்களுடைய தற்காப்புக் கலை திறனின் மூலம் எப்படி சமாளித்து வெளியே வருகிறார்கள் என்பதுதான் ‘ப்ளாஸ்ட்’ படத்தின் கதை.

இயக்குநர் சுபாஷ் கே.ராஜ், தியேட்டரில் ரசிகர்கள் எந்தெந்த இடங்களிலெல்லாம் விசிலடிப்பார்கள், கொண்டாடுவார்கள் என்பதை மிக துல்லியமாகக் கணித்து, அந்த மாஸ் தருணங்களை சுற்றியே படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார்.

ஒரு குறும்பட அளவுக்கான மிகச்சிறிய ஒற்றை வரிக் கதையை எடுத்துக்கொண்டு, அதை சுற்றி ஒரு சுவாரஸ்யமான ஆக்‌ஷன் மசாலா படத்தை எப்படி உருவாக்க வேண்டும் என்கிற வித்தையை நன்றாகவே அறிந்து வைத்துள்ளார்.

லோகேஷ் கனகராஜின் ‘மாநகரம்’ படத்தை போலவே, இதையும் ஒரு மல்டி-நரேட்டிவ் பாணியிலான திரைக்கதையாக இயக்குநர் அணுகியுள்ளார். படம் தொடங்கிய முதல் அரை மணி நேரத்திலேயே, கதையின் மையப்புள்ளியான நான்கு பேர் கொண்ட குடும்பத்தை நமக்கு அறிமுகப்படுத்துவதோடு தேவையற்ற விவரணைகள் எதுவும் இன்றி நேரடியாக கதைக்கு வந்துவிடுகிறார்.

டோபி (வினோத் சாகர்) என்ற கதாபாத்திரத்துக்கு படத்தின் நாயகனை விட விரிவான பின்னணிக் கதை கொடுக்கப்பட்டுள்ளது. அவன் ஒரு முரடன், கோபக்காரன், சிறையிலிருந்து இப்போதுதான் வெளியே வந்திருக்கிறான், எப்படியாவது ஒரு ரவுடி கும்பலில் சேர்ந்து குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத் துடிக்கிறான் என்றெல்லாம் நமக்குச் சொல்லப்படுகிறது.

ஆனால், ஆரம்பத்தில் இந்தத் தகவல்களெல்லாம் நமக்குத் தரப்படும்போது, இந்த டோபிக்கும் நாயகன் குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம் என்பது நமக்கு துளியும் புரியவில்லை. ஆனால் போகப் போக மொத்த கிளைக் கதைகளையும் ஹீரோ குடும்பத்துடன் ஒன்றாக முடிச்சு போட்ட விதத்தின் மூலம் ஈர்க்கிறார் இயக்குநர். நாம் கதையை ஓரளவுக்கு யூகிக்கும்போது, படம் சில திருப்பங்களால் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தபோதிலும், படம் எங்கும் தேவையற்ற சீரியஸ்தனம் இல்லாமல் மிகவும் லேசான தொனியிலேயே பயணிப்பது ஒரு மிகப் பெரிய ப்ளஸ்.

அர்ஜுன் தனது வீட்டில் ஒரு புதிய கழிப்பறை கட்டுவது போன்ற ஒரு சாதாரண விஷயம், பின்னாட்களில் கதையின் முக்கிய திருப்பத்தோடு பொருந்துவதை ரசிக்க முடிகிறது.

ஆக்‌ஷன் காட்சிகள் ஒவ்வொன்றும் மிக நேர்த்தியாகப் படமாக்கப்பட்டுள்ளன. யார் அந்த ஸ்டண்ட் இயக்குநர் என்று வியக்கும் அளவுக்கு அட்டகாசமான உழைப்பு. ஃபீனிக்ஸ் பிரபு படம் முழுக்க தெரிகிறார். படத்தின் மற்றொரு ஹீரோ இவர்தான். சண்டை காட்சிகளில் படத்தின் டைட்டிலுக்கு ஏற்றார் போல் ஒட்டுமொத்த அரங்கும் ‘ப்ளாஸ்ட்’.

‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுனுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்த முரட்டுத் தீனி இப்படம். இந்த வயதிலும் படுசுறுசுறுப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டி வியக்க வைக்கிறார். ‘ஏழுமலை’, ‘ஜெய்ஹிந்த்’ காலத்தில் இருந்த அர்ஜுனை இதில் மீண்டும் பார்க்க முடிகிறது.

ப்ரீத்தி முகுந்தனுக்கு இது பேர் சொல்லும் படமாக இருக்கும். ஆக்‌ஷன் காட்சிகளில் அவருடைய அசுரத்தனமான உழைப்பு ஆச்சர்யப்படுத்துகிறது. மெலிந்த உடலைக் கொண்டிருந்தாலும் ஆக்‌ஷன் காட்சிகளில் இருக்கும் நம்பகத்தன்மையே அதற்கு சான்று. கமர்ஷியல் படங்களில் வரும் ‘ஊறுகாய்’ ஹீரோயின்கள் போலன்றி, இதில் அவருக்கு உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம்.

அபிராமி, விவேக் பிரசன்னா ஆகியோரும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.

See Also

ரவி ப்ஸ்ரூர் பின்னணி இசை படத்துக்கு பெரும் பலம். பாடல்கள் கதையினூடே வந்துவிடுவதால் கதையோட்டத்தை கெடுக்காதது ஆறுதல். அருண் ராதாகிருஷ்ணனின் கேமரா ஆக்‌ஷன் காட்சிகளில் நின்று விளையாடி இருக்கிறது.

படத்தில் குறைகளும் இல்லாமல் இல்லை. கதையின் பிரதான பிரச்சினை இதோடு முடிந்தது என்று நாம் நினைக்கும்போதெல்லாம், அடுத்தடுத்துப் புதிய கதாபாத்திரங்களையும், நமக்குத் தேவையில்லை என்று தோன்றும் பின்னணிக் கதைகளையும் இயக்குநர் அடுக்கிக்கொண்டே போகிறார்.

140 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தில், அத்தனை கதாபாத்திரங்களும் எதற்காக வைக்கப்பட்டன என்று நமக்குப் புரியவே நேரம் எடுக்கிறது. படத்தில் வில்லன் கதாபாத்திரங்களே பெரிய பட்டியல் அளவுக்கு இருக்கும் போலிருக்கிறது. இரண்டாம் பாதியில் சில இடங்கள் கதையை தேவையின்றி இழுப்பது போன்ற உணர்வைத் தருகின்றன.

இந்தக் குறைகளை தாண்டி, நாம் கொடுக்கும் காசுக்கு தியேட்டரில் விசில் அடிப்பதற்கான எல்லா நியாயங்களையும் பெற்றுவிடுகிறது இப்படம்.

சுற்றுச்சூழல், ஊழல், மிக முக்கியமாக பாலின அரசியல் போன்ற கருத்துகள் எங்கும் பிரச்சார நெடி இல்லாமல், கதையோடு இயல்பாகச் சொல்லப்பட்டிருப்பது சிறப்பு.

சிம்பிளான கதையாக இருந்தாலும் சுவாரஸ்யமான திரைக்கதையையும் ‘கூஸ்பம்ப்’ மொமென்ட்களையும் கொண்டிருக்கும் இந்த ‘ப்ளாஸ்ட்’டை தாராளமாக குடும்பத்துடன் கண்டு ரசிக்கலாம்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)