நாளைய தினம் என்ன அப்டேட்…ஆர்வத்தில் ரசிகர்கள்…விக்ரமின் கேள்வியோடு….

நடிகர் விக்ரம் திரைப்பயணம் சேது படத்தில்தான் துவங்கியது எனலாம். முன்னதாகவும் பல படங்களில் சாக்லேட் பாய் கேரக்டர்களில் நடித்துள்ளார் என்றாலும், அவையெல்லாம் விக்ரமிற்கான அடையாளத்தை கொடுக்கவில்லை. மாறாக பாலா இயக்கத்தில் வெளியான சேது படமே, விக்ரம் என்ற நடிப்பு அரக்கனுக்கு முறையாக தீனி போட்டது. அந்த வகையில், அன்று துவங்கி தற்போதுவரை தன்னுடைய நடிப்பை நம்பி வரும் ரசிகர்களை எப்போதும் வெறுமமே திருப்பி அனுப்பியதில்லை விக்ரம். தன்னுடைய நடிப்பு, கெட்டப் என பல விஷயங்களிலும் மெனக்கெடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வித்தியாசமான படங்களை கொடுத்து வருகிறார் விக்ரம். கடந்த ஆண்டில் அவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. ஆதித்த கரிகாலனாக இந்தப் படத்தில் மாஸ் காட்டியிருந்தார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் மல்ட்டி ஸ்டாரர் படமாக வெளியானது. இதையடுத்து பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் நாடாளுமன்ற தேர்தலையடுத்து ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சுதந்திர போராட்ட காலகட்டத்தில் கேஜிஎப் மக்களின் வாழ்க்கை கதைக்களமாக கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த இரு படங்களும் விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள சூழலில் விக்ரமின் அடுத்தப்படம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் சியான் 62 படத்தின் அறிமுக ப்ரமோ கடந்த ஆண்டில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சித்தா படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் இந்தப் படத்தில் விக்ரம் இணைந்துள்ளார். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார். படத்தை ரியா சுபு தயாரிக்கவுள்ளார்.
இந்தப் படத்தில் துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு ஆகியோர் இணைந்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் ப்ரமோ வீடியோ நாளைய தினம் விக்ரமின் பிறந்தநாளையொட்டி வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நேற்றைய தினம் லோடிங் என்று தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருந்த விக்ரம், போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்றைய தினம், தம்பி உனக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்தப் பதிவில் அவர் வெளியிட்டுள்ள போஸ்டரில், அவர், கொள்ளையன் போன்ற கெட்டப்பில் காணப்படுகிறார். நாளைய தினம் என்ன அப்டேட் வெளியாகும் என்பதை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.