ரஜினிகாந்த் பேசிய உருக்கமான பதிவு …விஜயகாந்த் ஒரு காவல் தெய்வம் ..ரொம்ப மிஸ் பன்ற

விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த வருடம் டிசம்பர் மாதம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் தள்ளியது. அவர் இருந்தவரை எத்தனையோ பேர் அவரால் பயன் அடைந்திருக்கின்றனர். சாமானியர்கள் முதல் பிரபலங்கள்வரை அந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்லும். இறக்கும்வரையில் பலரது அன்பை சம்பாதித்த விஜயகாந்த் இறந்த பின்பும் பலரால் மதிக்கப்படுகிறார். அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கியும் சிறப்பித்தது மத்திய அரசு. இந்தச் சூழலில் விஜயகாந்த் குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார் ரஜினிகாந்த்.
விஜயகாந்த் இந்தப் பெயரை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. சினிமாவில் நுழைந்து தனக்கான தனித்த உடல் மொழி, ஸ்டைல், வசன உச்சரிப்பு, நடிப்பு என அனைத்திலும் முத்திரை பதித்தவர். ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோர் பீக்கில் இருந்தபோது சினிமாவுக்குள் நுழைந்து தனக்கென தனி ரசிகர் படை சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியவர் விஜயகாந்த். அவ்வாறு அவர் அப்படி செய்தது சாதாரண விஷயமில்லை என்பது பலரும் ஒத்துக்கொண்ட உண்மை.
ரசிகர்களால் கேப்டன், புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். கேப்டன் என்ற பட்டத்துக்கு உரிய முறையில் பல விஷயங்களை தனியாளாக வழி நடத்தியவர் அவர். சிவாஜியின் இறப்பில் கூட்டத்தை ஒற்றை ஆளாக கட்டுப்படுத்தியது, ஏதேனும் பிரச்னை என்றால் எதற்கும் யாருக்கும் அஞ்சாமல் முதல் ஆளாக களத்தில் குதிப்பது, நட்சத்திர கலை விழாவை திறம்பட நடத்தி காண்பித்தது என அவர் உண்மையில் கேப்டன் தான் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறிவருகிறார்கள்.
விஜயகாந்த் வளர்ந்துவந்த நேரத்தில் அவரது நிறத்தையும், தோற்றத்தையும் வைத்து பல நடிகைகள் அவருடன் நடிக்க மறுத்ததாக சொல்லப்படுவதுண்டு. இருந்தாலும் அதையெல்லாம் கண்டு துவளவில்லை கேப்டன். மாறாக திறமையை வளர்த்து வெற்றியை பெற்றால் ஒதுக்கியவர்களும் வருவார்கள் என்ற கோட்பாட்டின்படி இயங்கி; தன்னை ஒதுக்கியவர்களையே மீண்டும் தன்னுடன் நடிக்கும்படி செய்தார்.
சினிமாவில் கலக்கிவந்த விஜயகாந்த் அரசியலில் நுழைந்து எதிர்க்கட்சி தலைவராக மாறினார். ஆனால் அரசியல் தளத்தில் அவருக்கு சில துரோகங்கள் நிகழ்த்தப்பட்டன. அது விஜயகாந்த்துக்கு ரொம்பவே மன உளைச்சலை கொடுத்தது. இதனையடுத்து அவருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி முழு ஓய்வு பெற்றார். பிறகு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த வருடம் உயிரிழந்தார். அவரது உடல் முழு அரசியல் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சூழல் இப்படி இருக்க அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்தது.. அதனை பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக்கொண்டார். இந்நிலையில் இதுகுறித்து ரஜினிகாந்த் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “என்னுடைய அருமை நண்பர் அமரர் விஜயகாந்த்துக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது கொடுத்து கௌரவித்திருக்கிறார். இது நமக்கு எல்லாம் மகிழ்ச்சியான நிகழ்வாகும். இந்திய அரசின் பத்ம விருதுகள் 2024 புத்தகத்தில் விஜயகாந்த்தின் வரலாற்றை பதிவு செய்திருக்கிறார்கள். மதுரை வீரன்: அது அவரின் பெயருக்கு இன்னமும் பெருமை சேர்க்கும் விஷயமாகும். விஜயகாந்த் நம்மிடையே இல்லை என்பதை இன்றளவும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திடீரென தோன்றி சாதனைகள் செய்து மறைந்துவிட்டார். இனிமேல் விஜயகாந்த் மாதிரி ஒருவரை பார்க்கவே முடியாது. அவரை நான் ரொம்பவே மிஸ் செய்கிறேன். மதுரையில் பிறந்த நமது மதுரை வீரன் கேப்டன் விஜயகாந்த்தின் நாமம் வாழ்க” என்று உருக்கத்துடன் பேசியிருக்கிறார்.