செய்தியாளர்கள் சந்திப்பில் kpy பாலா …யாரும் அப்போது எனக்கு உதவவில்லை

சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டவர் பாலா. அன்றிலிருந்து KPY பாலா என்று அழைக்கப்படுகிறார். மேலும் சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். பாலாவை பொறுத்தவரை ஓடி ஓடி உதவி செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளித்த அவர்; பெட்ரோல் பங்க்கில் வேலை பார்க்கும் இளைஞர் ஒருவருக்கு இருசக்கர வாகனத்தை வாங்கி தந்தார். இப்படி பல உதவிகளை செய்துவரும் பாலா செய்தியாளர் சந்திப்பில் உருக்கத்துடன் பேசினார்.
சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்ட KPY பாலா. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனதால் அவர் KPY பாலா என்று அழைக்கப்படுகிறார். அந்த ஷோவுக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்த அவர் தற்போது மேடை நிகழ்ச்சிகளையும் கலகலவென தொகுத்து வழங்குகிறார். சின்னத்திரையில் ஜொலித்தால் வெள்ளித்திரை கதவு திறக்கும் என்ற விதிக்கு ஏற்பட பாலாவுக்கும் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. ஜுங்கா, தும்பா, சிக்சர், காக்டெயில், புலிக்குத்தி பாண்டி, லாபம், ஆண்ட்டி இந்தியன், நாய் சேகர், தேஜாவூ, கனம், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தன. இன்னும் சில படங்களிலும் அவர் கமிட்டாகியிருக்கிறார்
சினிமாவில் இப்போதைக்கு அவர் வளர்ந்து வரும் நடிகராக இருந்தாலும் ஏகப்பட்ட பேருக்கு பல உதவிகளை செய்துவருகிறார். அனாதை இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு முதலில் உதவ ஆரம்பித்த அவர் படிப்படியாக பலருக்கும் உதவ ஆரம்பித்தார். அதன்படி காமெடி நடிகர் பாவா லட்சுமணனுக்கு சர்க்கரை நோய் காரணமாக கால் கட்டை விரல் அகற்றப்பட்டபோது அவருக்கு உதவி செய்த வெகு சிலரில் பாலாவும் ஒருவர்.அதுமட்டுமின்றி மலை கிராம மக்கள் மற்றும் முதியோர் இல்லத்துக்கு தனது செலவில் 4 ஆம்புலன்ஸ்களை வாங்கி கொடுத்திருக்கிறார். அந்த சம்பவமும் பலரையும் நெகிழ செய்தது. குறிப்பாக சினிமாவில் வளர்ந்து வரும் சூழலிலேயே இப்படிப்பட்ட உதவிகளை அவர் செய்வதால் கண்டிப்பாக அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கும். இந்த பெரிய மனம் யாருக்கும் வந்துவிடாது என்றும் பலர் கூறுகிறார்கள்.
கடந்த வருடம் சென்னையை மிக்ஜாம் புயல் புரட்டிப்போட்ட போது குடும்பத்துக்கு தலா 1000 ரூபாய் வீதம் 2 லட்சம் ரூபாயை வழங்கினார். அதுவும் பெரும் பாராட்டை அவருக்கு பெற்றுக்கொடுத்தது அதேபோல், வாணியம்பாடி அருகே இருக்கும் நெக்னாமலை கிராமத்தில் பொதுமக்களுக்கு தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸை வாங்கிக்கொடுத்த அவர் நீலகண்டன் என்ற மாற்றுத்திறனாளிக்கு முச்சக்கர வாகனத்தையும்; பெட்ரோல் பங்க்கில் வேலை செய்யும் இளைஞருக்கு இருசக்கர வாகனத்தை சமீபத்தில் வாங்கிக்கொடுத்தார். எனக்கு யாரும் உதவவில்லை: இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார் பாலா. நிகழ்ச்சியை முடித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய பாலா, ‘மாற்றம் என்ற அமைப்பில் நான் இருப்பது சந்தோஷம். எனது வாழ்வில் நான் கேட்கும்போது எனக்கு யாருமே உதவவில்லை. இப்போது என்னிடம் கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உதவ வேண்டும் என்பதுதான் எனது ஆசை’ என்றார்.