விக்ரம் 3 – இந்தியன் 2 அப்டேட்டை கொடுத்த கமல்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம் விக்ரம். ஜூன் 3 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் படுபிஸியாக இருக்கிறார் கமல்ஹாசன். அண்மையில் வெளியான டிரெய்லர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. கேன்ஸ் திரைப்பட விழாவில் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு பாராட்டை பெற்றுள்ளது. விஜய் சேதுபதி, ஃபகத்பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழகத்தில் படத்தை ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது.
இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் கமல், தன்னுடைய நடிப்பில் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் திரைப்படம் என்பதால் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். அடுத்தடுத்த படங்கள் குறித்தும் பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த கமல்ஹாசன், இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கும் என்று கூறினார். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
விக்ரம் 3 பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்போது, லோகேஷ் கனகராஜ் தான் இதுகுறித்து முடிவு செய்ய வேண்டும் என கமல்ஹாசன் கூறியுள்ளார். விக்ரம் 3-க்கும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குநர் என்பதை தான் முடிவு செய்து விட்டேன் என்று மேடையிலேயே வெளிப்படையாக அறிவித்தார். விக்ரம் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் நீளம் சுமார் 2 மணி நேரம் 53 நிமிடங்கள் என்பதால், விக்ரம் படம் சற்று பெரிய படமாகவே இருக்கும்.