மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன் பிரபல நகைச்சுவை நடிகர் பேட்டி

தனியார் கடை திறப்பு விழாவுக்கு சென்ற பிரபல நகைச்சுவை நடிகரும், சமூக சேவகருமான பாலா கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் பற்றியும், நடிகர் ராகவா லாரன்ஸ் பற்றியும் பல விஷயங்களை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி இருக்கிறார்.
விஜய் டிவியில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய பாலா இன்று திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டும், பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். அதே நேரத்தில் தன்னால் முடிந்த உதவிகளை பல மக்களுக்கு கேட்காமலே செய்து கொண்டிருக்கும் பாலா பற்றி ரசிகர்கள் பலரும் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.
அதே நேரத்தில் தனக்கு கிடைக்கும் வருமானத்தில் தன்னால் முடிந்த அளவிற்கு பலருக்கு உதவி செய்து கொண்டிருக்கும் பாலாவிற்கு கைகோர்க்கும் விதமாக நடிகர் ராகவா லாரன்ஸ் பாலாவோடு சேர்ந்து பலருக்கும் உதவி செய்து கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் சேலத்தில் தனியார் கடை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாலாவை பார்ப்பதற்காக அந்த பகுதி முழுவதும் ஏராளமான பொதுமக்களும், பெண்களும் காத்திருந்தனர். சுமார் இரண்டு மூன்று மணி நேரம் காத்திருந்த பிறகு பாலா அங்கு வந்திருந்தார். அவரைக் காண மக்கள் முந்தி அடித்துக் கொண்டதால் அந்த நேரத்தில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பாலா பேசுகையில் நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்காக தொடர்ந்து சேவை செய்வேன் என்று கூறியிருக்கிறார். அதோடு என்னுடைய அண்ணன் லாரன்ஸ் என் மீது வைத்திருக்கும் அன்பு பார்த்து நான் வியந்து போய் இருக்கிறேன். அவர் ஹீரோவாக இருக்கின்ற பொழுதும் என்னை ஹீரோவாக தேர்ந்தெடுத்ததற்கு நன்றிக்கு மேல் ஒரு வார்த்தையே இல்லை. ராகவா லாரன்ஸ் அண்ணன் “ஷங்கர்” படம் மாதிரி. ஆனால் நான் “ஷார்ட் பிலிம்” மாதிரி. அந்த பிரம்மாண்டத்துடன் செய்கின்ற சேவையில் என்னையும் இணைத்துக் கொண்டதற்கு மிகப்பெரிய நன்றி என்று கூறியிருக்கிறார்.
அடுத்ததாக ராகவா லாரன்ஸ் பற்றி பேசிக்கொண்டு இருக்கையில், அண்ணன் என்னை மாடியில் இருந்து குதிக்க சொன்னால் கூட நான் ஏன் என்று கேட்காமல் குதிப்பேன் என்று பாலா கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து கில்லி திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது குறித்து பாலாவிடம் கேட்கப்பட்ட போது அதற்கு அவர் நான் ஸ்கூல் படிக்கும்போது பார்த்த படம் கில்லி. தற்போது அந்த படம் அதே எனர்ஜி மாறாமல் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.