மீண்டும் களமிறங்கிய கவின் …ஸ்டார் படம் எப்படி இருக்கு

ஸ்டில்ஸ்’ பாண்டியனின் மகன் இளன் இயக்கத்தில் கவின், லால், அதிதி போஹங்கர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் மே 10ம் தேதியான இன்று வெளியாகிறது. அதன் பிரத்யேக ப்ரீமியர் காட்சி வெளியான நிலையில், ஸ்டார் படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம்.
கடந்த ஆண்டு கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. இந்நிலையில், இந்த ஆண்டும் கோலிவுட்டை கவின் தான் காப்பாற்ற போகிறார் என வடசென்னை மீம்கள் எல்லாம் பறந்தன. கடைசியில் சுந்தர். சி அரண்மனை 4 படத்துடன் கடந்த வாரமே வந்து சந்துல சிந்து பாடி விட்டார்.
தமிழ் சினிமாவின் அடுத்த தரமான சம்பவமா? அல்லது சுமாரான சம்பவமா? இந்த ஸ்டார் படம் என்பது குறித்த விரிவான விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க..
கலை என்கிற கதாபாத்திரத்தில் கவின் நடித்துள்ளார். ஸ்டில்ஸ் பாண்டியன் கதாபாத்திரத்தில் லால் நடித்துள்ளார்.கவினின் அம்மா கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்துள்ளார். தன்னால் சாதிக்க முடியாததை தனது மகனை வைத்து சாதிக்கத் துடிக்கும் பாசக்கார அப்பாவாக லால் கடைசி வரை சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஹீரோவாக வேண்டும் என்கிற ஆசையில் ஜாலியாக சுற்றித் திரியும் கவினுக்கு வாழ்க்கை என்றால் என்ன என்பது புரிய வருகிறது. விபத்து காரணமாக முகத்தில் காயம் ஏற்பட நடிகராகும் கனவு சுக்குநூறாக உடைகிறது. குடும்பத்துக்காக வேலைக்கு செல்லும் கவின் கடைசியில் ஹீரோவானாரா? இல்லையா? என்பது தான் இந்த ஸ்டார் படத்தின் கதை.
அஜித் நடிப்பில் வெளியான முகவரி படத்தில் அஜித் இசையமைப்பாளராக போராடுவதும், காதலி உத்வேகப்படுத்துவதும் கடைசியில் குடும்ப கஷ்டத்தை புரிந்துக் கொண்டு வேலைக்கு செல்வதுமாக எப்படி கதை செல்லுமோ அதே பாணியிலான கதையை இந்த காலத்துக்கு ஏற்ப எடுத்து இயக்கி இருக்கிறார் இளன். சினிமா கனவுகளுடன் இருக்கும் பலரது வாழ்க்கையும் இதே போல இருக்கும் சூழலில் இரண்டு படங்களுக்கு இடையே பெரிதாக வித்தியாங்களை பார்க்க முடியாதது வருத்தமளிக்கிறது
படத்தின் தொடக்கத்தில் பள்ளி மாணவனாக சைக்கிளில் வந்து கெத்தாக இறங்கும் காட்சியில் இருந்து முதல் பாதி முழுவதும் வரும் ஒவ்வொரு பாடலிலும் அழகாக பர்ஃபார்ம் செய்து அசத்தியிருக்கிறார். அடிபட்ட பின்னர் இரண்டாம் பாதியில் வீட்டில் முடங்கி கிடக்கும் காட்சிகளும், வெளியே தலைகாட்ட முடியாமல் செல்வது, நடிப்பு வரலைப்பான்னு போனில் அழுவது, இந்த மூஞ்சி நடிக்கிறதை பார்ப்பீங்க என சவால் விடுவது என படம் முழுவதுமே கவின் நடிப்பு தான் காப்பாற்றுகிறது
மலையாள சினிமா போல ஸ்லோ மோஷனில் நடிகராக போராடும் ஒரு நபரின் கஷ்டமான வாழ்க்கையை மட்டுமே எடுத்து படமாக கொடுத்திருக்கிறார் இளன். இந்த படத்தை கவின் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இருவரும் தான் தாங்கிப் பிடித்து கடத்துகின்றனர். படத்தில் உள்ள அந்த 3 சர்ப்ரைஸ் காட்சிகளும் நிச்சயம் கூஸ்பம்ப்ஸ் கொடுக்கும். கிளைமேக்ஸ் காட்சியில் வரும் அந்த ட்விஸ்ட் வேறலெவல். மைனஸ்: படத்தில் இரண்டு நாயகிகளும் கொடுத்த வேலையை செய்திருந்தாலும் அவர்கள் வரும் காட்சிகள் எல்லாமே ரசிகர்களை சோர்வடையத்தான் வைக்கின்றன. கதையை விட்டு வேறு எங்கேயோ படம் செல்வது போன்ற எண்ணம் ஹீரோயின்களை குறிப்பாக இரண்டாம் பாதியில் அதிதி போஹங்கரை காட்டியவுடனே வருகிறது. ஒரு நல்ல சீன் வந்தால், அடுத்து ஒரு சுமாரான சீன் என படம் முழுக்க ஆன் அண்ட் ஆஃப் ஆகவே நகர்வது ரசிகர்களை எரிச்சலடைய வைக்கலாம். சினிமா விரும்பிகள் சினிமாவை வாழ்க்கையாக கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயம் இந்த ஸ்டார் மனதை வருடும். ஆனால், டிரெய்லர் கட்ஸ் பார்த்து விட்டு வேறலெவலில் இருக்கப் போகிறது என்கிற எண்ணத்துடன் படத்தை பார்க்க வரும் பொதுமக்கள் மத்தியில் இந்த ஸ்டார் ஜொலிக்குமா? என்பது சந்தேகம் தான். கவின் நடிப்புக்காக நிச்சயம் ஒரு முறை தியேட்டரில் பார்க்கலாம்.