திருச்சிற்றம்பலம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘தாய்க்கிழவி’ வெளியானது

மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரியா பவானி ஷங்கர், நித்ய மேனன், பிரகாஷ் ராஜ், முனீஷ்காந்த், பாரதிராஜா, அறந்தாங்கி நிஷா போன்ற பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. தனுஷ் அவரது சமூக வலைதள பக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் அதிகாரபூர்வ வெளியீட்டு தேதியை குறிக்கும் மோஷன் பிக்ச்சர் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.
அனிருத் மற்றும் தனுஷ் இருவரின் காம்போ இணைந்திருக்கும் இந்த படத்தின் பாடல்களை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியானது. நாட்டாமை படத்தில் நடிகர் பொன்னம்பலம், நடிகை மனோரமாவை பார்த்து தாய்க்கிழவி என்று கூறுவார், இந்த டயலாக் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அந்த டயலாக்கை வைத்து தான் இந்த பாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது, இப்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படும் டயலாக்குகளை பாடல்களில் சேர்ப்பது ட்ரெண்டாகிவிட்ட நிலையில் இந்த படத்திலும் அவ்வாறு சேர்க்கப்பட்டு இருக்கிறது.
படக்குழு அறிவித்தபடி ஜூன்-24ம் தேதியான இன்று திருச்சிற்றம்பலம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான தாய்க்கிழவி பாடல் வெளியானது. அனிரூத் இசையில், தனுஷ் இந்த பாடலை எழுதி, பாடியிருக்கிறார், இந்த பாடலுக்கான நடன அசைவுகளை நடன மாஸ்டர் சதிஷ் செய்துள்ளார். ஹீரோயினை, ஹீரோ கேலி செய்யும் விதமாக அதே சமயம் ஜாலியான பாடலாக அமைந்துள்ளது. திருவிழா கூட்டத்தில் சொந்தபந்தங்கள் ஒன்றுகூடி கொண்டாடும் விதமாக ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் பாடல் அமைந்துள்ளது. இந்த பாடலில் அனைத்து நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளனர். ஆகஸ்ட் மாதம் படம் வெளியாக உள்ளது.