தனுஷ் பேசிய ஓபன் டாக் …ஐஸ்வர்யா என்னை புரிந்து கொள்வார் ..

நடிகர் தனுஷ் இந்திய அளவில் ஃபேமஸான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. தற்போது சேகர் கம்முல்லா இயக்கும் குபேரா படத்தில் நடித்துவரும் அவர்; தனது 50ஆவது படமாக ராயன் படத்தை இயக்கி நடிக்கவும் செய்திருக்கிறார். மேலும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கவிருக்கிறார் அவர். இந்தச் சூழலில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. .
கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. அதிலும் தனுஷின் உருவம் ரொம்பவே கிண்டல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து காதல் கொண்டேன் படத்தில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தியதன் காரணமாக நல்ல நடிகர் என்ற பெயரை பெற்றார். காதல் கொண்டேன் படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் இதுவரை 49 படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலான படங்கள் ஹிட் படங்களாகவும், தனுஷுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்த படங்களாகவும் அமைந்தன.
தனுஷின் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.தனுஷ் அடுத்ததாக மாரி செல்வராஜுடன் ஒரு படம், சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படம் ஆகியவற்றில் கமிட்டாகியிருக்கிறார். இதனால் அவர் படு பிஸியாக இருக்கிறார். முக்கியமாக முதல் படத்தில் பல கிண்டலுக்கு ஆளான தனுஷ்; தன்னை கிண்டல் செய்தவர்களையே பாராட்ட வைத்ததன் மூலம் உண்மையான வெற்றி என்றால் என்னவென்று நிரூபித்திருக்கிறார். தனுஷ் 50: நடிகராக மட்டுமின்றி பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என்ற பன்முகத்தன்மையை கொண்ட தனுஷ் பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் நல்ல வரவேற்பையே பெற்றது. தற்போது அவர் தனது 50ஆவது படமான ராயன் படத்தை தானே இயக்கியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். அடுத்த மாதம் படம் ரிலீஸாகிறது.அடுத்ததாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கவிருக்கும் அவர், இளையராஜாவின் பயோபிக்கிலும், சேகர் கம்முல்லாவின் இயக்கத்தில் குபேரா படத்திலும் நடிக்கிறார்.
இதற்கிடையே ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கிட்டத்தட்ட 20 வருடங்கள் அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்த சூழலில் திடீரென இருவரும் பிரிந்தார்கள். ஆனாலும் அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருப்பதன் காரணமாக கணவன் – மனைவியை எப்படியாவது சேர்த்துவைக்க குடும்பத்தினரும், நண்பர்களும் முயன்றார்கள். எதுவும் வேலைக்கு ஆகவில்லை. இப்போது இரண்டு பேரும் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்கள்.
அவர்களது விவாகரத்துக்கு பல்வேறு காரணங்கள் பலரால் யூகிக்கப்படுகின்றன. இந்நிலையில் ஐஸ்வர்யா குறித்தும், திருமண வாழ்க்கை குறித்தும் தனுஷ் பேசியிருந்த பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், “திருமணத்துக்கு முன்பு நான் எப்படி இருந்தேனோ அப்படியேத்தான் திருமணத்துக்கு பிறகும் இருக்கிறேன். என்னிடம் எந்தவிதமான மாற்றமும் இல்லை. எனது மனைவி ஐஸ்வர்யா என்னை நன்றாகவே புரிந்துகொண்டு நடந்துகொள்வார்” என்றார்.