யாதும் ஊரே யாவரும் கேளிர் விமர்சனம்
அகதிகளின் போராட்டங்கள் பற்றி அதிகம் காட்டுவது இல்லை. இந்நிலையில் தான் விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் ஒரு அகதி தனக்கான அடையாளத்திற்காக படும் பாட்டை அழகாக காண்பித்திருக்கிறார்கள்.அகதியான புனிதன்(விஜய் சேதுபதி), தன் உண்மையான அடையாளத்தை மறைத்துவிடுகிறார். கொடைக்கானலில் இருக்கும் கேரட் ஃபார்மில் வேலை செய்யும் கனகராணி( கனிகா) என்பவரை தேடிச் செல்கிறார். வழியில் மெடில்டாவை(மேகா ஆகாஷ்) சந்திக்கிறார். உள்ளூரில் இருக்கும் தேவாலயத்தில் தன் திறமையை வெளிப்படுத்தும் இசை கலைஞர் மெடில்டா.
இசை மீதான ஆர்வத்தால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்படுகிறது. மெடில்டா மற்றும் இன்னொரு இசை கலைஞரான ஜெசி ஆகியோர் புனிதனின் உண்மையான அடையாளத்தை கண்டுபிடிக்கிறார்கள். அவர் புனிதன் அல்ல கிருபாநிதி என்கிற அகதி என்பதை கண்டுபிடிக்கிறார்கள். இதனால் மெடில்டா, புனிதன் இடையேயான உறவு பாதிக்கப்படுகிறது.
இரண்டாம் பாதியில் புனிதனின் உண்மையான முகம். அவர் கனகராணியை தேடி அலைவதை காட்டுகிறார்கள். லண்டன் இசை அரங்கில் தன் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பது தான் புனிதனின் கனவு. ஒரு அகதியாக புனிதன் படும் கஷ்டங்கள், அவர் ஏன் அகதியானார் என்பதை அழகாக காட்டியிருக்கிறார்கள்.
தன் அடையாள பிரச்சனைக்கு இடையே புனிதனின் கனவு நிறைவேறுமா என்பதே கதை.அகதிகள் சந்திக்கும் பிரச்சனைகளை தைரியமாக சொல்கிறது யாதும் ஊரே யாவரும் கேளிர் படம். லண்டன் இசை நிகழ்ச்சியில் அகதியான ஹீரோவுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது நம்மை அறியாமல் உணர்ச்சிவசப்பட்டு கை தட்டுகிறோம்.
முதல் பாதி மெதுவாக சென்றாலும் இரண்டாம் பாதியில் அதை சரி செய்துவிடுகிறார்கள். தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. மறைந்த நடிகர் விவேக் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.கனிகா, மேகா ஆகாஷ் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை அழகாக செய்திருக்கிறார்கள். நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை பக்கபலமாக இருக்கிறது. ஆனால் திரைக்கதை வலுவில்லாமல் போய்விட்டது.
நாம் பார்த்துப் பழகிய அதே விஜய்சேதுபதி. கொஞ்சம் ‘96 ஸ்டைலில் அமைதியாகப் பேசுகிறார். அதுவே அகதியின் உடல்மொழியைக் கொண்டு வந்துவிடும் என நம்பியிருக்கிறார். மேகா ஆகாஷின் பாத்திரம் வெறும் ஆர்வக் கோளாறாகவே மனதில் பதிகிறது. துடிப்பாக வரும் மகிழ் திருமேனி கேரக்டரும் ஸ்ட்ராங்காக நிறுவப்படாததால் அவரின் நடிப்பும் பெரிதாக ஈர்க்கவில்லை. மறைந்த நடிகர் விவேக் ஆங்காங்கே கவனிக்க வைக்கிறார். இதர படமாந்தர்கள் ஓரளவு சொல்லிக் கொள்ளும்படி நடித்துள்ளனர். விஜய்சேதுபதி அக்காவாக நடித்துள்ள பெண்மணி மட்டுமே உயிர்ப்பான அகதியாக மனதில் பதிகிறார்.
கதையில் உள்ள நல்ல கருத்தை உள்வாங்கி உணர்வுபூர்வமான இசையை வழங்கியுள்ளார் இசையமைப்பாளர் நிவாஸ் K. பிரசன்னா. பாடல்களும் கவர்கின்றன. ஒளிப்பதிவாளர் தனக்கு வழங்கப்பட்ட பணியைச் செவ்வனே செய்துள்ளார். க்ளைமாக்ஸ் காட்சியின் லைட்டிங் மட்டும் செயற்கைத் தனமாக தெரிந்தது.
நாடற்ற அகதிகளுக்கு குடியுரிமை வழங்கி, அவர்களும் நாடுள்ள மனிதர்களாக கருதப்பட்டால் தான், அவர்களின் திறமைகள் உலகுக்குத் தெரியவரும் என்று சொல்கிறது படம்.