விருப்பாக்ஷா விமர்சனம்
ருத்ரவனம் என்றொரு கிராமம். அந்தக் கிராமத்தில் அடுத்தடுத்து குழந்தைகள் மரணிக்கிறார்கள். ஏன், எதனால் என்று அந்தக் கிராமத்தில் இருக்கும் யாருக்கும் தெரியவில்லை. சமீபமாக அந்த ஊருக்குப் புதிதாகக் குடிவந்த வெங்கடாசலபதி ஒரு குழந்தையின் சடலத்தை வைத்து பில்லி சூனியம் செய்வது தெரியவருகிறது. ஊரிலிருக்கும் குழந்தைகள் இறப்பதற்கு இவர்தான் காரணம் என்று ஊர் மக்கள் அனைவரும் வெங்கடாசலபதியின் வீட்டிற்கும் நுழைந்து அவரையும் அவர் மனைவியையும் ஒரு மரத்தில் கட்டிவைத்து உயிரோடு எரித்துவிடுகின்றனர்.அப்போது, உங்கள் கிராமமே சுடுகாடாக மாறப்போகிறது என்ற சாபம் விடுகிறார், அவரின் மனைவி. அவர்களின் மகனை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துவிடுகின்றனர் அந்த ஊர் மக்கள்.
தற்கால கதையை விரிவாகப் பார்த்தால், விடுமுறைக்காகப் பூர்வீகத்திற்கு தன் அம்மாவுடன் வருகிறார் நாயகன். ஊர்த் தலைவரின் மகளாக நாயகி சம்யுக்தா. அவருடன் பழக்கம் ஏற்பட்டு, பின் அது வழக்கம்போலக் காதலாக மாறுகிறது. இதற்கிடையே ஊர்த் திருவிழாவின்போது ஒரு முதியவர் கோயிலின் கருவறையில் வந்து விழுந்து இறந்துபோகிறார். இதனால், ஊர்மக்கள் அதிர்ச்சியடைகின்றனர். ஊரில் எது நடந்தாலும் முன்னோர்கள் எழுதி வைத்திருக்கும் பிரகடனத்தை படித்துத்தான் தீர்வு காண்பதையே வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதன்படி, எட்டு நாள்களுக்கு ஊர் மக்கள் யாரும் ஊரைவிட்டு வெளியே போகக்கூடாது, புதியவர் யாரும் உள்ளே வரக்கூடாது என முடிவெடுக்கின்றனர்.
இதை மீறினால் மேலும் பல அசம்பாவிதங்கள் நடக்கும் என்கிறார்கள். தன் காதலனுடன் ஊரைவிட்டு ஓடிப் போக ஒரு பெண் ஊர் எல்லையைத் தாண்டுகிறார். அதனால், பல அமானுஷ்யங்கள் நிகழ்கின்றன. நிறைய இறப்புகள் ஏற்படுகின்றன. அவையெல்லாம் எப்படி நிகழ்கின்றன, யார் அதற்குக் காரணம், நாயகனும் நாயகியும் எப்படி இந்த அமானுஷ்ய சூழலுக்குள் வருகிறார்கள், அந்தப் பெண்ணின் சாபம் என்னவானது என்பதே மீதிக்கதை.
நிஜ வாழ்வில், ஒரு சாலை விபத்திலிருந்து உயிர் பிழைத்து வந்து, சாய் தரம் தேஜ் நடித்திருக்கும் படம் இது. வழக்கமான தெலுங்கு ஹீரோயிஸம் பெரிதும் இல்லாத, அதே சமயம் கதையோடு இருக்கும் நாயக பிம்பத்தை யதார்த்தமாகக் காட்சிப்படுத்தும் பாத்திரம் அவருக்கு. பாடலுக்கும் ஒரு சில காட்சிகளுக்கும் மட்டும் வந்து போகாமல் சம்யுக்தாவுக்கு நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார்கள். சொல்லப்போனால், இது மொத்தமாகவே அவருடைய படம்தான். தன் பங்கைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்.
கார்த்திக் தண்டு எழுதிய சுவாரஸ்யமான ஹாரர் கதையை மேலும் சுவாரஸ்யமாக்கி நமக்கு த்ரில் அனுபவம் தருகிறது சுகுமாரின் திரைக்கதை. அடுத்தடுத்து நிகழும் மரணங்களைக் கோத்திருக்கும் விதம் சிறப்பு! அமானுஷ்ய நிகழ்வுகளுக்குக் காரணம் யார், எப்படி அவர் அதை நிகழ்த்துகிறார் என்பதை எதிர்பாரா ட்விஸ்டுடன் நகர்த்தச் செல்கிறது திரைக்கதை.
இருளை இருளாகவே காட்டி ஒளிப்பதிவில் உண்மைத்தன்மையைக் கொடுத்திருக்கிறார் ஷாம்தத் சைனுதீன். ஹாரர் படமென்றால் எடிட்டிங்கும் பின்னணி இசையும்தான் ஹீரோ. அந்த வகையில் நவீன் நூலியின் எடிட்டிங் ஆங்காங்கே நம்மைப் பயமுறுத்துகிறது. ‘காந்தாரா’வில் கலக்கிய அஜினீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை, இதில் இன்னும் திகிலூட்டியிருந்தால் மேலும் நல்ல அனுபவமாக இருந்திருக்கும். படத்தின் தொடக்கத்தில் நடக்கும் குழந்தைகளின் மரணம் எப்படி முடிவுக்கு வந்தது என்பதைச் சொல்லவில்லை. திரைக்கதை சுவாரஸ்யமாகவே இருந்தாலும் சில பல லாஜிக் பிழைகளும் இருக்கவே செய்கின்றன. தன் காதலி அமானுஷ்ய சக்தியால் மாட்டிக்கொண்டு வேறொரு நபராக இருக்கும்போது, ஹீரோ பேசும் காதல் வசனங்கள் ‘அட போங்கப்பா’ எனச் சொல்லவைக்கின்றன.