விஜயானந்த் திரை விமர்சனம்
அப்பா வழியாகக் கற்றுக்கொண்ட அச்சகத் தொழிலை நம்பிக்கொண்டிருக்காமல், லாரி வாங்கி, அதைத் தானே ஓட்டி ‘லாஜிஸ்டிக்’ தொழிலில் வெற்றிபெற்ற முன்னோடித் தொழிலதிபர் கர்நாடகாவைச் சேர்ந்த விஜய் சங்கேஸ்வர். ஒருலாரியுடன் தொடங்கி, அதை ஐயாயிரமாக வளர்த்தெடுத்து தனியொரு தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய அவரது தொழில் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்கள்தான் இதன் கதை.
அதை கமர்சியல் அம்சங்கள் கலந்த சுயசரிதைப் படமாகக் கொடுத்திருக்கிறார் திரைக்கதையை எழுதி, இயக்கியிருக்கும் ரிஷிகா சர்மா.
காலால் பெடல் மிதித்து அச்சிடும் ஒரேயொரு இயந்திரத்தை வைத்துக்கொண்டு தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் விஜய் சங்கேஸ்வரின் அப்பா. அவரை சாமர்த்தியமாகச் சம்மதிக்க வைக்கும் விஜய், ‘விக்டோரியா’ என்கிற தானியியங்கி அச்சு இயந்திரத்தை ரூ.80 ஆயிரம் கடனுக்கு வாங்கி வந்து தொழிலை மேலும் லாபகரமாக மாற்றும் தொடக்கக் காட்சியுடன் ஈர்க்கிறது படம்.
அப்பாவின் எதிர்ப்பை மீறி, லாரி போக்குவரத்துத் தொழிலில் குதிக்கும் விஜய், வாடிக்கையாளர்களைப் பிடிக்க கோகாக் சந்தையில் தனது ஒற்றை லாரியுடன் பல நாட்கள் காத்திருப்பது, அங்குள்ள மார்கெட்டில் ஏற்கெனவே கோலோச்சும் ஆட்களுடன் மல்லுக்கட்டி முதல் சவாரியைப் பிடிப்பது எனதொழில் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் எடுக்கும் துணிச்சலான முடிவுகளும் எதிர்கொள்ளும் நஷ்டங்களும் என நகரும் கதையில், தொழில் போட்டியாளர்களே எதிரிகள். ஆனால், அவர்களை உப்புக்குச் சப்பாணியாகச் சித்தரித்து இரண்டாம் பாதியை உப்புச் சப்பில்லாமல் ஆக்கிவிட்டார் இயக்குநர்.
இதுபோன்ற பயோபிக் படங்களில்,சம்மந்தப்பட்ட கதாநாயகனின்தேர்ந்தெடுத்த வாழ்க்கைச் சம்பவங்களைச் சுவாரஸ்யமாக மாற்றாமல் போனால், படம் தட்டையாகவும், பார்வையாளர்களுடன் தொடர்பு கொள்ளமுடியாமலும் போய்விடும். அந்தப் பரிதாபம் ‘விஜயானந்’துக்கு நேர்ந்துவிட்டது.
விஜய் சங்கேஸ்வராக நடித்திருக்கும் நிஹால், அவர் அப்பா பி.ஜி.சங்கேஸ்வராக நடித்திருக்கும் ஆனந்த் நாக் ஆகியோருடன் துணைக் கதாபாத்திரங்களில் வருபவர்களும் அளவாக நடித்து ஈர்க்கிறார்கள். ஒளிப்பதிவு, இசை போன்ற தொழில்நுட்ப அம்சங்களிலும் குறையில்லை. தொழிலில் வெல்வதற்குத் துணிவு, தன்னம்பிக்கை, நேர்மை போதும் என்பதை சொல்லும் படத்தில் இன்னும் சுவாரஸ்யம் கூட்டியிருந்தால் விஜயானந்த் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் முக்கிய பயோபிக்காக மாறியிருக்கும்.
Story
Acting