தீர்க்கதரிசி விமர்சனம்
இரட்டை இயக்குநர்கள் பி.ஜி.மோகன்- எல்.ஆர்.சுந்தரபாண்டி இணைந்து இயக்கி இருக்கும் தீர்க்கதரிசி படத்தில் நடிகர்கள் சத்யராஜ், அஜ்மல், ஜெயதுஷ்யந்த், ஜெய்வந்த், ஸ்ரீமன், தேவதர்ஷினி, பூர்ணிமா பாக்யராஜ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பெண் ஒருவர் உயிரிழக்கப்போவதாக மர்ம நபரிடமிருந்து அழைப்பு வருகிறது. அதனை பிராங்க் கால் என போலீசார் நினைக்கும் நிலையில் நிஜமாகவே அப்படி ஒரு சம்பவம் நடக்கிறது. உடனடியாக விசாரணை அதிகாரிகளாக ஜெயதுஷ்யந்த், ஜெய்வந்த் நியமிக்கப்பட, அடுத்ததாக ஒரு விபத்து நிகழ்கிறது. இதனால் வழக்கு போலீஸ் உயரதிகாரியான அஜ்மலிடம் ஒப்படைக்கப்படுகிறது. எவ்வளவு விசாரணை செய்தும் மர்ம நபரால் முன்கூட்டியே சொல்லப்படும் அடுத்தடுத்து நிகழும் அசம்பாவிதங்களை அஜ்மல் குழுவினர் துப்பறிய முடியாமல் திணறுகின்றனர். மக்கள் மர்ம நபரை தீர்க்கதரிசி என அழைக்கின்றனர். உண்மையிலேயே தீர்க்கதரிசி யார்? அவருக்கும் நடக்கும் அசம்பாவிதங்களுக்கும் என்ன சம்பந்தம்? என்பதை க்ரைம் த்ரில்லர் பாணியில் விவரிக்கிறது படம்.
முதலில் கடமைமிக்க காவல்துறை அதிகாரியாக வந்து கிளைமேக்ஸில் வேறொரு முகத்தை காட்டும் அஜ்மலின் கேரக்டர் சற்று எதிர்பாராத நிகழ்வாக உள்ளது. கடைசி 15 நிமிடங்கள் எண்ட்ரீ கொடுக்கும் சத்யராஜ், சில காட்சிகள் வரும் பூர்ணிமா பாக்யராஜ், நம்பும்படியாக இல்லாவிட்டாலும் தனி ஆளாக கதையின் ட்விஸ்டை வெளிக்கொணரும் ஸ்ரீமன், ஜெயதுஷ்யந்த், ஜெய்வந்த் என படத்தின் மெயின் கேரக்டர்கள் கவனிக்க வைக்கின்றனர். ஹீரோயினே இல்லாத படம் என்பது கடைசி வரை தெரியாமல் கதையை கொண்டு சென்றுள்ளது கவனிக்கத்தகுந்த விஷயம்.
க்ரைம் த்ரில்லருக்கு ஏற்ற கதை தான். பொதுவாக இப்படிப்பட்ட கதைகளில் எப்படி அந்த கதையின் முடிச்சு அவிழ்க்கப்படுகிறது என்பதில் தான் சுவாரஸ்யம் உள்ளது. முதல் பாதி எந்த அளவுக்கு விறுவிறுப்பாக சென்றதோ, இரண்டாம் பாதி ஜவ்வாக இழுப்பது போல தோன்றுகிறது. அதேபோல் 2 மணி நேர படத்தில் கிட்டதட்ட கடைசி 15 நிமிடங்கள் தவிர மீதமுள்ள நேரங்கள் கொலைகளும், போலீஸ் விசாரணையும் தான் வந்து கொண்டிருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது.