திருப்பங்களால் விறுவிறுப்பாக சுழலும் “சுழல்”
கோவைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் சிமென்ட் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது. போராட்டம் நடந்த மறுநாள் தொழிற்சாலைக்கு தீ வைக்கப்படுகிறது. தொழிலாளர் சங்கத் தலைவரான சண்முகத்தின் மகள் காணாமல் போகிறார்.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக அந்த ஊரின் காவல் ஆய்வாளர் ஸ்ரீயா ரெட்டி உதவி காவல் ஆய்வாளர் கதிர் விசாரணையை தொடங்குகிறார்கள். இந்த விசாரணை சில திருப்பங்கள், பல குழப்பங்கள் என நீண்டு செல்ல, இதற்கெல்லாம் யார் காரணம்? ஏன் நடந்தது? என கேள்விகளுக்கு விடை சொல்கிறது ‘சுழல்’ தொடர். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த இணையத் தொடர் 8 எபிசோட்களை கொண்டது. ‘விக்ரம்- வேதா’ புகழ் புஷ்கர் – காயத்ரி திரைக்கதை எழுத, பிரம்மா மற்றும் அனுசரண் இருவரும் இந்த தொடரை இயக்கியிருக்கிறார்கள்.
காவல் ஆய்வாளர் ரெஜினா தாமஸாக ஸ்ரீயா ரெட்டி. காவல் அதிகாரியாகவும், தாயாக பாசத்துடனும், மனைவியாகவும் கவனம் பெறுகிறார். அழுகை, சிரிப்பு, கோபம், என அனைத்து உணர்ச்சிகளையும் கச்சிதமாக கடத்துகிறார். கதிர். கதைக்கு தேவையான சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். யூனியர் லீடராக, அப்பாவாக, கண்ணாடியை மாட்டிக்கொண்டு அழுத்தமான நடிப்பால் ஈர்க்கிறார் பார்த்திபன்.
நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு இயல்பாக இருந்தது. கோபிகா ரமேஷின் நடிப்பு அந்த கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தி போகிறது. ஹரீஷ் உத்தமன், இளங்கோ குமாரவேல், லதா ராவ், பிரசன்னா பாலச்சந்திரன், சந்தான பாரதி, நடிப்பு கதையோட்டத்திற்கு பலம் சேர்க்கிறது.
‘சுழல்’ வெப் சீரிஸை பல திருப்பங்களுடன் தன் எழுத்தில் சுழல விட்டிருக்கிறார்கள் புஷ்கர் – காயத்ரி. கதையை இழுத்துச் சென்ற விதம், ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கும் விதம், தொடரை தொடர்ந்து பார்க்க தூண்டுகிறது. குல தெய்வ வழிபாடுடன் கதையை பொருத்தி கொண்டு சென்ற விதம் ரசிக்க வைத்தது.கதையில் திருநங்கைகள் மீதான பார்வையும் மாற்ற முயற்சித்திருக்கிறார்கள். ஓர் அவலத்தை அழுத்தமான த்ரில்லர் கதையின் மூலம் சொல்லும் படம் ‘சுழல்’.