சத்திய சோதனை விமர்சனம்
தங்க நகைகளை விரும்பும் ஒரு அதிகாரம் படைத்த கிராமத்து நபர் கொலை செய்யப்படுவதுடன் படம் துவங்குகிறது. தன் காதலியை திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஹீரோ பிரதீப்(பிரேம்ஜி) அந்த கொலை செய்யப்பட்ட நபரின் உடலை பார்க்கிறார். பதட்டம் அடையாமல் உடலை ஒரு ஓரமாக இழுத்து வைத்துவிட்டு அதில் இருந்த தங்க நகைகளை எடுக்கிறார்.
அந்த நகைகளை அருகில் உள்ள அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்க செல்கிறார். ஆனால் பிரதீப் சொல்வதை நம்பாத போலீசார் அவரை கஸ்டடியில் எடுக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் போலீசாரின் வாக்கி டாக்கியுடன் காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடுகிறார் பிரதீப். அதன் பிறகு நடப்பவற்றை பயங்கர காமெடியாக காட்டியிருக்கிறார்கள். மேலும் கொலைக்கு காரணமான நபர் யார் என்பதும் தெரிய வருகிறது.
சத்திய சோதனை படம் மூலம் நம்மை எல்லாம் சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் சுரேஷ் சங்கையா. பிரதீப் தான் ஹீரோ என காட்டியிருந்தாலும், போலீஸ் கான்ஸ்டபிள் குபேரன்(சித்தன் மோகன்) அனைவரையும் கவர்கிறார்.
சித்தன் மோகன் வசனம் பேசும் விதம் தியேட்டரில் இருப்பவர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் பெறுகிறது. சமூக வலைதளத்தில் தொடர்ந்து விளாசப்படும் பிரபல மூத்த பாடலாசிரியரை கலாய்த்திருக்கிறார் குபேரன்.
அப்பாவி மற்றும் நேர்மையானவராக வரும் பிரேம்ஜி அமரனின் கதாபாத்திரம் வாழ்க்கை பற்றி எதுவும் தெரியாதவராக காண்பிக்கப்பட்டிருக்கிறது. இது படத்திற்கு பிளஸ்ஸாகவும், மைனஸாகவும் அமைந்துவிடுகிறது.
பிரேம்ஜி அமரன், சித்தன் மோகனை தவிர வேறு யாருக்கும் நடிக்க வாய்ப்பு இல்லை. ஹீரோயின் பெயருக்கு இருக்கிறார். அவர் இல்லாவிட்டாலும் படத்தில் பாதிப்பு இருக்காது.
இரண்டாம் பாதியில் வரும் மூதாட்டி கதாபாத்திரம் சர்பிரைஸாக இருக்கிறது. சத்திய சோதனை முழுவதுமாக இல்லாமல் ஆங்காங்கே நம்மை கவர்கிறது.