சர்தார் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சர்தார் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படம் சொல்லும் கருத்து என்ன என்பதை பார்க்கலாம்.
இரும்புத்திரை படத்தில் டிஜிட்டல் மோசடி குறித்து படமாக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்திய பி.எஸ்.மித்ரன், சர்தார் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் கார்த்தியுடன், லைலா, ராஷி கண்ணா, ரெஜிஷா விஜயன், ராமதாஸ், சிறுவன் ரித்விக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தண்ணீரை வியாபாரமாக பார்க்காமல், ஆதாரமாக பார்க்க வேண்டும் என்பதை சர்தாரில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.தண்ணீர் முதலாளித்துவ கட்டுப்பாடில் சென்றால் என்னவாகும்? அதனால் ஏற்படக்கூடிய ஆபத்து மற்றும் விளைவுகள் என்னென்ன? பாட்டில் தண்ணீரால் கேன்சர் உள்ளிட்ட கொடூர நோய்கள் உருவாகுமா? இந்த கதைக்கும் இந்திய உளவாளிக்கும் இருக்கும் தொடர்பு என்ன? என்பதை விறு விறுப்பான திரைக்கதையில் கூறியுள்ளார் பி.எஸ்.மித்ரன்.
இந்தப் படத்தில் அப்பா – மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்திருக்கிறார்.முதல் பாதியில் சர்தார் யார்? தண்ணீரால் ஏற்படும் பாதிப்பு என்ன என்பதை மிக நேர்த்தியாக படமாக்கியுள்ளார் இயக்குனர். குறிப்பாக, பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவரிக்கும் காட்சிகள் பயத்தை ஏற்படுத்துகின்றன. முதல்பாதி முடிந்தவுடன் இடைவேளையில், பாட்டில் தண்ணீர் குடிப்பவர்களை பார்க்கும் போது படத்தின் காட்சிகள் நினைவுக்கு வருகின்றன.
இரண்டாம் பாதியில் போஸ் என்ற நாடக கலைஞன், சர்தார் என்ற மிகச்சிறந்த உளவாளியாக எப்படி மாறினான். அவனுக்கும், நாட்டுக்கும் நடந்த சதி ஆகியவை இடம்பெற்றுகிறது. அவை காட்சிகளாக ரசிக்க வைத்தாலும், நீண்ட நேரம் செல்கிறதோ என்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது.
இரும்புத்திரை போலவே இந்தப் படத்திலும் ஏராளமான Detailing காட்சிகள் உள்ளன. அதற்காக பி.எஸ்.மித்ரன் மிகவும் மெனக்கெட்டுள்ளார். அதற்கு பலன் திரையில் தெரிகின்றன.
தண்ணீர் நிறுவனங்களை நேரடியாக விமர்சித்துள்ளனர். இதனால் படம் முடிந்து வெளியே வரும்போது, கேன் மற்றும் பாட்டில் தண்ணீரை இனி வாங்கலாமா என யோசிக்க வைக்கும். படத்தில் சில குறைகள் இருந்தாலும் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் அவற்றை மறக்கடிக்கிறது. கைதி தீபாவளியை போல சர்தார் தீபாவளியும் கார்த்திக்கு சிறப்பாகவே அமைந்துள்ளது.
Acting
Direction