சலார் விமர்சனம்
கே ஜி எஃப் திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் பிரசாந்த் நீல். இவரது இயக்கத்தில், நடிகர் பிரபாஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து, இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் சலார்.
ஸ்ருதி ஹாசனை எதிரி கும்பலிடம் இருந்து காப்பாற்ற, அவரை பிரபாஸிடம் அனுப்பி வைக்கிறார் கோபி. கோபி சொன்ன வார்த்தைக்காக, அம்மாவின் எதிர்ப்பையும் மீறி ஸ்ருதியை தன்னுடைய வீட்டிலேயே தங்க வைக்கிறார் பிரபாஸ்.
அம்மா வாங்கிய சத்தியத்திற்காக வன்முறையே வேண்டாம் என்று ஒதுங்கி, ஓடி வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபாசஸுக்கு அவரை சீண்டும் விதமாக, சீண்டல்கள் வருகின்றன. ஆனால் அவை அனைத்தையும் பொறுத்துக் கொண்டு, நகர்ந்து கொண்டு இருக்கிறார் பிரபாஸ். ஒரு கட்டத்தில், ஸ்ருதிக்கு ஆபத்து நெருங்க, பிரபாஸிடம் வாங்கிய சத்தியத்தை அம்மா திரும்பி வாங்க, காட்டு மிருகமாய் சீறி பாய்கிறது பிரபாஸின் வன்முறை வெறியாட்டம்.
அந்த கோபத்திற்கு பின்னால் இருக்கும் பிருத்வி ராஜூக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? அம்மா பிரபாஸிடம் வாங்கிய சத்தியத்திற்கு காரணம் என்ன? இதற்கு பின்னணியில் இருக்கும் கான்சார் எனும் சாம்ராஜ்யம் உருவானது எப்படி? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே சலார் படத்தின் கதை!
வன்முறையின் மொத்த உருவமாய் கதாநாயகன் பிரபாஸ். ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் செய்திருக்கும் அவர், எமோஷன் சம்பந்தமான காட்சிகளில் திணறுகிறார். ஸ்ருதி ஹாசன் கதாபாத்திரத்தில் அவ்வளவு ஆழம் இருந்தது. அவரும் அதற்கு நியாயம் செய்திருக்கிறார்.
பிரபாஸின் நண்பனாக நடித்து இருக்கும் பிருத்விராஜ் நடிப்பில் ‘யான் மலையாள சேட்டன்’ என்பதை நிரூபித்து இருக்கிறார்.பிரபாஸின் அம்மாவாக நடித்து இருக்கும் ஈஸ்வரியின் நடிப்பும், அவர் பேசும் வசனங்களும் கூஸ் பம்ஸ் ரகம்.
உண்மையில் இந்த படத்தில் அவ்வளவு பெரிய நட்சத்திரங்கள் இருந்தும், துருவ நட்சத்திரமாக ஜொலிப்பது பிரசாந்த் நீலின் எழுத்தும் திரைக்கதையும் தான். சில காட்சிகள் கிரிஞ்- ஆக தெரிந்தாலும், அதனை தன்னுடைய திரைக்கதையின் மூலம் புல்லரிக்க வைத்திருக்கிறார் பிரசாந்த்!
முதல் பாதியை கதையை விவரிக்க எடுத்துக்கொண்ட பிரசாந்த், இரண்டாம் பாதியில் தன்னுடைய ருத்ர தாண்டவத்தை நிகழ்த்துகிறார். இரண்டாம் பாதியில் கதையை விவரிக்க, அவர் கையில் எடுத்த திரைக்கதை வடிவம், புருவங்களை உயர்த்த வைக்கிறது. காரணம், கதையின் அடர்த்தி அப்படி! ஒரு கதைக்குள், ஒரு கதை, அந்தக்கதைக்குள் மற்றொரு கதை.. என படத்திற்கு அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்று இருக்கிறார். கிராஃபிக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருந்தன. ரவி இசை நம் அதிதி எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வில்லை. புவனின் கேமரா மிரட்டி இருக்கிறது.
படத்தின் பலம் என்னவென்றால் அது சண்டைக் காட்சிகள்தான். பாகுபலி படத்தில் வாள் வீசி சண்டை செய்த பிரபாஸ் இந்த படத்தில் கத்தி, கோடாரி, வாள் என தனது கையில் கிடைக்கும் அனைத்து ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு தன்னை எதிர்த்து வரும் அனைத்து எதிரிகளையும் துவம்சம் செய்கின்றார். ரத்தம் தெறிக்க தெறிக்க பிரபாஸ் சண்டை செய்யும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கின்றன.
படத்தின் பின்னணி இசை சிறப்பாக இருந்தாலும், பிரபாஸ் பில்டப் காட்சிகளுக்கு வரும் தீம் மியூசிக் சுத்தமாக எடுபடவில்லை. ஒரு சில காட்சிகள் கே.ஜி.எஃப் படத்தினை நியாபகப்படுத்தினால் ஒரு சில காட்சிகள் பாகுபலியை நினைவூட்டுகின்றது. பில்டப் காட்சிகளை மட்டும் குறைத்திருந்தால் சலார் திருப்தி அளிக்கும் ஆக்ஷன் படமாக இருந்திருக்கும்.