ரன் பேபி ரன் விமர்சனம்
ஆர்.ஜே.பாலாஜியின் வேறுபட்ட நடிப்பில், வெளியான ரன் பேபி ரன் படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்.
இஷா தல்வாருடன் கல்யாணம் ஆக போகும் நிலையில் சத்யாவிடம் (ஆர்.ஜே.பாலாஜி), ரவுடிகளிடம் இருந்து தப்பித்த தாரா (ஐஸ்வர்யா ராஜேஷ்) தன்னை காப்பற்றி கொள்ள தஞ்சம் புகுகிறார். இரக்கப்பட்டு காப்பாத்தும் கதாநாயகனின் வாழ்க்கையில் பல ட்விஸ்டுகள் நடக்கின்றன. ஐஸ்வர்யா ராஜேஷின் பின்னணி என்ன என்பதும், இந்த பிரச்சினையில் சிக்கிக்கொள்ளும் ஆர்.ஜே.பாலாஜி தன் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே மீதி கதை.
பேங்கில் வேலை செய்யும் ஊழியரான ஆர்.ஜே.பாலாஜி, போலீஸ் செய்ய வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் ஒரே ஆளாக கையாள்கிறார். படக்கதையின் தொடக்கத்தில் உண்டான மர்மமுடிச்சுகளை, இரண்டாம் பாகம் ஒவ்வொன்றாக அவிழ்க்கிறது. ஹீரோ மற்றும் வில்லனின் கதாபாத்திரங்களை இன்னும் கூட சற்று நன்றாக எழுதி இருக்கலாம். அந்த அளவுக்கு திரைக்கதையில் ஏகப்பட்ட சொதப்பல்கள். படத்தில் பல எதிர்பாராத திருப்பங்கள் இருப்பது மட்டுமே படத்தின் பிளஸ் ஆக அமைந்துள்ளது. ஆனால் இயக்குநர் சொல்ல வந்த மெடிக்கல் காலேஜ் மாஃபியா கதை, அனைவரையும் சென்றடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கதாநாயகனின் அம்மாவாக ராதிகாவும், அவரை திருமணம் செய்து கொள்ளப்போகும் இஷா தல்வாரும், நண்பனுக்கு துணையாக இருக்கும் விவேக் பிரசன்னாவும், படத்தின் முதல் சீனில் வந்து போகும் ஸ்மிருதி வெங்கட்டும், பாதிரியராக ஹரீஷ் பேரடி மற்றும் பகவதி பெருமாள் ஆகியோரும் துணை கதாபாத்திரங்களுக்கான நியாயமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
மிகவும் கலகலப்பாக எப்போதும் பேசிக் கொண்டே இருக்கும் ஆர்.ஜே பாலாஜி இந்த படம் முழுக்க ஒரு இடத்தில் கூட சிரிக்காமலும், அதிகமான டயலாக்குகள் இல்லாமலும் நடித்துள்ளார். இப்படி ஒரு சவாலான கதாபாத்திரத்தில் ஏற்று நடித்ததற்கு அவருக்கு தனி பாராட்டுக்கள். மற்ற படங்களை காட்டிலும் ஒரு நடிகனாக இந்த படத்தில் கற்று தேர்ந்து உள்ளார். சில முக்கியமான காட்சிகளில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ஆர் ஜே பாலாஜி. சண்டை காட்சிகளையும் இந்த படத்தில் ட்ரை செய்து உள்ளார். சிறிய கதாபாத்திரத்தில் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். வழக்கம்போல எமோஷனல் காட்சிகளில் சிறப்பாகவே நடித்துள்ளார்.
ஜியென் கிருஷ்ணகுமார் ஒரு சிறப்பான படத்தை கொடுத்துள்ளார். முதல் பாதி முழுக்க அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற பரபரப்பு நம்முள் ஏற்படுகிறது, அதற்கு முக்கிய காரணம் ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை தான். இப்படி ஒரு சீரியசான படத்திற்கு சிறந்த ஒரு பின்னணி இசையை கொடுத்துள்ளார் சாம் சிஎஸ். பல இடங்களில் அவரது இசை அந்த காட்சிகளை மெருகேற்றி செல்கிறது. யுவா சிறப்பாக காட்சிகளை படமாக்கி உள்ளார். ஆரம்பத்தில் இருந்து படம் முடியும் வரை பரபரப்பு இருந்து கொண்டே செல்கிறது. யார் இதனை செய்தார்கள் என்று யூகிக்க முடியாத அளவிற்கு திரைக்கதை படு பயங்கரமாக உள்ளது. படத்தின் சில காட்சிகள் கொஞ்சம் பலசாக இருந்தாலும் படம் செல்லும் வேகத்தில் அவை பெரிதாக உறுத்தவில்லை. படத்தின் இறுதியில் சொல்ல வரும் கருத்தும் பாராட்டுக்குரியது. தேவையில்லாத பாடல்கள், தேவையில்லாத காட்சிகள் என எதுவும் இல்லாமல் கதைக்கு ஏற்றவாறு படத்தை எடுத்துள்ளனர். காமெடி நடிகரை வைத்து ஒரு சீரியசான படத்தை எடுத்துள்ள பட குழுவினருக்கு பாராட்டுக்கள். ரன் பேபி ரன் – நிற்காமல் ஓடும்.
Direction
Acting