கடிதத்திற்கு 1 லட்சம் விஜய் சேதுபதியை புகழ்ந்த தயாரிப்பாளர்…
கோலிவுட், பாலிவுட் என கலக்கிவருகிறார் விஜய் சேதுபதி. அவரது நடிப்பில் கடைசியாக ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் வெளியானது. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் தமிழில் மகாராஜா படம் வெளியாகிறது. இந்தப் படம் விஜய் சேதுபதிக்கு 50ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் விஜய் சேதுபதியை புகழ்ந்து பேசியிருக்கு தயாரிப்பாளர் கே.ராஜன். அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தலை காட்டி ஹீரோவாக வளர்ந்தவர் விஜய் சேதுபதி. அவர் முதன்முதலில் நடித்த தென்மேற்கு பருவக்காற்று படத்தில் தன்னுடைய நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும் தமிழ் சினிமாவில் பெரும் ரவுண்டு வருவார் என்றும் பலரால் கணிக்கப்பட்டார். அதற்கேற்றபடிதான் விஜய் சேதுபதியின் கிராஃப்பும் இருந்தது. அவர் நடித்த பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும், சூதுகவ்வும் ஆகிய படங்கள் வரிசையாக மெகா ஹிட்டாகின. இதனால் அத்தனை வருட உழைப்புக்கும் சேர்த்து வெற்றிகளை சுவைத்தார் சேது. முக்கியமாக ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய நடிப்பு, டயலாக் டெலிவரி என அனைத்தையும் மாற்றி ஒரு மிகச்சிறந்த நடிகன் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார்.இடையில் சில சறுக்கல்களை சந்தித்த விஜய் சேதுபதி கதை என்ன கேட்டாலும் அதற்காக எது வேண்டுமானாலும் செய்வேன் என்ற நிலைக்கு நகர்ந்தார். பொதுவாக ஒருவர் ஹீரோவாக ஹிட் கொடுத்துவிட்டால் அந்த இடத்திலிருந்து நகர மறுப்பார்கள். ஆனால் விஜய் சேதுபதியோ அப்படி இல்லை. ஹீரோவாக பீக்கில் இருந்தபோதே பேட்ட, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் வில்லனாகவும் கலக்கினார். ஹிந்தியில் என்ட்ரி: அதேபோல் தமிழில் கலக்கிக்கொண்டிருந்த விஜய் சேதுபதி ஹிந்தியிலும் நுழைந்திருக்கிறார். அவரது நடிப்பில் வெளியான ஃபர்ஸி வெப் சீரிஸ் பெரும் வெற்றி பெற்றது. அதேபோல் மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்த அவர் கடைசியாக ஹிந்தியில் ஜவான் படத்தில் வில்லனாகவும், மெரி கிறிஸ்துமஸ் படத்தில் முக்கியமான ரோலில் நடித்தார்.விஜய் சேதுபதி தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் இருந்தால் வில்லனாகவும் நடித்துவந்தார். ஆனால் அவரது ரசிகர்களோ விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தனர். அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, மீண்டும் இனி ஹீரோவாக நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். அந்தவகையில் அவர் இப்போது நித்திலன் இயக்கத்தில் மகாராஜா படத்தில் நடித்திருக்கிறார். இது அவருக்கு 50ஆவது படமாகும். படம் வரும் 14ஆம் தேதி வெளியாகிறது. அதேபோல் மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் படத்திலும் நடித்துவருகிறார். ராஜன் பேட்டி: இதற்கிடையே விஜய் சேதுபதி ஏராளமான உதவிகளை சத்தமே இல்லாமல் செய்துவருபவர். போண்டா மணி உள்ளிட்டோருக்கு அவர் உதவிகளை செய்திருக்கிறார். இந்த நிலையில் தயாரிப்பாளர் ராஜன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “விஜய் சேதுபதி ஒரு தங்கமான மனிதர். தர்ம சிந்தனை கொண்டவர் அவர். தயாரிப்பாளர் சங்கம் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாக அவருக்கு ஒரே ஒரு கடிதம்தான் எழுதினேன். அந்தக் கடிதத்தை அவர் பார்த்தவுடனேயே ஆன்லைனில் ஒரு லட்சம் ரூபாயை அனுப்பிவிட்டார்” என்றார்.