பொன்னியின் செல்வன் 2 விமர்சனம்
இலங்கையில் இருந்து தஞ்சை வரும் வழியில் அருண்மொழி வர்மனான பொன்னியின் செல்வனும் (ஜெயம் ரவி), வந்தியத்தேவனும் (கார்த்தி) கடலில் மூழ்க, ஊமை ராணியின் ஆச்சரிய அறிமுகத்துடன் முதல்பாகத்தை முடித்திருப்பார் இயக்குநர் மணிரத்னம்.
இரண்டாம் பாகத்தில், பொன்னியின் செல்வனை ஊமை ராணி காப்பாற்றுகிறார். இன்னொரு பக்கம் சோழர் குலத்தை அழிக்க பாண்டிய ஆபத்துதவிகளோடு இணைந்து சூழ்ச்சியில் இறங்குகிறார் நந்தினி (ஐஸ்வர்யா ராய்). அச்சூழ்ச்சி அறிந்தும் நந்தினியைத் தேடிச் செல்லும் ஆதித்த கரிகாலன் (விக்ரம்), கொல்லப்படுகிறார். அவரைக் கொன்றது யார்? வந்தியதேவன் மீது குந்தவை (த்ரிஷா) கொண்ட காதல் என்னவானது? உண்மையில் நந்தினி யார்? பொன்னியின் செல்வனைக் காப்பாற்றிய ஊமை ராணி யார்? என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.
கேரக்டர் அறிமுகம் என்கிற அளவில் பெரும் பிரம்மாண்டம் காட்டியிருந்தது முதல் பாகம். இரண்டாம் பாகம், அழுத்தமானக் கதையை ஆழமாகக் கொண்டிருப்பதால் அதற்கான, மணிரத்னம் டீமின் மெனக்கெடலையும் நடிகர், நடிகைகளின் உழைப்பையும் மொத்தமாகத் தாங்கி நிற்கிறது படம்.
விரிவாகவும் நிதானமாகவும் கதை சொல்லலாம் என்ற தீர்மானத்துடன் மணிரத்னம், ஜெயமோகன், இளங்கோ குமரவேல் கூட்டணி திரைக்கதை அமைத்திருப்பதாகத் தெரிகிறது. இதனால் சில இடங்களில் மெதுவாக நகரும் உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. இருந்தாலும் கதையையும் கதாபாத்திர உணர்வுகளையும் பார்வையாளர்கள் முழுமையாக உள்வாங்க வேண்டும் என்பதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் பாராட்டுக்குரியது.
நாவலில் தகவல்களாக மட்டுமே சொல்லப்படும் ஆதித்த கரிகாலனுக்கும் நந்தினிக்கும் இடையிலான பதின்பருவக் காதலை, அழகான காட்சிகளாக்கி படத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். சோழர் குலத்தைப் பழிவாங்குவதில் நந்தினிக்கு இருக்கும் வன்மமும், பிற்பகுதியில் கடம்பூர் அரண்மனையில் ஆதித்த கரிகாலனுக்கும், நந்தினிக்கும் இடையிலான உணர்ச்சிப் பரிமாற்றம் வலுவானத் தாக்கம் செலுத்துவதற்கும் இக்காட்சிகள் உதவியிருக்கின்றன.
வந்தியத்தேவன் – குந்தவை காதல் காட்சிகள் மணிரத்னத்தின் இளமை, துளியும் குறையவில்லை என்பதை அழகாக உணர்த்துகின்றன. வந்தியத்தேவன் சிறைபிடிக்கப்பட்டு கண்ணைக் கட்டி வைத்திருக்கும்போது, குந்தவை சந்திக்கும் காட்சியும் அதைத் தொடர்ந்து வரும் ‘அக நக’ பாடலும் மிகச்சிறந்த காதல் காட்சிகளில் ஒன்றாக இடம் பிடிக்கும். அது நிகழும் இடம், சூழல், கேமரா கோணம் என அனைத்தும் சிலிர்க்கும் அனுபவம்.
கல்கி கதையில் இல்லாத பல விஷயங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவர் சொல்லாமல் விட்ட தகவல்களை, சோழர் வரலாற்றுத் தகவல்களின் துணைகொண்டு நிரப்ப முயன்றிருக்கிறார்கள். கற்பனைக் காட்சிகளையும் சேர்த்திருக்கிறார்கள். கதையின் தொடர்ச்சி விடுபடாமல் இருப்பதற்கு இந்த உத்தியைப் பயன்படுத்தியிருப்பதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அப்படியே எதிர்பார்த்துச் செல்பவர்களுக்கு இந்த மாற்றங்கள் ஏமாற்றம் அளிக்கலாம்.
கதையில் கொஞ்சம் தொய்வை உணரும்போது வந்தியத்தேவன் – ஆழ்வார்க்கடியான் உரையாடல் வழியாக நகைச்சுவையைத் தூவியிருப்பதும் ஆதித்தகரிகாலன், அருண்மொழி வர்மன், நந்தினி ஆகியோரின் ஆளுமையை வெளிப்படுத்தும் மாஸ் காட்சிகளும் கைதட்டல்களைப் பெறுகின்றன. நாவலில் இல்லாத ராஷ்ட்ரகூடர்களுடனான இறுதிப் போர்க்காட்சி, ‘பாகுபலி’ பாதிப்பில் வைக்கப்பட்டிருப்பதாகவே உணர முடிகிறது. இறுதியில் யார் மணிமுடி ஏற்கிறார் என்பதையும் நாவலிலிருந்து சற்று மாறுபட்டும் வரலாற்றுக்கு நெருக்கமாகவும் அமைந்திருக்கிறார்கள்.
ஆதித்த கரிகாலனின் வீரத்தையும் விரக்தியையும் கண்களிலேயே அசாத்தியமாக வெளிப்படுத்தியிருக்கிறார் விக்ரம். நந்தினியுடன் உணர்ச்சிகரமான நீண்ட உரையாடலை நிகழ்த்தும் அந்தக் காட்சி, விக்ரம் தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் என்று உணர வைக்கிறது.
யாரையும் மயக்கிவிடும் நந்தினியின் அழகையும் மனதின் ஆழத்தில் அவள் தேக்கி வைத்திருக்கும் வன்மத்தையும் அதைத் தாண்டி அவளுக்குள் இருக்கும் காதலையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஐஸ்வர்யா ராய். கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஜெயராம், ரகுமான், சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஜெயமோகனின் வசனங்கள் கதைக்குப் பொருத்தமாக இருக்கின்றன. ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் அளவாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. முதல் பாகத்துக்கு மாறாக கூடுதல் இந்திய செவ்வியல் தன்மையுடன் அமைந்திருக்கிறது பின்னணி இசை. ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், கலை இயக்குநர் தோட்டா தரணி இருவரும் மணிரத்னத்தின் கனவை நனவாக்க இரு கரங்களாகச் செயல்பட்டிருக்கிறார்கள்.
மெதுவாக நகரும் இரண்டாம் பாதியை மட்டும் பொறுத்துக்கொண்டால் மிகச் சிறந்த காட்சி அனுபவத்துடன் கூடிய வரலாற்றுப் புனைவுத் திரைப்படத்தை ரசிக்கலாம். மணிரத்னத்தின் நெடிய திரைப்பயணத்தில் இந்தப் படம் மைல் கல் என்பதில் ஐயமில்லை.
Acting
Direction
Music