பருந்தாகுது ஊர் குருவி விமர்சனம்
கோ.தனபாலனின் இயக்கத்தில் நிஷாந்த் ரூசோ, காயத்ரி ஐயர் மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள படம் ‘பருந்தாகுது ஊர் குருவி’.
சின்ன சின்ன திருட்டுகள், அடிதடிகளை செய்து விட்டு, ‘பெட்டி கேஸ்’ அக்யூஸ்டாக ஊருக்குள் வலம் வருபவர் தான் ஆதி (நிஷாந்த் ரூசோ). இவர் ஒரு நாள் காவல் நிலையத்தில் இருக்கும் சமயத்தில், மிளகுக்காட்டில் யாரையோ வெட்டிப் போட்டிருப்பதாக போலீஸிற்கு உடனடியாக தகவல் வருகிறது.அந்த இடத்திற்கு வழிகாட்டச்சொல்லி, காவல் அதிகாரி போஸ் ஆதியை தாறுமாறாக இழுத்துக் கொண்டு செல்கிறார். அங்கே சென்றவுடன், ஆதியின் கையுடன் பிணத்தின் கையையும் கைவிலங்கு போட்டு பூட்டிவிட்டு போன் பேசிவிட்டு வரும்வரை, பிணத்தை பார்த்துக்கொள்ளுமாறு ஆதியிடம் கூறுகிறார் போலீஸ் அதிகாரி போஸ்.
இதனையடுத்து ஆதி, கைவிலங்கிலிருந்து தன்னை விடுவிக்க முயற்சிக்கையில், பிணமாக கிடந்த நபருக்கு இன்னும் உயிர் இருப்பதை அதன் மூலமாக தெரிந்து கொள்கிறார். அப்போது, அந்த நபரின் தொலைபேசிக்கு யாரோ ஒரு பெண் போன் செய்து, அவரை காப்பாற்றுமாறு ஆதியிடம் அழுது கெஞ்சுகிறார்.அந்த பெண்ணுடன் பேசியதன் மூலம், உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நபரின் பெயர் மாறன் என தெரிந்து கொள்கிறார், ஆதி. அதன் பின்னர் சிறிது நேரத்திற்குள் மீண்டும் இவர்கள் இருக்கும் இடத்தை தேடி கொலைகார கும்பல் வருகிறது.அந்தக் கும்பலிடமிருந்து ஆதி மாறனை காப்பாற்றினாரா? மாறனை காப்பாற்றுமாறு கெஞ்சும் அந்த பெண் யார்? மாறனை அந்த கும்பல் கொல்ல முயற்சிப்பது ஏன்? என்பது தான் படத்தின் மீதிக்கதை.