Now Reading
Pani Review

Pani Review

2018-ல் ஜோசப் என்ற க்ரைம் த்ரில்லர் படத்தின் மூலம் யதார்த்த நடிப்பால் மாநிலங்கள் தாண்டி கவனம் ஈர்த்தார். தமிழிலும் `ஜகமே தந்திரம்’ மூலம் அறிமுகமாகி மணிரத்னம்- கமல் காம்போவின் ‘தக்-லைஃப்’ படத்திலும், கார்த்திக் சுப்புராஜ்- சூர்யா காம்போவுடன் ஒரு படத்திலும் என பிஸியாக வலம் வரும் நடிகர். இவர் ‘பணி’ என்ற மலையாள படத்தை முதன்முறையாக இயக்கியிருக்கிறார்.

திருச்சூரில் பெயர்பெற்ற ‘மங்கலத்’ குடும்பத்தில் முக்கியமான ஒருவர்தான் கிரி (ஜோஜு ஜார்ஜ்). ரியல் எஸ்டேட் மற்றும் பில்டர்ஸ் தொழிலுடன், மாஃபியா சின்டிகேட் கேங்காவும் அவர் குடும்ப உறுப்பினர்கள் (பிரசாந்த் அலெக்சாண்டர், பாபி குரியன், சுஜித் சங்கர்) செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் கல்லூரி நண்பர்களாக இருந்து குடும்ப உறுப்பினர்களாக மாறியவர்களும் கூட. கிரிக்கு கௌரி(அபிநயா) என்ற அழகான மனைவியும் உண்டு. மனைவி மீது பேரன்பைப் பொழியும் கிரி, தங்கள் காதல் திருமண வாழ்க்கையை நீண்ட தேனிலவுபோலக்
கொண்டாடுபவரும்கூட!

இது இப்படியிருக்க அதே திருச்சூரில் இன்னொருபுறம் உள்ளும் புறமும் அழுக்கும் பிசுக்குமாய் இருக்கும் இரண்டு இளைஞர்கள் (சாகர் சூர்யா, ஜூனைஸ் வி.பி) இருக்கிறார்கள். மெக்கானிக்குகளாக இருக்கும் அவர்களுக்கு சீக்கிரமே நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை துளிர்விடுகிறது. அதற்காக முதல்முறை கூலிப்படையாக மாறி பட்டப்பகலில் ஜனநடமாட்டம் உள்ள நகரின் மையப்பகுதியில் ஒருவரைத் திட்டமிட்டுக் கொலை செய்கிறார்கள். இதனால் 10 லட்சம் ரூபாய் பணமும் கிடைக்க அந்த வாழ்க்கை அவர்களுக்குப் பிடித்துப்போகிறது. ஒருமுறை ரத்தம் பார்த்துவிட்டதால், மனதளவில் அடுத்த சம்பவத்தை நடத்தத் தயாராகும் நேரத்தில் ஒரு டிப்பார்ட்மென்ட் ஸ்டோரில் கிரியின் மனைவியிடம் சீண்டலில் ஈடுபட்டு கிரியிடம் செமத்தியாக அடிவாங்குகிறார்கள்.

பார்த்துப் பழகிய பழிவாங்கல் கதையை ஒரு கேங்ஸ்டர் பின்னணியில் விறுவிறுப்பாக சொல்லி கவனிக்க வைக்கிறார் ‘அறிமுக’ இயக்குநர் ஜோஜு ஜார்ஜ். படத்தின் ஆரம்பத்தில் சாலையில் நாம் சடுதியில் கடக்கும் சாதாரணமான தோற்றம் கொண்ட அந்த இரு இளைஞர்கள் அடுத்தடுத்து செய்யும் சைக்கோத்தனமான செயல்கள் மெல்ல மெல்ல காட்டப்பட்டு நமக்கு பதைபதைப்பை உண்டு பண்ணிவிடுகின்றன. கைகளில் ஒரு டானிக் பாட்டில், தாத்தா குடையோடு அவர்கள் செய்யும் க்ரைம் மெல்ல மெல்ல டேக்-ஆஃப் ஆகி, ஜோஜு ஜார்ஜுக்கும் சைக்கோ வில்லன்களுக்கும் நடக்கும் நேருக்கு நேர் மோதலாக உச்சம் பெறுமிடம் சீட் நுனிக்கு நம்மைத் தள்ளிவிடுகிறது. பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதிக்கும் அளவுக்கு படு மிரட்டலாக நடித்திருக்கிறார்கள் சாகரும் ஜூனைஸும். இந்த இரட்டையர்களின் சின்னச் சின்ன மேனரிஸங்கள், வசனங்கள் பயமுறுத்தவே செய்கின்றன.

பாலியல் தாக்குதலைக் காட்சிப்படுத்திய விதத்தில் நம்மை கொஞ்சம் நிலைகுலைய வைத்தாலும், பாதிக்கப்பட்ட பெண்ணே அதை அனாயசமாக ஒரு விபத்தைப் போலக் கடந்து, மீண்டு, இயல்புக்குத் திரும்புவதைப் பதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்க முயற்சி! சீமா, சாந்தினி ஶ்ரீதரன் போன்ற துணைக் கதாப்பாத்திரங்களை இயல்பாக உலாவ விட்டுருப்பதும் சிறப்பு. அதேபோல மாஃபியா சிண்டிகேட்டின் உள்வட்டத்தைவிட வெளிவட்டத்தில் இயங்கும் நிறைய மனிதர்களைப் பற்றிய குறிப்புகளை துறுத்தாமல் கதையின் போக்கிலேயே காட்டியிருப்பதும் வெகு சிறப்பு. ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கிய விதம்… அதிலும் அந்த நள்ளிரவு சேஸிங் காட்சி அடிப்பொலி ரகம்!

See Also

முதல் பாதியில் இருந்த யதார்த்தம் இரண்டாம் பாதியில் இல்லை. நாயகன் – வில்லன்கள் மோதலை அழகாக ஸ்டேஜிங் செய்து, ஒரு எதிர்பார்ப்பை அபரிமிதமாக உண்டு பண்ணி, இரண்டாம் பாதியில் வழக்கமான ஹீரோயிஸ சினிமாவாக முடித்திருப்பது சிறு ஏமாற்றமே. அதே போல ஒட்டுமொத்த சிட்டியையும் நடுங்கவைக்கும் கேங்ஸ்டர் குடும்பம், பெரும் போலீஸ் படையின் கண்ணில் மண்ணைத் தூவி அடுத்தடுத்து சம்பவங்களை அரங்கேற்றும் சின்னப் பசங்க என்பது நமக்கு நன்கு பரிச்சயமான `வேட்டையாடு விளையாடு’, `நான் மகான் அல்ல’ படங்களை ஞாபகப்படுத்தவும் செய்கிறது.

ஆனாலும், லாஜிக் மிஸ்ஸானாலும் திரைக்கதையில் இரண்டாம் பாதியில் அதிக வேகம் இருப்பது ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு செம தீனி போட்டிருக்கிறது என்று சொல்லலாம். படமெங்கும் வியாபித்துக் கிடக்கும் ரத்தச் சிதறல்கள் சிலருக்கு மிரட்சியையும் ஏற்படுத்தலாம் என டிஸ்க்லைமர் போடலாம். மொத்தத்தில், சில குறைகள் இருந்தாலும் ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு மிரட்டலான பழிவாங்கல் கதையை விறுவிறுப்பாகத் தந்து ஹிட் இயக்குநராகவும் தன்னை நிரூபித்திருக்கிறார் ஜோஜு ஜார்ஜ்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)