நாடு விமர்சனம்
கொல்லிமலையைச் சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு ஒரே ஒரு ஆரம்பச் சுகாதார மையம்தான் இருக்கிறது. அங்கு வருகிற மருத்துவர்கள் எல்லாம் உடனே பணியிட மாற்றம் வாங்கிச் செல்கிறார்கள். மருத்துவர் இல்லாததால் கடும் அவதியுறும் பழங்குடி மக்கள் உயிர்ப்பலியைச் சந்திக்க நேரிடுகிறது. இச்சுழலில் போராட்டத்தில் இறங்கும் மக்களைச் சமாதானம் செய்ய மாவட்ட ஆட்சியர் வருகிறார். அவர் மருத்துவரை நியமனம் செய்கிறேன், ஆனால் அவரை நன்றாக உபசரித்து பணியிட மாற்றம் வாங்காமல் சிறப்பாகப் பார்த்துக்கொள்வது உங்கள் பொறுப்பு என்று சொல்லிவிடுகிறார். இதன் பின்னர் நாயகன் மாரி (தர்ஷன்) தன் ஊர் மக்களோடு சேர்ந்து புதிதாக வரும் மருத்துவரைத் தக்கவைத்துக்கொள்ள என்னென்ன செய்கிறார்கள், மருத்துவர் அவர்கள் ஊரிலே தங்கினாரா என்பதே ‘நாடு’ படத்தின் கதை.
தனது முன்முடிவுகளிலிருந்து படிப்படியாக மாற்றம் அடைகிற மருத்துவராக மகிமா நம்பியார் நடித்துள்ளார்; நடிப்பில் குறையேதுமில்லை. குற்றவுணர்ச்சியும் அதிலிருந்து மீண்டெழும் முயற்சியிலும் இருக்கும் கனமான கதாபாத்திரத்துக்கு மறைந்த நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி உயிர் தந்துள்ளார். நெகிழ்ச்சியும் உற்சாகமும் கலந்த ஊர்த்தலைவராக வரும் சிங்கம்புலி தனது பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார். அவரது மகனாக நடித்துள்ள இன்பா ரவிக்குமார் போடும் டைமிங் ஒன்-லைனர்கள் கலகல! இது போக ஊர்மக்களாக வரும் அனைவருமே கேமராவை மறந்து யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள்.
ஒளிப்பதிவில் எழில்மிகு மலையின் வளைவுகளையும், ஊரின் பச்சை பசுமையும் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கே.ஏ.சக்திவேல். இருந்தும் பழங்குடிகளின் வீட்டுக்குள்ளேயே எடுக்கப்பட்ட காட்சிகளில் ஒரு வகையில் செயற்கையான ஒளியுணர்வு எட்டிப்பார்க்கிறது. படத்தொகுப்பில் மருத்துவம் பார்க்க மிக நீண்ட தூரம் செல்கிறார்கள் என்பதைக் கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டு மிகச் சாமர்த்தியமாக உணர்த்திய விதத்தில் படத்தொகுப்பாளர் ‘பி.கே’ சபாஷ் சொல்ல வைக்கிறார். ஆனால் அதே கொண்டை ஊசி வளைவுகள் போல நீண்டு கொண்டே சென்ற இரண்டாம் பாதியின் நீளத்தைச் சற்றே குறைத்திருக்கலாம்.
படம் ஆரம்பித்த உடனே தங்கள் ஊரை நேசிக்க வைக்க ஊர்மக்கள் செய்யும் வேலைகள் ஒருபுறம் ரகளை என்றால், மறுபுறம் உயிர் போகும் அவசர உதவிகள் கூட அவர்களுக்குத் தாமதமாகத்தான் கிடைக்கின்றன என்று அதற்கு இணையாக நகரும் காட்சிகள் கசப்பான உண்மை. ‘நீங்கலாம் இருக்குறதாலதான் மழை பெய்யுது’ என்று கதையின் போக்கில் வரும் யதார்த்த வசனங்கள் போல, பழங்குடி மக்களின் மத்தியில் இருக்கும் குழந்தை திருமணத்தை எதிர்க்கும் காட்சிகளும் யதார்த்தமாகச் சொல்லப்பட்டிருப்பது சிறப்பு! அதே போல நீட் போன்ற மருத்துவத் தேர்வுகள் எழுத சமூக அளவில் இருக்கும் மலையளவு வித்தியாசத்தை எளிய காட்சிமொழியாக தந்த இயக்குநர் எம்.சரவணனுக்குப் பாராட்டுகள்!