Now Reading
Mahaveeryar பட விமர்சனம்

Mahaveeryar பட விமர்சனம்

அரசராக இருக்கும் லாலுக்குத் தீராத விக்கல் பிரச்னை. அதனால் அவரால் திறம்பட ஆட்சி செய்ய முடியாத நிலை. ஏற்கெனவே அந்தப்புரத்தில் நிறைய பெண்களை அவர் அடைத்து வைத்திருக்க, விக்கல் பிரச்னை தீர்வதற்காகப் பேரழகி ஒருவரைக் கவர்ந்து வருமாறு தன் அமைச்சர் ஆசிப் அலிக்கு உத்தரவிடுகிறார். நிகழ்காலத்தில் அபூர்ணாநந்தன் என்னும் சாமியாராக ஊருக்குள் பிரவேசிக்கிறார் நிவின் பாலி. அருகிலிருக்கும் கோயிலின் விக்கிரகம் ஒன்றைத் திருடிவிட்டதாக அவர்மேல் குற்றம் சுமத்தப்பட, வழக்கு நீதிமன்றம் செல்கிறது. இந்த வழக்கின் விசாரணையில் டைம் டிராவல், பேன்டஸி, இன்னும் பல நம்ப முடியாத மேஜிக்கெல்லாம் சேர்த்து ஒரு டார்க் காமெடி கோர்ட்ரூம் டிராமா படம் எடுத்தால் அதுதான் இந்த ‘மஹாவீர்யர்.’

 

சாமியார் அபூர்ணாநந்தனாக நிவின் பாலி. இயல்பாகவே அந்த நமட்டுச்சிரிப்பு, குறும்புகள் போன்ற நகைச்சுவை அம்சங்கள் அவருக்குக் கைகூடி வரும். இதிலும் அப்படியொரு பாத்திரம் என்பதால் முதல் பாதி முழுக்கவே நிவின் ராஜ்ஜியம்தான். குறிப்பாகச் சிலைத் திருட்டு வழக்கின் சாட்சிகளையும், காவல் அதிகாரியையும் கோர்ட்டில் தன் வாதத் திறமையால் ஒன்றுமே இல்லாமல் செய்யும் காட்சிகளில் எழுத்தும், அதற்கு அவரின் நடிப்பும் அட்டகாசம். ‘இடைவேளை’ என்ற கார்டுவரை இந்த ‘மஹாவீர்யரின்’ விசிட்டிங் கார்டு நிவின் மட்டுமே.

அரசராக வரும் லால், சில இடங்களில் மிரட்டினாலும், பல இடங்களில் மிகை நடிப்பு சற்றே எட்டிப்பார்க்கிறது. நீதிபதியாக வரும் சித்திக்கிற்கும் வக்கீலாக வரும் லாலு அலெக்ஸுக்கும் முக்கியமான பாத்திரங்கள். இரண்டு சீனியர்களுமே தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி படத்துக்கு வலுச்சேர்த்திருக்கின்றனர். அமைச்சராக வரும் ஆசிப் அலிக்கு அரச நெறி தவறாத, கம்பீரமான ‘அடியாள்’ வேடம். எமோஷனல் காட்சிகளிலும் தன் பாத்திர வார்ப்புக்கு ஏற்றவாறு இறுக்கமான முகத்துடனே வந்து போகிறார். படத்தின் பேரழகியாக ஷான்வி ஶ்ரீவஸ்தவாவுக்கு ஆழமானதொரு பாத்திரம். படத்திலிருக்கும் ஒரே சென்டிமென்ட் ஆங்கிள் இவரின் பாத்திரம் வழியாக மட்டுமே வெளிப்படுகிறது.

இந்த உடல் அந்தத் தலையுடன் இணையப்போகிறது’ என்பதாகச் சம்பந்தமில்லாத இருவேறு காலங்களை ஒன்றிணைக்க முயன்றிருக்கிறது எம்.முகுந்தனின் கதையும், இயக்குநர் அப்ரீட் ஷைனின் திரைக்கதையும். ‘1983’, ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜு’ என நிவின் பாலியை வைத்தே இதற்கு முன் இரண்டு படங்களைக் கொடுத்த இயக்குநர் அப்ரீட் ஷைன், காளிதாஸ் ஜெயராம் நடித்த ‘பூமரம்’ படத்தின் மூலம் பெரும் கவனம் ஈர்த்தவர். பொதுவாகவே எதிர் நடப்பியல் வாதப் (Surrealism) படங்கள் இந்தியத் திரையுலகில் குறைவுதான். அத்தகையதொரு படத்தில் சமூகத்துக்கான கருத்து, அரசியல் கேலி உள்ளிட்ட விஷயங்களை எல்லாம் கலந்து சுவாரஸ்யம் சேர்த்திருக்கிறார் இயக்குநர்.

ஒளிப்பதிவாளர் சந்துரு செல்வராஜ் இருவேறு காலத்தில் நடக்கும் காட்சிகளுக்கு நம்பும்படி உயிர்கொடுத்திருக்கிறார். சாதாரண காட்சிகளுக்குக்கூட வலிமை சேர்க்கிறது இஷான் சாப்ராவின் பின்னணி இசை. ஹிரோயிஸ பில்டப், அரசனுக்கான கம்பீர தீம், காமெடி காட்சிகளுக்கான நையாண்டி என எல்லா ஏரியாவிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

See Also

அரச/அரசாங்கக் கட்டளையை நிறைவேற்றுவதற்காக விருப்பமில்லாத பிரஜைகளைத் துன்புறுத்துவது எப்படி அறம் ஆகும், ஒரு பெண்ணை வற்புறுத்தி ஒரு காரியத்தைச் செய்யச் சொல்வது அரசனே ஆகினும் அது எப்படிச் சரியாகும் என விவாதங்களை முன்னெடுக்க நினைத்திருக்கிறது படம். அரசன் என்ன செய்தாலும் அது சரியே, அரச காலமாயினும், தற்போதைய அரசாங்கக் காலமாயினும் இங்கே வறியவர்களின் நிலை ஒன்றுதான், அதிகாரம் படைத்தவர்களின் கீழ்தான் என்பதாக பல உரையாடல்களைத் தொடங்க நினைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால், அந்த உரையாடல் எங்குமே முழுமையடையாமல் போனதுதான் பெரும் சிக்கல்.

‘நிற்காத விக்கல்’, ‘பெண்ணின் கண்ணீர்’ என்பதான பிரச்னைக்கு பாலியல் வன்கொடுமையை மையப்படுத்திய இரட்டை அர்த்த ஆரம்பக்காட்சிகள் அவசியம்தானா? உவமைகள் கொண்டு தற்போது நிகழும் கோர அரசியலைக் காட்டுகிறேன் என்ற எண்ணம் சரிதான் என்றாலும், நீதிமன்றத்திலேயே ஒரு பெண்ணை மோசமாக நடத்துவது முகச்சுளிப்பைத் தாண்டி வேறு எந்த மெசேஜையும் கடத்தவில்லை. பிரச்னைக்குத் தீர்வாக நிவின் பாலி செய்யும் செயலும், சொல்லும் மெசேஜும் வாட்ஸ்அப் கூட இல்லை, எஸ்.எம்.எஸ் காலத்து ஃபார்வேர்டு மெசேஜ் ரகம்.

Pros
Cons

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)