LGM விமர்சனம்
கிரிக்கெட் வீரர் தோனி தயாரித்திருக்கும் படம் எல்.ஜி.எம். என்பது தெரிய வந்ததும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. எல்.ஜி.எம். படத்தின் ஐடியா அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இருக்கிறது. ஆனால் எழுத்து விஷயத்தில் பலம் இல்லை.
இரண்டு ஆண்டுகளாக காதலிக்கும் கவுதம்(ஹரிஷ் கல்யாண்) மற்றும் மீராவை(இவானா) அறிமுகம் செய்து வைக்கிறார் இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி. எல்லாம் நன்றாக செல்ல திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கிறார்கள்.
திருமணத்திற்கு பிறகு கவுதமின் அம்மாவுடன்(நதியா) சேர்ந்து ஒரே வீட்டில் வசிக்க மீராவுக்கு பிடிக்கவில்லை. அம்மா மற்றும் குடும்பத்தாரை புரிந்து கொள்ள ஒரு ட்ரிப்புக்கு அழைத்து வருமாறு கவுதமுக்கு ஐடியா கொடுக்கிறார் மீரா. சரி என்று சொல்லி அனைவரையும் ஒரு ட்ரிப்புக்கு அழைத்துச் செல்கிறார் கவுதம். ஆனால் இந்த ட்ரிப்புக்கு பின்னால் இருக்கும் நோக்கம் கவுதமின் அம்மாவுக்கு தெரிய வர எல்லாம் மாறுகிறது.
அதன் பிறகு மீராவும், கவுதமின் அம்மாவும் எப்படி ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறார்கள் என்பது தான் கதை.
வருங்கால மாமியாரை புரிந்து கொள்ள விரும்பும் பெண்ணின் ஐடியா நல்ல ஸ்க்ரிப்ட்டுக்கு அடித்தளமாக இருக்கும். ஆனால் அந்த ஐடியாவை இரண்டரை மணிநேர திரைக்கதையாக மாற்றி வராத சிரிப்பை வரவழைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். ஒருவரையொருவர் புரிந்து கொள்ள செல்லும் பயணத்தில் அப்படி எதுவும் நடப்பதாக தெரியவில்லை.
முக்கிய கதாபாத்திரங்கள் புலியுடன் சண்டை போடுவது தான் காமெடியாக இருக்கிறது. பயணத்தை மையமாக கொண்ட படத்தில் அவர்கள் செல்லும் இடங்களை நம்மாலும் பார்த்து ரசிக்க முடியவில்லை.ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இசையமைப்பாளர் வேலையையும் சேர்த்து செய்திருக்கிறார். அது படத்திற்கு கை கொடுக்கவில்லை. யோகி பாபு வழக்கம் போன்று சிரிக்க வைத்திருக்கிறார்.கதை சுவாரஸ்யமாக இல்லை என படத்தில் வரும் வசனம் நிஜத்திலும் பொருந்தும்.