லோகேஷ் கனகராஜூக்கு காரை பரிசாக கொடுத்த கமல்
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான திரைப்படம் விக்ரம். மாஸ்டர் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசனுடன் இணைந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இது மாபெரும் வாய்ப்பு என கூறியதுடன் படத்தை கண்ணும் கருத்துமாக உருவாக்கினார். முக்கிய கதாப்பாத்திரங்களில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் உள்ளிட்டோரை நடிக்க வைத்து எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அவர்,ரிலீஸூக்குப் பிறகு படு குஷியில் இருக்கிறார்.
விக்ரம் படம் வெளியாகி கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் 150 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பல ஊர்களில் தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாகவும் இருக்கின்றன. இது ஒட்டுமொத்த விக்ரம் படக்குழுவினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து பேசிய கமல்,விக்ரம் படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு தனக்கு இதுவரை கிடைத்திராத ஒன்று என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இத்தனை ஆண்டுகள் நடித்திருந்தாலும் விக்ரம் படத்தின் ரிலீஸ்போல் இதுவரை தன்னுடைய படங்கள் ரிலீஸாகவும் இல்லை, பிரம்மாண்ட ஓப்பனிங்கும் இல்லை என பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
மேலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜை பாராட்டி கடிதம் ஒன்றையும் எழுதினார் கமல்ஹாசன். இது லோகேஷ் கனகராஜூக்கு கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அத்துடன் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று வழிபாடும் நடத்தினார். வெளியூரில் இருந்து லோகேஷ் கனகராஜ் சென்னை திரும்பியவுடன் ஆஃபீஸூக்கு அழைத்த கமல்ஹாசன், படத்தை இயக்கிய ஒட்டுமொத்த குழுவுக்கும் பரிசு மழை பொழிந்துள்ளார். இயக்குநருக்கு லெக்ஷஸ் காரை பரிசாக கொடுத்த கமல்ஹாசன், இணை இயக்குநர்கள் 13 பேருக்கு அப்பாச்சி RTR 160 பைக்கையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.