காதர் பாட்ஷா விமர்சனம்
பிரபல நடிகர் ஆர்யா நடிப்பில் ‘கொம்பன்’ ‘விருமன்’ ‘மருது’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் முத்தையா இயக்கத்தில் இன்று (02-06-2023) வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. இந்தப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், தமிழ், மதுசூதன ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து இருக்கும் இந்தப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
தமிழ் செல்வியின் சொத்துக்களை அபகரிக்கும் நினைக்கும் அவரின் முறை மாமன்கள் அவளை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகின்றனர். இந்த நிலையில்தான் ஜெயிலில் இருக்கும் காதர் பாட்ஷாவை நேரில் சந்திக்க செல்கிறாள் செல்வி. ஆனால் அந்த சந்திப்பு கைகூடாமல் போகிறது.
இதனை தெரிந்து கொள்ளும் காதர் பாட்ஷா தன்னைத் தேடி வந்த பெண் யாரென்று தெரிந்து கொள்ள செல்வியை நோக்கி செல்கிறான். அங்கு மோதல் வெடிக்கிறது. அதன் பின்னர் என்ன ஆனது? காதருக்கும் செல்விக்கும் என்ன தொடர்பு? செல்வியின் சொத்துக்கள் என்ன ஆனது? செல்வியுடன் இருக்கும் அவரது அண்ணன் மகள்களின் நிலை என்ன? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே ‘காதர்பாட்சா என்ற முத்து ராமலிங்கம்’ படத்தின் கதை.
காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் கதாபாத்திரத்தில் ஆர்யா கொஞ்சம் கூட பொருந்த வில்லை. திக்கி திணறும் அவரது வசன உச்சரிப்பு சிரிப்பை வர வைக்கிறது. சண்டைக்காட்சிகளில் மட்டும் முகத்தை விறைப்பாக வைத்து இருக்கிறார். முறுக்கான உடம்பு மட்டும் போதாது ஆர்யா..!
ஜமாத் தலைவராக வரும் நடிகர் பிரபிவின் நிதானமான நடிப்பு சிறப்பு. ஆடுகளம் நரேன், கே.ஜி.எஃப் வில்லன் புகழ் அவினாஷ், ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் என வதவதவென வரும் வில்லன்கள் அனைவரும் வழக்கமான முத்தையா பட வில்லன் வகையறாவை சேர்ந்தவர்களாய் மிரட்டுகின்றனர்.
குறிப்பாக தமிழின் ஸ்கீரின் பிரசன்ஸ் மிரட்டல். தமிழ் செல்வியாக வரும் சித்திக் இத்னானின் கதாபாத்திரம் முத்தையாவின் முந்தைய பெண் கதாபாத்திரங்கள் பெற்ற முக்கியத்துவத்தை பெறாமல் கடந்து சென்றது ஏமாற்றம். குரூப் டான்ஸ்சராக இருந்து சினிமாவுக்கு வந்த நடிகை ஹேமா தயால் நடிப்பு மிகச்சிறப்பு.
முதல் பாதியில் சகட்டு மேனிக்கு சண்டைக்காட்சிகள், தேவையில்லாத பில்டபுக்கள் என படம் பார்ப்பவர்களுககு சோதனை மேல் சோதனை. கூடவே ஆர்யா நடிப்பு போனஸ் எரிச்சல்.
இரண்டாம் பாதியில் கொஞ்சம் நிதானித்து இராமநாதபுரம் இஸ்லாம் மற்றும் இந்து மக்களுக்கு இடையான பிணைப்பை சொன்ன விதம் நன்றாக இருந்தது. ஆனால் அதிலும் கதைக்குள் கதை, அந்தக்கதைக்குள் இன்னொரு கதை என சுற்றி சுற்றி வந்தது நம்மையும் சுற்றலில் விட்டு விட்டது. அதன் காரணமாக இரண்டாம் பாதியில் முத்தையா சொல்ல வந்த கருத்தும் அதன் முழுவீரியத்தை இழந்து நின்றது. ‘கறிக்கொழம்பு வாசம்’ பாடல் துள்ளல். ஜிவி பிரகாஷின் பின்னணி இசை மிரட்டல். வேல்ராஜின் ஒளிப்பதிவு முடிந்த அளவு கதையோடு நம்மை ஒன்ற வைத்திருக்கிறது. காதர்பாட்ஷா ஏமாற்றம்!