Jigarthanda Double X விமர்சனம்
தமிழ் சினிமாவின் முதல் கறுப்பு ஹீரோவாக வேண்டும் எனக் கனவு காணும் மதுரை ரவுடி அலியஸ் சீசர் (ராகவா லாரன்ஸ்). கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் தீவிர ரசிகரான இவர் தன்னை தமிழகத்தின் ஈஸ்ட்வுட்டாக மாற்றப்போகும் இயக்குநருக்கான தேடுதலில் இருக்கிறார். ‘உங்க சுயசரிதையையே காட்ஃபாதர் ரக உலக சினிமா ஆக்கலாம்’ என அங்கு ஆஜராகிறார் இயக்குநர் ரே தாசன் (எஸ்.ஜே.சூர்யா). அவர் அங்கு வந்த உண்மை காரணம் என்ன, சினிமா இவர்களை என்னவெல்லாம் செய்யவைத்தது என்பதுதான் (ஸ்பாய்லர் இல்லாத) ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் கதை.
இந்த கதை வழியே அரசு இயந்திரத்தால் சுரண்டப்படும் மலைவாழ் மக்களின் இன்னல்களையும் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். சாதாரண காட்சியையும் தனக்கேயான திரைமொழியால் மேம்படுத்தக்கூடிய அவரது திறன் இந்தப்படம் முழுவதும் வெளிப்பட்டிருக்கிறது. அதுதான் இந்த படத்தின் மிகப்பெரிய ப்ளஸ். குறிப்பாக இடைவேளை, கிளைமாக்ஸ் காட்சிகள் மிகச்சிறப்பு. வெல்கம் பேக் கார்த்திக்!
மிடுக்கான தோற்றம், கம்பீரமான உடல்மொழி என சமீபத்திய படங்களில் நாம் பார்க்காத ராகவா லாரன்ஸ். அலியஸ் சீசராக மிரளவும் வைக்கிறார், கலங்கவும் வைக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பைப் பற்றி தனியாகச் சொல்ல வேண்டுமா என்ன? அவருக்கு இது கொஞ்சம் மாறுபட்ட வேடம்தான். சமீபத்தில் அவர் நடித்த கதாபாத்திரங்களின் மீட்டரில் இல்லாமல் சற்றே நுட்பமான கதாபாத்திரம் இது. டிரேட் மார்க் நடிப்பிலிருந்து விலகி கதாபாத்திரத்திற்குத் தேவையானதைச் சரியாகச் செய்திருக்கிறார். இறுதியில் வரும் அழுத்தமான காட்சிகளில் தான் ஒரு தேர்ந்த நடிகன் என்பதை மீண்டும் நிரூபிக்கிறார்.
இவர்களுடன் ஒப்பிடுகையில் கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும் அதை நிறைவாகச் செய்திருக்கிறார் நிமிஷா சஜயன். இவர்கள் இல்லாமல் இளவரசு, ஷைன் டாம் சாக்கோ, சத்யன், அரவிந்த் ஆகாஷ், ஆதித்யா பாஸ்கர், என பெரும் நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறது. இவர்களுக்கும் சிறிய வேடங்கள்தான் என்றாலும் குறைந்தது ஒரு காட்சியிலாவது அனைவரும் ஸ்கோர் செய்துவிடுகிறார்கள். தமிழ் சினிமாவில் பல படங்களில் சிறு பாத்திரங்களில் தலைகாட்டிய தேனி முருகன் நிமிஷா சஜயனின் தந்தையாக கவனிக்க வைக்கிறார். இரக்கமற்ற காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நவீன் சந்திராவும் வில்லத்தன நடிப்பால் கவர்கிறார்.
படத்தின் மூன்றாவது நாயகன் ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு. மலைவாழ் மக்களின் வாழ்விடம், யானைகள் சுற்றித்திரியும் வனம், அன்றைய வண்ணமிகு மதுரை, வின்டேஜ் திரையரங்கம் எனக் காட்சிகள் பல்வேறு இடங்களுக்கு மாறினாலும் அந்த அந்த இடங்களுக்கான அழகியலைத் தவறவிடாமல் அவற்றைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது அவரது கேமரா. இவர்கள் ஒரு பக்கம் என்றால், பின்னணி இசையில் தனி ராஜாங்கம் நடத்திக்கொண்டிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரின் இன்ட்ரோ காட்சிகளில் வரும் சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது. அதே சமயம், ‘ஜிகர்தண்டா’ முதல் பாகத்தில் வரும் தீம் மியூசிக்கை பயன்படுத்திய இடங்களும் மிகச்சரியான தேர்வு. பிற துறைகளில் இருக்கும் நேர்த்தி அவர் இசையிலும் மிஸ் ஆகவில்லை. ட்ரேட் மார்க் சந்தேதோஷ் நாராயணன் பாடல்கள் இதில் மிஸ்ஸிங். கலை இயக்கத்தில் தங்களுக்கு இருந்த மிகப்பெரிய சவாலை சாமர்த்தியமாக கையாண்டிருந்தாலும் சில இடங்களில் கொஞ்சம் அந்நியத்தன்மை இருக்கத்தான் செய்கிறது. கதையில் யானைகளுக்கும் முக்கிய வேடம் இருக்கிறது. ஆங்காங்கே சிறு பிசிறுகள் இருந்தாலும் VFX காட்சிகள் பெருமளவில் கச்சிதமாகவே வந்திருக்கிறது.
படம் முழுவதும் கையில் ஒரே ஒரு கேமராவை வைத்து சுற்றிச் சுற்றி படமெடுக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. ‘இப்படி ஒரு சினிமாவை எடுத்துவிட முடியுமா… லைட்ஸ், கேமரா, ஆக்ஷனில் லைட்ஸ் எல்லாம் எங்க பாஸ்?’ என்பது போன்ற லாஜிக் கேள்விகளும் எழாமல் இல்லை. மொத்தத்தில் சிறப்பான திரை அனுபவமாக சினிமா ரசிகர்களுக்கு இந்த ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ தீபாவளி ட்ரீட்!