கோலிவுட்டுக்கு அடுத்த நாசர், விஜய் சேதுபதி கிடைச்சாச்சு.. தெருக்கூத்து கலைஞனின் வலியை காட்டும் ஜமா
இன்று ஏகப்பட்ட படங்கள் திரைக்கு வந்துள்ளது. அதில் ட்ரைலரிலேயே அதிகம் கவர்ந்த படம் தான் ஜமா. பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள இப்படத்தில் அம்மு அபிராமி, சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியல் பற்றியும் அவர்களின் வலி பற்றியும் அப்பட்டமாக காட்டி இருக்கும் இப்படம் தற்போது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. வன்முறை படங்களுக்கு மத்தியில் எதார்த்தத்தின் உருவமாக வெளிவந்துள்ள இப்படத்தின் விமர்சனம் பற்றி இங்கு விரிவாக காண்போம்.
திருவண்ணாமலையில் தெருக்கூத்து நடத்தி வரும் சேத்தன் குரூப்பில் ஹீரோ பெண் வேஷம் கட்டுபவராக இருக்கிறார். மகாபாரத திரௌபதியாக நடிக்கும் ஹீரோவுக்கு தொடர்ந்து அந்த கதாபாத்திரங்கள் தான் கிடைக்கிறது. ஆனால் அதையும் சந்தோஷமாக ஏற்று நடித்து வருகிறார்.
இது அவருடைய திருமணத்திற்கு பிரச்சினையாக வந்து நிற்கிறது. அதாவது பெண் வேடம் போடுவது பெண்களுடன் பழகுவது என இருப்பதால் ஹீரோவின் நடவடிக்கையில் பெண் சாயல் வருகிறது. அதனால் அர்ஜுனன் வேஷத்தில் நடிக்க சொல்லி அவரின் அம்மா வற்புறுத்துகிறார்.
அதை அடுத்து ஹீரோ சேத்தனிடம் இதைப் பற்றி தொடர்ந்து கேட்டு வருகிறார். ஆனால் அவமானம் தான் மிஞ்சுகிறது. பிறகு ஹீரோ அர்ஜுனன் வேஷம் போட்டாரா? அவருக்கு திருமணம் நடந்ததா? ஜமாவின் பின்னணி என்ன? போன்ற பல கேள்விகளுக்கு இப்படம் விடை அளிக்கிறது.
சினிமாவிற்கு முன் இந்த தெரு கூத்து தமிழ் மக்களிடையே வெகு பிரபலமாக இருந்தது. அந்த கலையையும் கலைஞர்களின் வலியையும் இயக்குனர் அழகாக காட்டி இருக்கிறார். ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பாரி இளவழகன் ஹீரோவாக இதில் ஜெயித்துள்ளார்.
இவருடைய எதார்த்தமான நடிப்பு விஜய் சேதுபதியை ஞாபகப்படுத்துகிறது. நிச்சயம் இப்படத்திற்காக அவருக்கு விருது கிடைக்கும். அப்படியே சேத்தன் பக்கம் திரும்பினால் இவரை தமிழ் சினிமா பயன்படுத்தாமல் விட்டு விட்டதோ என எண்ண தோன்றுகிறது. அந்த அளவுக்கு அவர் மிரட்டி இருக்கிறார்.
சுருக்கமாக சொல்லப்போனால் அடுத்த நாசர் இவர்தான்பா என சபாஷ் போட வைத்துள்ளார். அடுத்ததாக ஹீரோயின் அம்மு அபிராமி பல இடங்களில் கைத்தட்டல் வாங்கும் அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இளையராஜாவின் இசை படத்திற்கு பெரும் பலமாக இருக்கிறது. பல இடங்களில் பின்னணி இசை சிலிர்க்க வைக்கிறது. இப்படி படத்தில் பல விஷயங்கள் பாராட்டுகளை தட்டி தூக்குகிறது.
இதில் குறை என்று பார்த்தால் சில காட்சிகள் மெதுவாக நகர்வது கொஞ்சம் சலிப்பை தருகிறது. ஆனால் நாம் மறந்து போயிருந்த ஒரு கலையை காட்சி வடிவில் நமக்கு காட்டிய ஜமா நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு படம் மட்டுமல்ல பாராட்ட வேண்டிய படமும் தான்.