சொத்து மதிப்பு இவ்வளவா..நடிப்பால் மிரட்டிய முத்தழகு …வயது 40
நடிகை பிரியாமணி கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர். தேசிய விருது வென்ற நடிகையான அவர் திருமணத்துக்கு பின்பு சில காலம் நடிக்காமல் இருந்தார். அதனையடுத்து தொடர்ந்து நடிக்க ஆரம்பித்த அவர் கடைசியாக மலையாளத்தில் வெளியான நேரு படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரம் ஏற்றிருந்தார். கடைசியாக அவரது நடிப்பில் மைடான் திரைப்படம் வெளியானது. இந்தச் சூழலில் அவர் தனது 40ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியாமணி. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த அந்தப் படம் தோல்வி அடைந்தாலும் பிரியாமணிக்கு நல்ல அறிமுகமும், பெயரும் கிடைத்தன. அதனையடுத்து பாலுமகேந்திரா இயக்கத்தில் அது ஒரு கனா காலம் படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். தனது கரியரின் ஆரம்பத்திலேயே பாரதிராஜா, பாலுமகேந்திரா என இரண்டு பெரும் ஆளுமைகளின் இயக்கத்தில் நடித்ததால் திரையுலகில் வெகுவாக கவனம் ஈர்த்தார் ப்ரியாமணி.இப்படிப்பட்ட சூழலில் அமீர் இயக்கத்தில் உருவான பருத்திவீரன் படத்தில் நடித்தார். முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்திருந்தார். கார்த்தியிடம் காதலில் கசிந்துருகுவதும், காதல் விவகாரம் வீட்டில் தெரிந்த பிறகு யாருக்கும் அஞ்சாமல் இருப்பதும் என ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பு ராட்சசியாக மிரட்டியிருந்தார். குறிப்பாக அந்த க்ளைமேக்ஸ் காட்சியில் அனைவரையும் கலங்க வைத்தார். இதன் காரணமாக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.பருத்திவீரனில் தேசிய விருது கிடைத்ததால் கண்டிப்பாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் அதற்கு நேர் மாறாக ஒன்றிரண்டு படங்களின் வாய்ப்பே அமைந்தது. அதேபோல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லாமல் போக முஸ்தஃப் என்பவரை கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார்.திருமணத்திற்கு பிறகும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்த அவர் கடைசியாக ஜவான் மற்றும் நேரு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். நேரு படத்தில் பெண் வழக்கறிஞர் கதாபாத்திரத்தையும், ஜவான் படத்தில் ஷாருக்கான் டீமில் இருக்கும் ஒரு ஆக்ஷன் வுமன் கதாபாத்திரத்தையும் ஏற்று கலக்கியிருந்தார். அடுத்ததாக அவர் நடிப்பில் மைடான் திரைப்படம் வெளியானது.மைடான் திரைப்படத்தில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடித்திருந்தார். அமித் ஷர்மா இயக்க; போனி கபூர் ஜீ ஸ்டூடியோஸ் சார்பாக படத்தை தயாரித்திருந்தார். இந்தியாவைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படம் உருவாகியிருந்தது. படத்துக்கு ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனத்தையே கொடுத்தனர். இருந்தாலும் ப்ரியாமணியின் நடிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருந்தது.இந்தச் சூழலில் அவர் இன்று தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை சொல்லிவரும் சூழலில்; ப்ரியாமணியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவருக்கு மொத்தம் 60 கோடி ரூபாய் அளவில் சொத்து மதிப்பு இருக்கிறதாம். ஒரு படத்துக்கு இரண்டு கோடி ரூபாய்வரை ஊதியம் பெறும் அவருக்கு பெங்களூரில் பிரமாண்டமான வீடு ஒன்று இருக்கிறதாம். அதேபோல் சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களிலும் வீடுகள் இருப்பதாகவும்; Audi A3, Benz GLS 350 D போன்ற சொகுசு கார்களையும் வைத்திருக்கிறாராம்.