ரகசிய திருமணம் செய்கிறாரா சோனாக்ஷி சின்ஹா

ரஜினிகாந்தின் லிங்கா படத்தில் நடித்த சோனாக்ஷி சின்ஹா இந்த மாதம் தனது திருமணத்தை செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், தனது மகனின் திருமணம் குறித்து எந்த ஒரு தகவலும் தனக்குத் தெரியாது என பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.நடிகை சோனாக்ஷி சின்ஹா கடந்த 2020ம் ஆண்டு முதல் ஜாகிர் இக்பால் என்பவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவருடன் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.37 வயதாகும் நடிகை சோனாக்ஷி சின்ஹா பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான ஹீராமண்டி வெப் சீரிஸிலும் வில்லியாக நடித்து மிரட்டி இருந்தார்.கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடித்த லிங்கா திரைப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியானது. அந்த படத்தில் பிளாஷ்பேக் போர்ஷனில் ஜாக்கெட் அணியாத பாரதி கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர் தான் சோனாக்ஷி சின்ஹா. ஜூன் 23-ம் தேதி அவருக்கு மும்பையில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாரிசு நடிகை: ரஜினிகாந்தின் நண்பரான சத்ருகன் சின்ஹாவின் மகள் தான் சோனாக்ஷி சின்ஹா. வாரிசு நடிகையாக பாலிவுட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான தபாங் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் சிம்பு ஒஸ்தி என டைட்டில் வைத்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படமே சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்த சோனாக்ஷி சின்ஹா அடுத்ததாக ரவுடி ரத்தோர் படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தார். தபாங் 2 மற்றும் 3 என சல்மான் கானுடன் தொடர்ந்து நடித்த சோனாக்ஷி சின்ஹா ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான அகிரா படத்திலும் நடித்திருந்தார். சமீப காலமாக அவர் நடிக்கும் படங்கள் பெரிதாக ஓடாத நிலையில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.பாலிவுட் நடிகரும் அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹாவிடம் அவரது மகள் சோனாக்ஷி சின்ஹா திருமணம் செய்துக் கொள்ளப் போகிறாராமே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, ஓ அப்படியா? எனக்கு தெரியாது. இப்போதெல்லாம் குழந்தைகள் திருமணம் குறித்து பெற்றோர்களுடன் கலந்து ஆலோசிப்பதே இல்லை. என் மகள் இன்னமும் அவர் திருமணத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை. அழைத்தால் இதற்கு பதில் கூறுகிறேன் என சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். இஸ்லாமியரை சோனாக்ஷி சின்ஹா காதலித்து வருவதற்கு சத்ருகன் சின்ஹா சம்மதிக்காத நிலையில் தான் இப்படி சொல்கிறாரா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. சோனாக்ஷி சின்ஹா தனது திருமணம் குறித்து இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.