இறைவன் விமர்சனம்

குற்றவாளிகளைத் தண்டிக்கும் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும் அசிஸ்டென்ட் கமிஷனராக இருக்கிறார் அர்ஜுன் (ஜெயம் ரவி). அவரது உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சுகிறார் உடன் பணிபுரியும் நண்பரான ஆண்ட்ரூ (நரேன்). இந்நிலையில் சென்னை மாநகராட்சியைச் சுற்றி மிக மிகக் கொடூரமான முறையில் இளம் பெண்கள் நிர்வாணப்படுத்திக் கொல்லப்படுகிறார்கள். இதைத் தன்னை கடவுளாக நினைத்துக்கொள்ளும் ‘பிரம்மா’ என்கிற ஸ்மைலி கொலைகாரன் செய்வதாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்துக்கு மேல் கொலைகளின் எண்ணிக்கை அதிகரிக்க, கொலையாளியைக் கண்டுபிடிக்க அர்ஜுனும், ஆண்ட்ரூவும் களமிறங்குகிறார்கள். அந்தக் கொலைகாரனைக் கண்டுபிடித்தார்களா, அவனால் இவர்கள் வாழ்க்கை என்னவானது என்பதுதான் ‘இறைவன்’ படத்தின் கதை.

நரேன் கதாபாத்திரம் படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே தனக்கான பணியைச் செய்து படத்திலிருந்து தப்பித்து விடுகிறது. சீரியல் கில்லர் வில்லனாக வரும் ராகுல் போஸ், தனது பணியைத் திறம்படச் செய்துள்ளார். அந்தக் கதாபாத்திரம் உருவாக்க வேண்டிய பயத்தை அட்டகாசமாக நமக்குக் கடத்தியுள்ளார். மற்றொரு முக்கிய பாத்திரத்தில் வந்துள்ள வினோத் கிஷன் நடிப்பில் மிகைத் தன்மையின் டோஸேஜ் பல மீட்டருக்கு அப்பால் எகிறுகிறது. இது தவிர ஆஷிஷ் வித்யார்த்தி, சார்லி, விஜயலட்சுமி எனப் பலர் படத்திலிருந்தாலும் சார்லியைத் தவிர யாரும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

யுவன் சங்கர் ராஜா இசையில் எந்தப் பாடலும் பெரிதாக ஈர்க்கவில்லை. பின்னணி இசையில் சில வித்தியாசமான குரல்களை வைத்து புதுமைகளை முயற்சி செய்துள்ளார். ஆனால், காட்சிகளில் வலுவில்லாததால் அந்த உழைப்பு வீணாகிறது. ஒளிப்பதிவாளர் ஹரி.கே.வேதாந்த் தொடர் கொலையைப் பிரதிபலிக்கும் இருண்மையைத் தனது ஒளிப்பதிவில் சிறப்பாகக் கையாண்டுள்ளார். படத்தொகுப்பாளர் ஜெ.வி.மண்கண்ட பாலாஜி படத்தின் நீளத்தை இன்னும் சுருக்கியிருக்கலாம். மனித உடல்களை அறுக்கும் இடம், இறந்த உடல்களைக் காட்சிப்படுத்துவது, போஸ்ட்மார்ட்டம் எனக் கலை இயக்குநர் ஜாக்கி அவர் மேல் குறை சொல்ல முடியாத உழைப்பைத் தந்திருக்கிறார்.

படம் ஆரம்பித்த உடனே பார்வையாளர்கள் மேல் ரத்தத்தைப் பூசிவிடுகிறார்கள். குடம் குடமாக சப்ளைக்கும் சொல்லி வைத்துவிடுகிறார்கள். இளம் பெண்களை நிர்வாணம் செய்து கண்களைக் கொய்வது, கால்களை வெட்டுவது என்று வார்த்தைகளில் எழுதுவதற்கே தயக்கத்தை ஏற்படுத்துகிற விஷங்களைக் கொடூரமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ஐ.அகமது. மேலும் குற்றவாளி யார் என்பதை வெளிப்படுத்தியதால் மீண்டும் இதே போன்ற கொடூரமான காட்சிகளை நம்பியே திரைக்கதை நகர்கிறது. எழுத்தில் எந்தச் சிரத்தையும் எடுக்காத கற்பனை வறட்சி, அப்பட்டமாக அடுத்தடுத்த காட்சிகளில் தெரிகிறது.

See Also

இதில் ஸ்மைலி பொம்மை, காப்பி கேட் கொலைகாரன் எனச் சில சுவாரஸ்ய முடிச்சுகள் இருந்தாலும், சீரியல் கில்லர், சைக்கோபாத் என அவர்களைச் சித்திரிப்பதில் எக்கச்சக்க கத்துக்குட்டி தனங்கள் சேர்ந்துகொள்கின்றன.இதற்கு நடுநடுவே காதல், குடும்பம் எனப் பாடல்களும் வந்து போகின்றன. அதுமட்டுமில்லாமல் தோற்றத்தை வைத்தே குற்றத்தை இவன்தான் செய்திருப்பான் எனக் கதாநாயகன் கண்டுபிடிக்கும் காட்சியின் மூலமாக இயக்குநர் என்ன சொல்ல வருகிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.

Pros
Cons
What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)