அபிராமி அளித்த பேட்டி …குழந்தையை பெத்துக்கலாமா இல்லை தத்து எடுக்கலாமா..
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அபிராமி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர். 1995ஆம் ஆண்டு வெளியான காத்தபுருஷன் என்ற படத்தின் மூலம்தான் அவர் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் பத்ரம், ஸ்ரதா, மில்லினியம் ஸ்டார்ஸ் உள்ளிட்ட படங்களில் நடிகையாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். தமிழிலும் குறிப்படத்தகுந்த நடிகையாக வலம் வந்துகொண்டிருந்த அவர் திடீரென சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.அர்ஜுன் நடிப்பில் கடந்த 2001ஆம் அனடு வெளியான வானவில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் அபிராமி. படம் டீசண்டான வரவேற்பையே பெற்றது. அபிராமியின் நடிப்பும் கவனம் ஈர்த்ததன் காரணமாக அவருக்கு தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.தான் நடித்த ஒவ்வொரு படத்திலும் தன்னை ஒரு நல்ல நடிகையாக அடையாளப்படுத்திக்கொண்டார். கோலிவுட்டும் அபிராமிக்கு அழகு மட்டும் இல்லை திறமையும் இருக்கிறது என்பதை கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்தது. அப்படிப்பட்ட சூழலில்தான் அபிராமிக்கு எளிதில் யாருக்கும் கிடைத்திடாத மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்தது.கமல் ஹாசன் நடிப்பில் உருவான விருமாண்டி படத்தில் அபிராமிக்கு வாய்ப்பு கிடைத்தது. அன்னலட்சுமி என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார் அவர். கமல் ஹாசனுடன் நடிக்கும்போது அவருக்கு ஈடுகொடுத்து நடிப்பது அவ்வளவு சாதாரணமில்லை. அதனை விருமாண்டியில் மிகச்சாதாரணமாக செய்தார். மதுரை ஸ்லாங்கை பேசி தைரியமான பெண்மணியாக நடித்து அப்ளாஸை அள்ளினார் அபிராமி. பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் இப்போது தக் லைஃப் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். அபிராமி பேட்டி: இந்நிலையில் அபிராமி தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், “எனது மகள் பெயர் கல்கி. அவள் எங்களுடைய வாழ்க்கையில் வந்ததுதான் மிகவும் சந்தோஷமான ஒரு விஷயம். ஆனந்தம் தரக்கூடிய விஷயம். கல்கிக்கு சாப்பாடு ஊட்டிவிடக்கூட அனுமதிக்கமாட்டாள். அவளே தன்னுடைய சாப்பாட்டை சாப்பிடுவாள்.அவள் இடது கை பழக்கம் உடையவள். அவள் ஒரு இடத்தில் சும்மாவே உட்காரமாட்டாள். அவளுக்கு இயற்கை என்றால் அவ்வளவு பிரியம். ரசிப்பாள். அவள் வந்தபிறகுதான் நிறைய பொறுமை வந்திருக்கிறது. குழந்தைகளை பார்க்கும்போது நமக்கு பெரிதாக கோபம் வராது. அவர்களின் அப்பாவி முகத்தால் நமக்கு கோபம் வரவில்லையா என்பது தெரியவில்லை. பெண்ணின் அபிப்ராயம்: தாய்மை என்பது சம்பந்தப்பட்ட பெண்ணின் அபிப்ராயம். பத்து மாதங்கள் குழந்தையை சுமந்து பெற்றுக்கொள்ள வேண்டுமா இல்லை வாடகை தாய் மூலம் பெற்றுக்கொள்ள விரும்புகிறாரா என்பது அந்த பெண் சம்பந்தப்பட்டது. அதுமட்டுமின்றி குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறார்களா என்பதும் அந்த பெண், ஆண் சம்பந்தப்பட்டது” என்றார்.