Indian 2 விமர்சனம்
28 ஆண்டுகள் கழித்து பல போராட்டங்களுக்கு பின் இன்று உலகளவில் வெளியாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் லைகா இப்படத்தை தயாரித்துள்ளது.
கமல், ஷங்கர் கூட்டணியில் 1996ம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இந்தியன் 2 இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது. லைகா, ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரித்துள்ள இந்தியன் 2, பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்தியன் 2வை தொடர்ந்து 3ம் பாகமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. கமலுடன் சித்தார்த், எஸ்ஜே சூர்யா, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர், அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தியன் 2 ட்ரெய்லர் வெளியான போதே படத்தை நெட்டிசன்கள் பங்கமாக ட்ரோல் செய்திருந்தனர். லஞ்சம், ஊழல் என ஷங்கர் தனது வழக்கமான பாணியில் தான் இந்தியன் 2 படத்தை இயக்கியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் அனிருத்தின் இசையும் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று வெளியான இந்தியன் 2 படம் எப்படி இருக்கிறது என டிவிட்டர்வாசிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் காலை 9 மணிக்கு தான் முதல் ஷோ. ஆனால், தமிழகம் தவிர ஐதராபாத், பெங்களூரு, கொச்சி, மும்பை போன்ற நகரங்களிலும், அமெரிக்கா உள்ளிட்ட சில வெளிநாடுகளிலும் இந்திய நேரப்படி அதிகாலையிலேயே இந்தியன் 2 முதல் காட்சி திரையிடப்பட்டுள்ளது.
இந்தியா வரும் இந்தியன் தாத்தா என்ன செய்தார்? இந்த முறை லஞ்சத்தை ஒழிக்க அவர் கையில் எடுத்த ஆயுதம் என்ன?… லஞ்சத்தை ஒழிக்க அவர் கூற வரும் தீர்வு என்ன? என்பதே படத்தின் கதை.ஏ. ஆர் ரஹ்மான் அளவிற்கு இல்லையென்றாலும் தன்னால் முடிந்த அளவு இசை கொடுத்து படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறார். திரைக்கதையின் வேக த்திகிற்கு ரவி வர்மாவின் கேமரா கண்கள் நகரும் விதம் அற்புதம்.
வழக்கம் போல கெட்டப்பிலும், நடிப்பிலும் கமல் ஹாசன் மிரட்டுகிறார். இந்தியன் தாத்தாவிற்கே உரித்தான கிடுக்கிலும், மிடுக்கிலும் அரட்டு கிறார். அவரை சுற்றியே பெரும்பான்மையான கதை நகர்வதால், இதர கதாபாத்திரங்கள் பெரிதாக கவனம் பெறவில்லை. ஆனாலும் கொடுத்த கதாபாத்திரத்துக்கு நடிகர்கள் நியாயம் செய்து இருக்கிறார்கள். ஆக்ஷன் காட்சிகளில் கமல் ஹாசன் பயன்படுத்தும் வர்ம முறைகள் ரசிக்க வைக்கின்றன. வசனங்களும் கவனம் ஈர்க்கின்றன.
ஆனால், முந்தைய பாகத்தில் இடம் பெற்ற காட்சிகளின் அழுத்தம், இந்த பாகத்தில் இல்லாத காரணத்தால் இந்தியன் தாத்தா ஒரு கட்டத்துக்கு மேல் சோதிக்க ஆரம்பித்து விடுகிறார். எப்போதும் காதல், ரொமான்ஸ், கருத்து, ஆக்ஷன், காமெடி கலந்து கட்டி அடிக்கும் ஷங்கர், இதில் கருத்து ஒன்றை மட்டுமே பிரமாண்டத்தின் வாயிலாக கடத்த முயன்று இருந்ததாலும், இளைஞர்கள் கையிலே மொத்த தீர்வும் இருக்கிறது என்பதை இன்னும் அழுத்தமான காட்சிகளாலும், காரணத்தாலும் கடத்தாததும் இந்தியன் 2 படத்தை ரசிக்க முடியாமல் செய்ய வைத்து விட்டது. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் இயக்குநர் ஷங்கர்.