பல நாட்கள் அழுது இருக்கேன்.. கண்கலங்கிய பரிதாபங்கள் கோபி
யூடியூப் மூலம் பிரபலமாகி ஏராளமான ரசிகர்களை பெற்றவர்கள் கோபி மற்றும் சுதாகர். நாட்டு நடப்பு தொடங்கி, நம்மை சுற்றி நடக்கும் அன்றாட நிகழ்வுகளை கிண்டலடித்து இவர்கள் இருவரும் வெளியிடும் வீடியோக்களின் பல காட்சிகள் மீம் டெம்ப்லேட் ஆகியுள்ளது. அண்மையில் அன்னையர் தினத்திற்கு இவர்கள் வெளியிட்ட வீடியோ மிகப்பெரிய அளவில் பிரபலமானது. தற்போது யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள கோபி தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்
திருச்சியைச் சேர்ந்த நெருங்கிய நண்பர்களான இவர்கள் இருவரும் தங்கள் பரிதாபங்கள் சேனல் மூலம் உலகம் முழுவதும் உள்ள மக்களை மகிழ்வித்து வருகிறார்கள். தற்போது கோடியில் இருவர் எனும் வெப் சீரிஸில் நடித்துள்ளனர். தங்களது பரிதாபங்கள் யூடியூப் சேனலிலேயே அந்த வெப் சீரிஸை வெளியிட்டுள்ளனர். அந்த வெப் தொடர் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் ரீச்சாகி உள்ளது.
இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பரிதாபங்கள் கோபி, தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசினார். அதில் எங்கள் குடும்பம் சாதாரணமான ஒரு எளிமையான குடும்பம் தான். சிறு வயது முதலே என்னுடைய படிப்பிற்கும், அனைத்து விதத்திலும் எனக்கு துணையாக இருந்தது என் அப்பா, அம்மா தான். நான் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால், கையில் பணம் இல்லை என்றாலும் கூட எப்படியாவது ஏதோ ஒரு பரிசை வாங்கி கொடுத்து என்னை சந்தோஷப்படுத்துவார்கள். அதுவே எனக்கு ஊக்கமாக இருந்தது. இதனால், பரிசு கிடைக்கும் என்பதற்காகவே நான் நன்றாக படித்தேன். வருத்தப்பட்டு இருக்கிறேன்: நானும் சுதாகரும் சென்னைக்கு வந்த புதிதில், வீட்டுக்கு எங்களால் பணம் அனுப்ப முடியவில்லை. இதை நினைத்து பல நாட்கள் நாங்கள் வருத்தப்பட்டு இருக்கிறோம். ஆனால் இன்று நாங்கள் இருவரும் ஒரு நல்ல நிலைமையில் இருக்கின்றோம், எனக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஆனால் என் தாய் தந்தையரை என் சொந்த ஊரில் தனியாக விடாமல் அவர்களை சென்னை அழைத்து வந்து கூட்டு குடும்பமாக தான் வாழ்ந்து வருகிறோம்.
என் அப்பா அம்மாவிற்கு நான் சிறுவயதில் இருந்து பெரிதாக எதுவும் செய்ததில்லை. அதிலும் குறிப்பாக என் அம்மாவுக்கு, உடலில் ஒரு பிரச்சனை இருந்தது, அவங்களுக்கு கோழி றெக்கையை கொண்டு காதுகளை சுத்தப்படுத்தும் பழக்கம் இருந்தது, நாங்கள் அதை கவனிக்காமல் விட்டுவிட்டதால், அவருக்கு காது கேளாத பிரச்சனையாக மாறிவிட்டது. அவருக்கு அப்படி ஒரு பிரச்சனை இருந்தும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று பல நாட்கள் அழுது இருக்கிறேன்.
ஆனால் இன்று நான் நன்றாக சம்பாதிக்கிறேன், அண்மையில் தான் அம்மாவிற்கு சுமார் 80 ஆயிரம் ரூபாயில் காது கேட்கும் இயந்திரத்தை வாங்கி கொடுத்தேன். ஏன் எனக்கு இவ்வளவு செலவு செய்து இந்த பொருளை வாங்கி கொடுக்கிறாய், என்று அம்மா பலமுறை என்னை கேட்டார்கள் என்று உணர்ச்சி பொங்க அந்த பேட்டியில் கோபி மனம் திறந்து பேசினார்.