ரத்னம் படம் கதை எப்படி இருக்கு…
ஆக்ஷன் மற்றும் சேஸிங் படங்களுக்கு சொந்தக்காரரான ஹரி தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு மீண்டும் விஷாலை வைத்து இந்த படத்தை எடுத்துள்ளார். பல தடைகளை தாண்டி வெளியாகி இருக்கும் ரத்னம் படத்தில் விஷால், பிரியா பவானி சங்கர், முரளி ஷர்மா, சமுத்திரகனி, கெளதம் மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஏப்ரல் 26ம் தேதியான இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. தஞ்சாவூர் மற்றும் திருச்சி பகுதிகளில் படத்தை வெளியிட கடைசி நேரத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக விஷால் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். விஷாலை சுற்றி நடைபெறும் பிரச்சனைகளை தள்ளி வைத்து விட்டு படமாக விஷால் நடித்துள்ள ரத்னம் படம் எப்படி இருக்கு? தேறுமா? தேறாதா? என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
எம்.எல்.ஏவாக நடித்துள்ள சமுத்திரகனியின் அடியாளாக இருக்கிறார் ரத்னம். ஊரில் யாராவது ஏதாவது தப்பு செய்தால் தூக்கிப் போட்டு மிதிப்பதில் இருந்து ஆளையே காலி பண்ணும் அளவுக்கு எதற்கும் துணிந்தவனாக விஷாலை அறிமுகப்படுத்துகிறார் ஹரி. நீட் தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கும் மாணவி பிரியா பவானி சங்கரை சிலர் கொல்வதற்காக துரத்த ஹீரோயினை காப்பாற்றும் பொறுப்பை கையில் எடுக்கும் விஷால் எதற்காக அவரை காப்பாற்ற போராடுகிறார். அவருக்கும் விஷாலுக்கும் உள்ள தொடர்பு என்ன? மெயின் வில்லன் யாரு? என சில ஜீரணிக்க முடியாத ட்விஸ்ட்டுகளுடன் படம் நகர்கிறது.
நடிகர் விஷால் இது நம்ம ஏரியான்னு பழைய பன்னீர் செல்வமாகவே மாறியுள்ளார். சண்டக்கோழி, தாமிரபரணி உள்ளிட்ட படங்களில் எப்படி இருந்தாரோ அதே போல ஆக்ஷனில் அடித்து விளையாடி இருக்கிறார். பிரியா பவானி சங்கருக்கு இந்த படத்தில் டபுள் ஆக்ஷன். தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து முடித்துள்ளார். சமுத்திரகனி மற்றும் கெளதம் மேனன் கிடைத்த இடத்தில் ஸ்கோர் செய்ய, மெயின் வில்லனாக தெலுங்கு நடிகர் முரளி ஷர்மா மாஸ் காட்டுகிறார்
ஹரி இயக்கத்தில் விஷால் சண்டைக் காட்சிகளில் ஷைன் ஆகும் அளவுக்கு தாமிரபரணி படத்தை போல எமோஷனல் காட்சிகளிலும் அவர் நடிப்பால் கவனிக்க வைக்கிறார். பிரியா பவானி சங்கருக்கும் விஷாலுக்கும் இப்படியொரு உறவா? என்கிற ட்விஸ்ட் ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்துகிறது. பீட்டர் ஹெய்ன், கனல் கண்ணன் என பல சண்டை இயக்குநர்கள் சேஸிங் சீன்களை தரமாக கொடுத்து ரசிகர்களை என்ஜாய் பண்ண வைக்கின்றனர். மைனஸ்: ஹீரோயினை காப்பாற்ற எத்தனை பேரை வேண்டுமானாலும் அடித்து நொறுக்கும் ஹீரோவாக விஷால் நடித்துள்ளார். ஆரம்பத்தில் தப்பை தட்டிக் கேட்கும் கதபாத்திரத்தில் அவரை அறிமுகப்படுத்தி விட்டு அதன் பின்னர் மொத்த கதையும் யூடர்ன் அடித்து ஹீரோயின் பின்னாடி சென்றது திரைக்கதையை பலவீனமாக்கி விட்டது. யோகி பாபு இந்த படத்திலும் காமெடி பண்றேன்னு மொக்கைப் போட்டு ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்துகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பின்னணி ஓகே ரகம் தான். ஆனால், பாடல்கள் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. ஹரி மற்றும் விஷாலின் கமர்ஷியல் படங்களின் ரசிகர் என்றால் தாராளமாக ஒருமுறை பார்க்கலாம்.