குட்நைட் விமர்சனம்
குறட்டை பிரச்சனையை அழகாக காட்டியிருக்கும் படம் தான் குட்நைட். படத்தின் விஷுவல் துவங்குவதற்கு முன்பே மோகனின்(மணிகண்டன்) குறட்டை பிரச்சனையை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்கள். அதன் பிறகு மோகனின் வாழ்க்கை, காதல் பற்றி காட்டுகிறார்கள்.
தன் சகோதரி (ரெய்ச்சல் ரெபக்கா ), அவரின் கணவர் ரமேஷ் (ரமேஷ் திலக்), அம்மா உள்ளிட்டோருடன் வசித்து வருகிறார் மோகன். அனுவை(மீதா ரகுநாத்) சந்தித்த பிறகு மோகனின் வாழக்கை நல்லவிதமாக மாறுகிறது.வித்தியாசமான ஆனால் ரசிக்கும்படியான சூழலில் அனுவுக்கும், மோகனுக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. காதல் ஏற்பட்ட வேகத்தில் திருமணம் செய்து கொள்கிறார்கள். அனுவிடம் தன் குறட்டை பிரச்சனையை சொல்லாமல் இருந்த மோகனுக்கு திருமணத்திற்கு பிறகு பிரச்சனை ஏற்படுகிறது.
தான் குறட்டை விடுவதால் அனுவால் தூங்க முடியவில்லை, அதனால் அவரின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது என்று தன்னை தானே குற்றம் சாட்டிக் கொள்கிறார் மோகன். இந்த குறட்டை மற்றும் சில குடும்ப பிரச்சனைகளை தீர்த்து சந்தோஷமாக வாழ்வாரா?விநாயக் சந்திரசேகரன் இயக்கியிருக்கும் குட்நைட் படம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரமும் தனியாக தெரிகிறது. விநாயக் தன் கற்பனையில் இருந்ததை திரையில் காட்டிய விதம் பாராட்டுக்குரியது.அனு, மோகன் இடையேயான காதல் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. அதை பார்க்கும்போது நம்மையும் அறியாமல் சந்தோஷத்தில் முகத்தில் ஸ்மைல் வருகிறது. பிரச்சனைகள் பெரிதாக ஆக, இரண்டாம் பாதியில் எமோஷன், டிராமாவாக இருக்கிறது.
குட்நைட் படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அதனாலேயே தியேட்டருக்குள் சென்றதில் இருந்து வெளியே வரும் வரை திரையை விட்டு வேறு எங்கும் கண்கள் செல்லவில்லை.
விநாயக் காட்டியிருக்கும் பிரச்சனைகளை நம்மால் உணர முடிகிறது. ரமேஷ் திலக் மற்றும் மணிகண்டன் இடையேயான உறவை அழகாக காட்டியிருக்கிறார் விநாயக். அவர்கள் இருவரும் வரும் காட்சிகள் படத்திற்கு பெரிய பலம்.
மணிகண்டனுக்கு ஜோடியாக மீதாவை தேர்வு செய்தது மிகவும் சரியான முடிவு. தன் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார் மீதா.ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், ரெய்ச்சல் ரெபக்கா ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை எல்லாம் ஓவர்டேக் செய்துவிட்டார் மணிகண்டன். வசனம் பேசுவதாக இருக்கட்டும், முகபாவனைகளாகட்டும் குறை சொல்லவே முடியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார் மணிகண்டன்.
சாதாரண காட்சிகள் கூட மணிகண்டனின் நடிப்பால் வேற வெலலில் இருக்கிறது. ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு பக்கபலம்.