கட்டா குஸ்தி விமர்சனம் இதோ
2022 ம் ஆண்டை எப்.ஐ.ஆர்., என்கிற வெற்றிப் படத்தோடு தொடங்கிய விஷ்ணு விஷால், இந்த ஆண்டின் இறுதியை வெற்றியோடு நிறைவு செய்யும் நோக்கில் வெளியிட்டுள்ள திரைப்படம், கட்டா குஸ்தி.
நடிகர் ரவி தேஜா மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்தை ரெட்ஜெய்ண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
செல்லா அய்யாவு இயக்கியுள்ள இத்திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நாளை வெளியாக உள்ளது. இன்று செய்தியாளர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்ட நிலையில், கட்டா குஸ்தி படத்தின் முதல் விமர்சனத்தை வழங்குகிறது இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்.
பொள்ளாச்சியில் பகுதியில் பண்ணைக்கார குடும்பத்தில் செழிப்பாக வளரும் விஷ்ணு விஷால். மற்றொருபுறம் கேரள எல்லையில், தனது சித்தப்பா முனீஸ்காந்தின் கட்டா குஸ்தி கலையில் அலாதி ப்ரியத்துடன் வளரும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு பெரிய சண்டைக்காரி ஆக வேண்டும் ஆசை.
ஒருபுறம் விஷ்ணுவுக்கு பெண் பார்க்கும் படலம் நடக்கிறது. இடுப்புக்கு கீழே முடி இருக்கவேண்டும், 7 ம் வகுப்பிற்கு மேல் படித்திருக்க கூடாது என் ஏராளமான கன்டிஷன்களை வைத்திருக்கிறார் விஷால். மறுமுனையில், அப்பாவுக்கு நெஞ்சுவலி, தங்கைக்கு திருமணம் செய்ய வேண்டுமானால் தனக்கு முதலில் திருமணம் ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில், விஷ்ணுவை திருமணம் செய்ய சம்மதிக்கிறார் ஐஸ்வர்யா.
சிலபல பொய்களை கூறி, அவர்களின் திருமணம் நடக்கிறது. இதற்கிடையில் விஷ்ணுவின் தாய்மாமனான கருணாஸ், ஊராட்சி தலைவராக ஊருக்கு உழைப்பவர். கிராமத்திற்கு தீங்காக வரும் தொழிற்சாலையை எதிர்க்கிறார். அவருக்கு விஷ்ணு சப்போர்ட் செய்கிறார்.
ஆலை உரிமையாளர் தான் வில்லன். கருணாஸை ஜெயிலுக்கு அனுப்ப, கருணாஸ் பணியை விஷ்ணு மேற்கொள்கிறார். விஷ்ணுவை கண்டித்து வைக்க அவரது மனைவியிடம் வில்லன் தரப்பு அறிவுறுத்துகிறது. அதை மீறி விஷ்ணு செயல்படும் போது, அவரை அடித்து துவைக்கிறது வில்லன் தரப்பு.
அதுவரை கணவனுக்கு படிந்த மனைவியாக அமைதியாக இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி, கட்டா குஸ்தி போட்டு கணவனை காப்பாற்றுகிறார் . அப்போது தான், ஐஸ்வர்யாவின் உண்மையான ரூபத்தை பார்க்கிறார் விஷ்ணு.
அதன் பின், வில்லனை எப்படி சந்தித்தார் விஷ்ணு? தனது முக்கிய நிபந்தனையை மீறிய மனைவியை என்ன செய்தார்? ஊருக்கு தொழிற்சாலை வந்ததா? வில்லன் வீழ்த்தினாரா, வீழ்த்தப்பட்டாரா? என்கிற பல்வேறு கேள்விகளுடன் இரண்டாம் பகுதி நகர்கிறது.
முதல்பாதியில் விழுந்து விழுந்து சிரிக்கும் அளவிற்கு சிறப்பான காமெடி காட்சிகளை திரைக்கதையாக்கியிருக்கிறார் இயக்குனர். உண்மையில் விஷ்ணுவுக்கு இது பெயர் சொல்லும் படமாக இருக்கப் போகிறது. குறிப்பாக, தாய்மாமன் கருணாஸ் உடன் அவர் அடிக்கும் லூட்டிகள் கலகலப்பு.
உண்மையில் படத்தில் ஹீரோ விஷ்ணுவா அல்லது ஐஸ்வர்யாவா என்கிற சந்தேகம் வராமல் இல்லை. அதில் ஐஸ்வர்யா தான் ஸ்கோர் செய்கிறார். முதல் பாதி எப்படி கலகலப்பாக போகிறதோ இரண்டாம் பாதியில் அதே கலகலப்போடு, கொஞ்சம் எமோஷனையும் கலந்திருக்கிறார் இயக்குகிறார்.
ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவு, பொள்ளாச்சி பகுதியை அப்படியே காட்டிக்கொண்டிருக்கிறது. கட்டாகுஸ்தி போடும் போது கேமரா சிலம்பு சுத்துகிறது. ஐஸ்டின் பிரகாரன் இசையில் பின்னணி ஓகே. பாடல்கள் சுமார் ரகம். கலகலப்பாக குடும்பத்தோடு பார்க்க, கட்டா குஸ்தி சரியான தேர்வாக இருக்கும் என்பதால், டிசம்பரில் கட்டா குஸ்தி கல்லா கட்டும்.
Acting
Direction
Story