அண்ணனை அழைக்கவில்லையா கங்கை அமரன் பிரேம்ஜி கல்யாணம்
தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்றால் அதில் கட்டாயம் இளையாராஜாவின் பெயர் கட்டாயம் இருக்கும். இளையராஜா இசையில் சக்ரவர்த்தி என்றால், அவரது தம்பி கங்கை அமரன் இசை, படலாசிரியர், கதாசிரியர், இயக்குநர் என பன்முகங்களைக் கொண்டவர். இவர்களது குடும்பமே சினிமா குடும்பம் எனும் அளவிற்கு சினிமாவில் இவர்கள் கால் வைக்காத இடங்கள் இல்லை என்று கூறலாம்.இதில் படலாசிரியர் கங்கை அமரனுக்கு வெங்கட் பிரபு மற்றும் பிரேம் ஜி என இரண்டு மகன்கள். இதில் வெங்கட் பிரபு தனது இயக்கத்தால் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார் என்றால், பிரேம் ஜி தனது எவர் க்ரீன் வசனமான, “என்ன கொடுமை சார் இது” என்ற வசனத்தின் மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தினை அமைத்துக் கொண்டார்.மொரட்டு சிங்கிளாக இருந்து வந்த பிரேம்ஜிக்கு திருமணம் என திருமண அழைப்பிதழ் ஒன்று இணையத்தில் வைரலானது.இதையடுத்து இதனை வெங்கட் பிரபுவும் தனது எக்ஸ் பக்க பதிவின் மூலம் உறுதி செய்தார். அழைப்பிதழில் குறிப்பிட்டதுபடி, பிரேம்ஜிக்கு இன்று அதாவது ஜூன் மாதம் 9ஆம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் கங்கை அமரன், வெங்கட் பிரபு, சென்னை -28 பட நடிகர்கள், மணமகள் குடும்பத்தார் என பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதற்கு முன்னதாக திருத்தணியில் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியும் நடைபெற்றது.பிரேம்ஜி திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது. அனைவரும் புதுமண தம்பதியருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் கங்கை அமரனின் அண்ணனும் இசைஞானியுமான இளையராஜா திருமணத்தில் கலந்து கொண்டதாகத் தெரியவில்லை. மேலும் பிரேம்ஜி திருமண அழைப்பிதழில் கூட இளையராஜாவின் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் இளையராஜா திருமணத்தில் கலந்து கொள்ளவில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.மேலும் அண்மையில் இளையராஜாவை வைரமுத்து வம்பிழுத்தபோது கூட கங்கை அமரன் மேடையில் தொண்டை கிழிய ஆவேசமாக வைரமுத்துவை காட்டமாக விமர்சித்திருந்தார். சமீபத்தில் கூட திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்யச் சென்ற இளையராஜா ஏன் திருத்தணி கோவிலுக்கு வரமாட்டாரா? என்பது போன்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது.இளையராஜா மட்டும் இல்லாமல் யுவன் சங்கர் ராஜாவும் அந்த திருமண மேடையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு முன்னதாக நடைபெற்ற ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி ஏற்பாடுகளின் போது இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் என்னதான் இளையராஜாவுக்கும் கங்கை அமரனுக்கும் பிரச்னைகள் இருந்தாலும் இளையராஜா இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்க வேண்டும் என ரசிகர்கள் பேசி வருகின்றனர். இளையராஜா வரவில்லை என்றாலும் யுவன் சங்கர் ராஜா கலந்திருக்கவேண்டும் இல்லையா எனவும் பேச்சுகள் அடிபடுகின்றது.