ஃபஹத் ஃபாசில் மற்றும் வைகை புயல் வடிவேலு கூட்டணியில் மாரீசன் திரைப்படம் விமர்சனம்

‘மாரீசன்’ விமர்சனம் பார்ப்போம்
இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு மீண்டும் வடிவேலு – ஃபஹத் ஃபாசில் கூட்டணியில் ட்ரெய்லர் கவனம் ஈர்த்துள்ளது. அந்த அளவுக்கு பலருக்கும் தெரியாமல் ‘சைலன்ட்’ ஆக வெளியான ’மாரீசன்’ படம் எப்படி இருக்கிறது என்பதை இப்போது பார்க்கலாம்.
சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு தண்டனை அனுபவித்துவிட்டு பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்து தயாளன் ரிலீஸ் ஆகிறார். பஹத் ஃபாசில் வெளியில் வந்த சிறிது நேரத்திலேயே மீண்டும் தனது திருட்டு வேலைகளை தொடங்கி விடுகிறார். குளித்துக் கொண்டிருக்கும் ஒருவரின் செல்போன், தியேட்டரில் சாவியோடு நிற்கும் பைக் என திருடிக் கொண்டு செல்லும் வழியில் ஒரு வீட்டைப் பார்த்துவிட்டு அதற்குள் திருட நுழைகிறார். அந்த வீட்டில் சங்கிலியால் கட்டிப் போடப்பட்டிருக்கும் வேலாயுதம் பிள்ளையை வடிவேலுவை சந்திக்கிறார் தயாளன்.
தனக்கு அல்சைமர் நோய் இருப்பதாகவும், தன்னை கட்டிப் போட்டு துன்புறுத்தும் தன் மகனிடம் இருந்து காப்பாற்றுமாறும் தயாவிடம் வேண்டுகோள் வைக்கிறார். வேலாயுதத்தின் வங்கிக் கணக்கில் ஏராளமான பணம் இருப்பதை அறிந்து கொள்ளும் தயா, அவருடைய ஏடிஎம் பின் நம்பரை தெரிந்து கொள்வதற்காக அவர் சொல்லும் இடத்துக்கு எல்லாம் பைக்கில் அழைத்துச் செல்கிறார். வேலாயுதம் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை தயாவால் அடைய முடிந்ததா? தயாவை வேலாயுதம் எங்கெல்லாம் அழைத்துச் சென்றார் என்பன போன்ற கேள்விகளுக்கு ‘மாரீசன்’ திரைக்கதை விடை சொல்கிறது.
‘மாமன்னன்’ படத்தில் இருந்ததைப் போலவே மிகவும் சீரியஸான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார் வடிவேலு. சொல்லப் போனால் அந்தப் படத்தில் இருந்ததை விட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம். அதை மிக அநாயசமாக, தனக்குள் இருக்கும் ‘காமெடியன்’ வடிவேலு எந்த இடத்திலும் எட்டிப் பார்த்துவிடாமல் ஒவ்வொரு காட்சியிலும் வியக்க வைக்கிறார்.
வடிவேலுவுக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் ஃபஹத் ஃபாஸில் உடையது. மலையாளத்தில் ‘தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்’ படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்தை நினைவூட்டுகிறது. வழக்கம்போல தனது இயல்பான நடிப்பால் ஈர்க்கிறார். விவேக் பிரசன்னாவுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கனமான கதாபாத்திரம், அதை அவர் கச்சிதமாக செய்துள்ளார். போலீஸாக வரும் கோவை சரளா, ஃபஹத்தின் அம்மாவாக வரும் ரேணுகா, சித்தாரா உள்ளிட்டோர் சில காட்சிகளில் வந்தாலும் ஈர்க்கின்றனர்.
எந்த பரபரப்பும் இன்றி கதாபாத்திரங்களின் அறிமுகத்துடன் நிதானமாக தொடங்கும் படம், மெல்ல முடிச்சுகள் அவிழ்ந்து இடைவேளைக்குப் பிறகு சூடுபிடிக்கிறது. நான்-லீனியரில் எந்தக் குழப்பமும் இல்லாமல் திரைக்கதையை கொண்டு சென்ற விதம் பாராட்டுக்குரியது. ஆங்காங்கே லேசான தொய்வுகள் தென்பட்டாலும் அடுத்தடுத்த காட்சிகளில் கதையை நகர்த்திச் செல்லும் விதத்தில் பார்ப்பவர்களை நிமிர்ந்து உட்கார வைத்து விடுகிறன்றனர் இயக்குநர் சுதீஷ் சங்கர்.
இடைவேளையில் பரபரப்பை கடைசி வரை கொண்டு சென்ற விதம் சிறப்பாக உள்ளது. சில காட்சிகள் யூகிக்கக் கூடிய வகையில் இருந்தாலும் அவை பெரிய குறையாக இல்லை. எனவே மாரீசன் திரைப்படம் பட்டி தொட்டி அனைத்து இடங்களிலும் கலைகட்டும். 2025 இந்த வருடத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்த திரைப்படமாக இருப்பதோடு மட்டும் இல்லமால் சிறந்த திரைப்படமாக இருக்கும்.