கஸ்டடி விமர்சனம்
ஒரு சின்ன ஊரில் சின்சியரான போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கிறார் சிவா(நாக சைதன்யா). ஆம்புலன்ஸுக்கு வழிவிட முதல்வர் தாக்ஷாயினியின்(ப்ரியாமணி) காரையே நிறுத்தும் அளவுக்கு சின்சியரானவர் சிவா.
சிவாவக்கும், ரேவதிக்கும் (க்ரித்தி ஷெட்டி) இடையே காதல் ஏற்படுகிறது. அவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்கள். ஆனால் வேலையிலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி சிவாவை மட்டும் தட்டுகிறார்கள். ஒரு நாள் இரவு ராஜு(அரவிந்த் சாமி) மற்றும் ஜார்ஜ்(சம்பத் ராஜ்) ஆகியோர் சிவா வாழ்வில் வருகிறார்கள். ராஜு குற்றவாளியாக இருந்தாலும் முக்கிய சாட்சி. அதனால் தன் கஸ்டடியில் இருக்கும் ராஜுவை சிவா எப்படியாவது பாதுகாப்பார் என்பது தெரிகிறது.
முதல் பாதியில் சிவா மற்றும் அவரின் உலகத்தை விரிவாக காட்டியிருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. ஜாதி வேறுபாட்டால் சிவாவுக்கு ரேவதியை திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோருக்கு விருப்பம் இல்லை. கோட்டாவால் வந்த சிவாவால் சரியாக வேலை செய்ய முடியாது என்று அவரின் உயர் அதிகாரி நினைக்கிறார்.
சிவாவின் உலகம் மெதுவாக நகர்கிறது. சிவா மற்றும் அவரின் காதல் கதையை தெரிந்து கொண்டாச்சே என சந்தோஷப்பட்டால் அடுத்தடுத்து வெங்கட் பிரபு கொடுக்கும் டுவிஸ்ட்டுகளில் அதெல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போலாகிவிடுகிறது.
இரண்டாம் பாதி பரபரப்பாக செல்கிறது. கவுரவத் தோற்றத்தில் வரும் ராம்கி நம்மை கவர்கிறார். ஐஜி நட்ராஜ்(சரத்குமார்) வரும் காட்சிகள் நன்றாக இருக்கிறது. ராஜு பற்றி தெரிவிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. ஆனால் சிவா மீது கவனம் செலுத்தியிருக்கிறார் வெங்கட் பிரபு.கஸ்டடி படத்தில் சில சுவாரஸ்யமான சண்டை காட்சிகள் இருக்கிறது. காவல் நிலையத்தில் நடக்கும் சண்டை காட்சி தியேட்டரில் இருப்பவர்களை கவர்கிறது. இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜாவின் இசை, பிஜிஎம் படத்திற்கு பக்கபலம்.
படத்தில் நடித்த அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நாக சைதன்யா, அரவிந்த்சாமி, க்ரித்தி ஷெட்டி தங்களின் தோள்களில் படத்தை தாங்கியிருக்கிறார்கள்.கஸ்டடி படத்தின் கதையை வெங்கட் பிரபு ஏற்கனவே சொல்லிவிட்டார். படம் பார்க்கும்போது அடுத்தது என்னவென்பதை நம்மால் கணிக்க முடிகிறது. சில கதாபாத்திரங்களை கூடுதலாக காட்டியிருக்கலாம் வெங்கட் பிரபு.