3ஆம் நாளில் இத்தனை கோடி வசூலா…அரண்மனை 4 வசூல் வேட்டை
சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த மூன்றாம் தேதி ரிலீஸானது அரண்மனை 4. இதில் சுந்தர்.சி, தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதற்கு முன்பு வெளியான அரண்மனை படத்தின் மற்ற பாகங்களைவிடவும் இந்தப் படம் அருமையாக வந்திருப்பதாக ரசிகர்கள் தங்களது பாசிட்டிவ் விமர்சனங்களை கூறிவருகின்றனர். இப்படி விமர்சன ரீதியாக பட்டையை கிளப்பிவரும் அரண்மனை 4 வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டுவருகிறது
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சுந்தர்.சி. 90களில் ஆரம்பித்த இவரது இயக்குநர் பயணம் இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஏராளமான ஹிட் படங்களை கொடுத்திருக்கும் சுந்தருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. முக்கியமாக சுந்தர்.சியின் படங்களுக்கு சென்றால் வயிறு குலுங்க சிரித்து இருக்கும் கவலைகளை மறந்து வரலாம் என்ற நிலைதான் கடந்த பல வருடங்களாகவே இருக்கிறது. அதனை அவரது படங்களும் உறுதிப்படுத்தியிருக்கின்றன.
இயக்கத்தில் படு பிஸியாக இருந்த சுந்தர்.சி திடீரென்று நடிப்பிலும் கவனத்தை செலுத்தினார். அந்த வகையில் அவர் நடித்த தலைநகரம் உள்ளிட்ட படங்களும் ஹிட்டடித்திருக்கின்றன. இருந்தாலும் அவர் தொடர்ந்து படங்கள் இயக்க வேண்டும் என்று சினிமா ரசிகர்கள் தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தனர். அதனையடுத்து சில காலம் கழித்து கலகலப்பு படம் மூலம் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்தார் அவர். அந்தப் படம் மெகா ஹிட்டானது.
சொல்லப்போனால் சுந்தர்.சிக்கு கலகலப்பு திரைப்படம் இயக்குநராக இரண்டாவது பிறப்பு. அதனை அவரும் சொல்லியிருக்கிறார். அந்தப் படம் கொடுத்த வெற்றியின் உற்சாகத்தை அடுத்தடுத்து படங்களை இயக்க ஆரம்பித்தார். அப்படி அவர் எடுத்த படம் அரண்மனை. படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. தொடர்ந்து அரண்மனை 2, அரண்மனை 3 படங்களை இயக்கினார். இந்த இரண்டு பாகங்களும் ஃபேமிலி ஆடியன்ஸையும், குழந்தைகளையும் கவர்ந்துவிட்டது. அரண்மனை 4: இந்தச் சூழலில் தற்போது அரண்மனை படத்தின் நான்காவது பாகத்தை இயக்கியிருக்கிறார் அவர். இதில் சுந்தர்.சி, தமன்னா, ராஷிகண்ணா, கோவை சரளா, யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். எதிர்பார்த்தபடியே இந்தப் படமும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதிலும் தமன்னாவின் நடிப்பு, கிராஃபிக்ஸ் காட்சிகள் அனைத்துமே சிறப்பாக இருக்கிறது என்று ரசிகர்கள் தங்களது பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துவருகின்றனர். மேலும் 2024ஆம் ஆண்டுக்கான முதல் கோலிவுட் ஹிட் படமாக இது அமைந்திருக்கிறது.
இந்நிலையில் அரண்மனை 4 படத்தின் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி படம் வெளியான முதல் நாளில் 4.65 கோடி ரூபாயும், இரண்டாவது நாளில் 6.25 கோடி ரூபாயும் வசூல் செய்து முதல் இரண்டு நாட்களிலேயே 10 கோடி ரூபாய் வசூலை தாண்டியது. இப்போது மூன்றாவது நாளான நேற்றைய வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் திரையரங்குகளில் கூட்டம் நல்லபடியாகவே இருந்தது. எனவே நேற்று மட்டும் இந்தப் படம் கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய்வரை வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. எனவே படம் வெளியாகி மூன்று நாட்களில் மொத்தம் அந்தப் படம் 17 கோடி ரூபாய்வரை வசூலை அள்ளியிருக்கிறது. படத்துக்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்துகொண்டிருப்பதால் இனிவரும் நாட்களிலும் கூட்டம் அதிகரித்து வசூலில் சக்கைப்போடு போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகமொத்தம் அரண்மனை 4 படத்தை சுந்தர்.சி பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் செய்திருக்கிறார் என்று திரைத்துறையினர் பேச ஆரம்பித்திருக்கின்றனர்.