காப்பியையே காப்பி அடிச்ச …தெலுங்கு சினிமா பேட்டியில் சொன்ன சுந்தர் .சி
சுந்தர்.சி இப்போது அரண்மனை படத்தின் நான்காவது பாகத்தை இயக்கியிருக்கிறார். படமானது விரைவில் வெளியாகவிருக்கும் சூழலில் அதற்கான ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. அந்தவகையில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுந்தர்.சி தெலுங்கு திரையுலகம் பற்றி பகிர்ந்துகொண்ட விஷயம் சமூக வலைதளங்களில் படு ட்ரெண்டாகியுள்ளது. அதனைப் பார்த்த ரசிகர்கள்; என்ன தெலுங்கு திரையுலகம் இப்படியெல்லாம் இருந்திருக்கே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சுந்தர்.சி. இதுவரை ஏராளமான ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். சுந்தர்.சியின் படத்துக்கு சென்றால் வயிறு வலிக்க சிரித்துவிட்டு வரலாம் என்பதுதான் ரசிகர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை பெரும்பாலும் சுந்தர்.சியும் காப்பாற்றியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அவரது படங்கள் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது. இந்தச் சூழலில் அவர் இப்போது அரண்மனை 4 படத்தை இயக்கியிருக்கிறார்.
இதுவரை சுந்தர்.சி இயக்கிய அரண்மனை சீரிஸில் இதற்கு முன் வந்த மூன்று பாகங்களும் டீசண்ட்டான வரவேற்பையே பெற்றிருக்கின்றன. எனவே அரண்மனை 4 படத்துக்கும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இதில் ராஷி கண்ணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். விரைவில் படம் ரிலீஸாகவிருப்பதால் அதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் சூடு பிடித்திருக்கின்றன. இந்தச் சூழலில் தெலுங்கு திரையுலகத்தை பார்த்து சுந்தர்.சி காப்பி அடித்த காட்சியை மீண்டும் தெலுங்கு திரையுலகம் காப்பி அடித்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.
அதாவது ஒருமுறை சுந்தர்.சியை தயாரிப்பாளர் ஒருவர் அணுகி படம் ஒன்று செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார். சுந்தர்.சியும் சரி என்று ஒத்துக்கொள்ள; அந்த சமயத்தில் ஹிட்டான தெலுங்கு படங்களை ரீமேக் செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர். சரி என்று தயாரிப்பாளர் சிபாரிசு செய்த தெலுங்கு படங்களை பார்த்த சுந்தர்.சிக்கு ஒரே அதிர்ச்சியாம். ஏனெனில் அவருடைய மூன்று படங்களை தெலுங்கு திரையுலகம் காப்பி அடித்திருந்ததாம்.
இதனால் கோபமடைந்த சுந்தர்.சி ; என் படங்களையா காப்பி அடிக்கிறீங்க. இருங்க உங்கள்ட்டேர்ந்து காப்பி அடித்து நான் படம் எடுக்கிறேன் என்று நினைத்து; 10 தெலுங்கு படங்களின் டிவிடியை பார்த்து வின்னர் படத்தை எடுத்தாராம். இருந்தாலும் அப்படியே காப்பி அடிக்கக்கூடாது என்று முடிவெடுத்து ஒரு சீனை மாற்றினாராம். அதாவது, சுந்தர்.சி பார்த்த தெலுங்கு சீனில் காப்பாற்றுங்க என்று ஹீரோயின் சொன்னதும் ஹீரோ ஓடி வரும்போது ஒரு MATன் கீழே வாழைப்பழ தோல் வழுக்கி விழும்படி இருக்குமாம்.
அதனை வின்னர் படத்தில் MATன் கீழே கோலி குண்டுகளை வைத்து ஹீரோவுக்கு பதில் வடிவேலு ஓடி வருவதுபோன்றும்; அப்போது வழுக்கி விழும் வடிவேலு ஒரு பந்து போல் அங்கும் இங்கும் சுவற்றில் மோதி விழுவது போன்றும் மாற்றி அமைத்தாராம். வின்னர் படமும் வெளியாகி மெகா ஹிட்டாகிவிட்டது. பட ரிலீஸுக்கு பிறகு சுந்தர்.சி ஒரு தெலுங்கு படத்தின் ட்ரெய்லரை பார்த்தாராம். அதில், வின்னர் படத்தில் சுந்தர்.சி வைத்திருந்த காட்சியை அப்படியே வைத்திருந்தார்களாம். இதனைப் பார்த்த சுந்தர்.சி, அடேங்கப்பா நானே தெலுங்கு சினிமாவை பார்த்துதான் காப்பி அடித்து எடுத்தேன் அந்த சீனையும் விட்டுவைக்காம அதையே மீண்டும் காப்பி அடித்திருக்கிறார்களே. உண்மையில் நாம் தோற்றுவிட்டோம் என்று நினைத்து நொந்துகொண்டாராம். இதனை சுந்தர்.சி ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.