சார்ல்ஸ் என்டர்பிரைசஸ் விமர்சனம்
குடும்பக் கோயிலில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வணங்கி வருகிறார், கணவர் குமாரசாமியை (குரு சோமசுந்தரம்) பிரிந்து வாழும்கோமதி (ஊர்வசி). அவருக்கு அதை வைத்து கோயில் கட்ட ஆசை. அவர் மகன் ரவிக்கு (பாலு வர்கீஸ்) மாலைக் கண் நோய் இருக்கிறது. இதனால் திருமணம் தடைபடுகிறது. அவருக்குத் தனியாகத் தொழில் தொடங்க விருப்பம். அதற்குப் பணம் தேவைப்படும் நேரத்தில், அவர் வீட்டில் இருக்கும் சிலை புராதனமானது என தெரிய வருகிறது. அதை விலை பேசுகிறது ஒரு கும்பல். முதலில் மறுக்கும்ரவி, ஒரு கட்டத்தில் சார்ல்ஸ் (கலையரசன்)உதவியுடன் அம்மாவுக்குத் தெரியாமல் திருடி, விற்க முடிவு செய்கிறார். அதை நிறைவேற்றினாரா? நினைத்தபடி தொழில் தொடங்க முடிந்ததா? அவர் அம்மாவின் கோயில் கனவு என்னவானது என்பது மீதிகதை.
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கும் படம். சுவாரஸ்யமாகச் சொல்வதற்கான அதிக சாத்தியக்கூறுகளைக் கொண்ட கதையை, கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் சுபாஷ் லலிதா சுப்பிரமணியம். ஆனால், அதை சொன்னவிதத்தில் தடுமாற்றம். முதல் 45 நிமிடக் கதை எங்கெங்கோ சென்று, புராதன விநாயகர் சிலை, அதை வாங்க நினைக்கும் கும்பல் என திரைக்கதை விரிந்ததும், பரபரக்கும் த்ரில்லர் எபெக்ட் வந்துவிடுகிறது. அது, கூடவே எதிர்பார்ப்பையும் கொண்டு வந்துவிடுகிறது.
பிறகு, பார்வை சரியாகத் தெரியாத நாயகன் தடுமாற்றத்துடன் இரவில் சிலையைத் திருடுவது, தெருவுக்குள் புதிதாக வரும் சிசிடிவி கேமரா, நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நிற்கும் கார், அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சிலை என இரண்டாம் பாதி பதற்றத்தைக் கூட்டினாலும் மெதுவாக நகரும் கதை பொறுமையை சோதிக்கிறது. ஆனாலும் சார்ல்ஸ் வரும் இடங்கள் ரசிக்க வைக்கின்றன. அவருக்கும் ரவிக்கும் இடையிலான காட்சிகளும் வசனங்களும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால், அந்த ‘கிளிஷே’கிளைமாக்ஸ் ஏமாற்றம்.
அதிக பக்தி கொண்ட அம்மா ஊர்வசியையும், அப்பா குரு சோமசுந்தரத்தையும் சரியாகப் பயன்படுத்தவில்லை. பார்வை குறைபாடு உடைய, சொந்த வீட்டிலேயே திருட துணியும் ரவியாக பாலு வர்கீஸ், சாதாரண இளைஞனை அசலாக பிரதிபலித்திருக்கிறார். கலையரசன் திருடன் என்றாலும் அவர் நடிப்பில் வழக்கம் போல யதார்த்தம். சிலைக்கு விலைபேசும் அபிஜா சிவகலா, அவர் உதவியாளர் மணிகண்டன் ஆச்சாரி, கலையரசன் ஜோடியாக வரும் மிருதுளா ஆகியோர் தங்கள் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
இரவில் பார்ப்பதற்காக மருத்துவர் சிறப்புக் கண்ணாடியை கொடுத்த பிறகும் நாயகன் தடுமாறுவது ஏன்? நாயகன் வீட்டில் கலையரசன் இருக்கும்போது, அம்மா வந்ததற்காக அவரை விரட்ட வேண்டிய அவசியம் என்ன? கையில் தூக்கிச் செல்லும் அளவுக்கே இருக்கும் சிலையை காரில் இருந்து எடுப்பது அவ்வளவு கடினமானதா? என்பது போன்ற கேள்விகளும் எழாமல் இல்லை. இந்தக் குறைகளைக் களைந்திருந்தால் இன்னும் ஈர்த்திருக்கும்.