கேப்டன் மில்லர் விமர்சனம்
பிறப்பதற்கு முன்பே அப்பாவை இழந்த ஈஷா (கேப்டன் மில்லர்) ஊர் கலவரத்தில் அம்மாவையும் இழக்கிறான். மற்றொரு பக்கம் அவனின் அண்ணன் செங்கய்யா (சிவராஜ்குமார்) ஆங்கிலேயர்களை எதிர்த்து புரட்சி செய்து வருகிறார். ஒருக்கட்டத்தில் இங்குள்ள அரசர்களிடம் அடிமையை இருப்பதற்கு பதிலாக ஆங்கிலேய காவல் படையில் சேர்ந்தால் மரியாதை கிடைக்கும் என நினைத்து தனது அண்ணனை எதிர்த்து பட்டாளத்தில் சேருகிறான் ஈஷா.
ஆனால் அந்த ஆங்கிலேயர்களையே எதிர்த்து துப்பாக்கி ஏந்தும் அளவிற்கு ஈஷாவின் வாழ்வில் ஒரு நிகழ்வு நடக்கிறது. அந்த நிகழ்விற்கு பின் கண்ணில் தோன்றும் ஆங்கிலேயர்கள் அனைவரையும் சராமாரியாக சுட்டு தள்ளுகிறான். அப்படி அவன் வாழ்வில் நடந்த சம்பவம் என்ன? கிராமத்தில் ஈஷாவாக சுற்றி திரிந்தவன் கேப்டன் மில்லராய் மாறியது எப்படி? அவனை அப்படி மாற்றியது யார் என்பதற்கான விடைகளே ‘கேப்டன் மில்லர்’.
கேப்டன் மில்லராக தனுஷ் கிராமத்து விடலை பையனாக அறிமுகமாகி, பார்த்தவுடன் காதலில் விழுவது, பின்னர் போராளியாக மாறுவது என தன்னுடைய கதாபாத்திரத்தை ரசித்து ரசித்து செய்துள்ளார். ஆங்கிலேயர்களை எதிர்த்து அவர் ஆயுதம் ஏந்தும் போதெல்லாம் ‘எவனையும் விடாதீங்க அண்ணே, சுட்டு தள்ளுங்க’ என ரசிகர்கள் திரையரங்கில் கூச்சல் கொடுக்கும் அளவிற்கு ஆக்ரோஷமாக நடிப்பில் மிரட்டியுள்ளார்.
தனுஷின் சின்ன சின்ன அசைவும் ரசிகர்களுக்கு கட்டாயம் கூஸ்பம்ஸ் கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அவருடைய அண்ணனாக சிவராஜ்குமார். ‘ஜெயிலர்’ படம் மூலமாக தென்னிந்திய சினிமாவில் தனி ரசிகர்களை பெற்றிருக்கும் சிவாண்ணாவுக்கு அசத்தலான கதாபாத்திரம். ஜெயிலரில் வெறும் டிஷ்யூ பேப்பரை வைத்து மாஸ் காட்டியவர் கையில் மிஷின் கன்களை கொடுத்தால் சும்மா இருப்பாரா என்ன? மனுஷன் புகுந்து விளையாடி இருக்காரு.
வன்முறை என்பது ஒரு உணர்வு என்பதை தனது பல பேட்டிகளில் கூறி வரும் அருண் மாதேஸ்வரன், ‘கேப்டன் மில்லர்’ படத்திலும் நீதிக்கு தேவை போர் தான் என்ற தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்று அழுத்தமான அரசியல் பேசியுள்ளார். அவரின் முந்தைய படங்களான ராக்கி, சாணிக்காயிதம் அளவிற்கு கேப்டன் மில்லரில் இரத்தம் தெறிக்கும் காட்சிகள் இல்லை என்பது ஆறுதல்.
அருண் மாதேஸ்வரன் மற்றும் மதன் கார்க்கியின் கூர் தீட்டப்பட்ட வசனங்கள் படம் நெடுகிலும் ஒலிப்பதுடன், அவை பார்வையாளன் மத்தியிலும் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்து. நம்ம பக்கத்துல வரக்கூடாதுன்னு எந்த சாமியும் சொல்லை. ‘ஏன் ஒரு கெட்டவனை இன்னொரு கெட்டவன் கொல்லக்கூடாதா?’, ‘நீ யாரு? உனக்கு என்ன வேணும்ங்கறதை பொறுத்து, நான் யாருன்றது மாறும்’ என்பதை போன்ற நச் வசனங்கள் தனிக்கவனம் ஈர்க்கின்றன.
‘கேப்டன் மில்லர்’ படத்தின் முக்கியமான தூண் அல்லது இன்னொரு ஹீரோ என்றே ஜிவி பிரகாஷை சொல்லலாம். அந்தவிற்கு படத்தின் வேகத்துக்கு ஏற்ப பின்னணி இசையில் தெறிக்க விட்டுள்ளார். ரிலீசுக்கு முன்பாகவே பல பேட்டியில் சொன்னதை போன்றே ‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு வெறித்தனமான இசையை கொடுத்துள்ளார்.
படம் நெடுகிலும் ஒலிக்கும் துப்பாக்கி சப்தங்களும், குண்டு வெடிப்பகளும் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். அதுவே சிலருக்கு இப்படத்தை திரையில் கொண்டாட காரணமாகவும் அமையலாம். மற்றபடி வன்முறைக்கு வன்முறை என்ற அருண் மாதேஸ்வரனின் ஸ்டைலில், தனுஷ் ரசிகர்களுக்கான பொங்கல் ட்ரீட்டாக அமைந்துள்ளது இந்த ‘கேப்டன் மில்லர்’.