நடுக்கடலில் நடக்கும் மரண போராட்டம்.. யோகி பாபுவின் போட் தியேட்டரில் பார்க்கலாமா.?
காமெடியனாக ஒரு பக்கம் கலக்கி வரும் யோகி பாபு கதையின் நாயகனாக மறுபக்கம் நம்மை ரசிக்க வைக்கிறார். கடந்த வாரம் இவருடைய நடிப்பில் சட்னி சாம்பார் வெப் தொடர் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
அதை அடுத்து இந்த வாரம் சிம்புத்தேவன் இயக்கத்தில் யோகி பாபு, கௌரி கிஷன், எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் போட் வெளியாகி உள்ளது. சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களம் இறங்கியுள்ள சிம்புத்தேவன் இப்படத்தின் மூலம் கரை சேர்ந்தாரா என்பதை விமர்சனத்தின் மூலம் இங்கு காண்போம்.
1943 ஆம் ஆண்டு நடக்கும் கதையாக படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் உலகப்போர், சுதந்திரப் போராட்டம் என நடந்த காலகட்டத்தில் ஜப்பான் இந்தியா மீது குண்டு மழை பொழிகிறது. இதனால் உயிர் பயத்தில் சென்னையில் உள்ள மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள போராடுகிறார்கள்.
அப்போது யோகி பாபு தன் பாட்டியுடன் சிறை கைதியாக இருக்கும் தன் தம்பியை மீட்டு படகின் மூலம் நடு கடலுக்கு தப்பிக்க முயற்சி செய்கிறார். அப்போது இன்னும் ஆறு பேர் அதே படகில் ஏறி தப்பி செல்கின்றனர்.
அப்போது நடுக்கடலுக்கு செல்லும் போது படகில் விரிசல் விழுகிறது.
இதனால் ஒவ்வொருவரும் தங்களை காப்பாற்றிக் கொள்ள மற்றவர்களின் உயிரை பணயம் வைக்க முயல்கின்றனர்.
இந்த போராட்டத்தில் போட் கரை ஒதுங்கியதா? அல்லது நடுக்கடலில் மூழ்கியதா? மரண பயத்தில் தவித்துக் கொண்டிருந்த ஒன்பது பேரின் நிலை என்ன? என்பதை இயக்குனர் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் காட்டியுள்ளார்.
நடுக்கடலில் பயணிக்கும் 9 பேரை சுற்றி தான் கதைக்களம் என்பதால் பார்வையாளர்களுக்கு போர் அடிக்காமல் கதையை கொண்டு செல்ல வேண்டும். அதை உணர்ந்து சுவாரஸ்யமாக கொண்டு சென்ற இயக்குனருக்கு பெரிய பாராட்டு கொடுக்கலாம்.
அதேபோல் படத்தின் மிகப்பெரிய பலமே வசனங்கள் தான். தற்போதைய காலகட்டத்தில் நடக்கும் பிரச்சனைகளை நாசுக்காக வசனங்கள் மூலம் தெறிக்கவிட்டுள்ளார் இயக்குனர். இதற்கு அடுத்தபடியாக ஜிப்ரானின் இசை கதையோடு பயணிக்கும் படி பொருந்தி இருக்கிறது.
சீரியஸான கதைகளம் என்பதால் காமெடி கொஞ்சம் குறைவு தான். ஆனால் அது எதுவும் படத்தை பாதிக்காத அளவுக்கு செண்டிமெண்ட் காட்சிகள் இருக்கிறது. அதேபோல் கிளைமாக்ஸ் காட்சியில் இருக்கும் அந்த ட்விஸ்ட் எதிர்பாராததாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது.
இப்படியாக யோகி பாபு கதையின் நாயகனாக ஸ்கோர் செய்திருக்கிறார். அதேபோல் சிம்பு தேவனுக்கு இப்படம் நல்ல ஒரு கம்பேக்காக அமைந்துள்ளது. ஆக மொத்தம் இந்த போட்டை தாராளமாக தியேட்டரில் ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்.