Now Reading
பஹீரா விமர்சனம்

பஹீரா விமர்சனம்

ஆண்களை ஏமாற்றுவதாகக் குற்றம்சாட்டி, சில பெண்களை கரடி பொம்மையை வைத்துத் தொடர் கொலைகள் செய்கிறான் ஒரு கொலையாளி. மறுபுறம், தனக்கு வெவ்வேறு பெயர்களை வைத்துக்கொண்டு நான்கு பெண்களைத் திருமணம் செய்து, அவர்களைக் கொலை செய்யத் திட்டமிடுகிறார் ‘பஹீரா’வான பிரபுதேவா. அந்தக் கரடி பொம்மை கொலையாளி யார், அவனும் பிரபுதேவாவும் பெண்களைக் குறி வைக்க என்ன காரணம், தொடர் கொலையாளியாக மாறிய பிரபுதேவா கடைசியில் அதிலிருந்து மீண்டாரா என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில், பல டன் அபத்தக் கருத்துகளைக் கொட்டி, நமக்கு விடை சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன்.

‘பஹீரா’ கதாபாத்திரத்தில் வரும் பிரபுதேவாதான் மொத்தத் திரைப்படத்திலும் நிறைந்திருக்கிறார். பெண் வேடம், மொட்டை வேடம் எனப் பல வேடங்கள் கட்டி, கொலை செய்கிறார். பிரபுதேவாவிற்கே உரிய நக்கலும், நடன பாணியிலான உடல்மொழியும் காமெடிக்கு உதவியிருக்கிறது

இரண்டாம் பாதியில், ‘பஹீரா’ ஒரு தொடர் கொலைகாரனாக மாறியதற்கான காரணத்தை விளக்கும் பின்கதை மட்டும் கொஞ்சம் நிதானம் காட்டுகிறது. ‘பஹீரா’வின் குழந்தைப் பருவத்தை ‘அனிமேஷன்’ கலந்து காட்டும் அந்தப் பகுதி மட்டும்தான் மொத்த படத்திலும் ஆறுதல் தரும் விஷயம். இத்தனை கொடூர கொலைகள் நடக்கும்போதும், எவ்வித அறிவுப்பூர்வமான செயற்பாட்டிலும் இறங்காமல், வெறுமனே கத்திக்கொண்டு, செல்போன் டிராக் செய்துகொண்டு வேறொரு உலகத்தில் இருக்கிறது காவல்துறை. அதனாலேயே தொடர் கொலைகாரன் vs காவல்துறை என்கிற ‘டாம் அண்ட் ஜெர்ரி’ விளையாட்டு எவ்வித பரபரப்பையும் கூட்டவில்லை.

‘நல்ல தமிழ்ப் பொண்ணுங்க, புருஷன தவிர யார் தொட்டாலும் கோபப்படுவாங்க’, ‘ஒரு பொண்ணு ஒரு பையன ஏழு வருஷமா லவ் பண்ணுதா? நம்பவே முடியலயேமா’ போன்ற வசனங்களை எப்படித் தற்கால இயக்குநர் ஒருவரால் எழுத முடிகிறது என்பதே அதிர்ச்சியாக இருக்கிறது. ‘எத்தன பையன ஏமாத்திருப்ப… போ’ எனக் கூறி பாலியல் வன்கொடுமையை ஒரு சராசரி நிகழ்வைப் போலக் காட்ட முற்பட்டிருப்பது இளைஞர்களின் மனதில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சமூகப் பொறுப்புடன் யோசித்திருக்க வேண்டாமா? ‘பொண்ணுங்களுக்கு ஒண்ணுன்னா மாதர் சங்கம் வரும். பசங்களுக்கு ஒண்ணுன்னா ‘பஹீரா’ வருவான்’ என்ற பன்ச் வசனம் மூலம் என்ன சமூகக் கருத்தைச் சொல்ல வருகிறார் என்பது இயக்குநருக்கே வெளிச்சம்.
படத்தில் ஒரு சில காட்சிகள் தவிர்த்து, மற்றவை எல்லாம் இரவிலேயே நடக்கின்றன. மேலும், பல காட்சிகள் ஒரே மாதிரியான இடத்திலேயே மீண்டும் மீண்டும் நடப்பது சுவாரஸ்யமின்மையைக் கூட்டுகிறது. இவற்றை எல்லாம் தாண்டி ஜொலிக்க வாய்ப்பிருந்தும், ஒரு சராசரி பணியையே செய்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் அபிநந்தன் ராமானுஜமும், செல்வகுமாரும். கணேசன் சேகரின் இசையில் பாடல்கள் துள்ளலாக இருந்தாலும், திரைக்கதையிலிருந்து விலகியே நிற்கின்றன. பின்னணி இசை சில இடங்களில் நச். ஆனால், இடைவேளை இல்லாமல் இசையை நிரப்பித் திகட்ட வைத்திருக்கிறார்கள்.
Pros

Acting

Cons
What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)