Now Reading
அயோத்தி விமர்சனம்

அயோத்தி விமர்சனம்

“உன்னையும் என்னையும் ஒன்றிணைக்கும் வாழ்வில் அன்புதான் பாலமாகுமே” என படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரிதான் ஒட்டுமொத்த படத்தின் ஒன்லைன்.

அயோத்தியில் தீவிர இந்து குடும்பம் பல்ராமுடையது. ஆணாதிக்க மனோபாவம் கொண்ட அவர் தனது மனைவி, மகள், மகனுடன் இணைந்து ராமேஸ்வரத்திற்கு புனித யாத்திரை பயணத்தை மேற்கொள்கிறார். அந்தப் பயணத்தில் விபத்து ஏற்பட்டு பல்ராம் குடும்பத்தில் ஒருவர் இறக்க, பரிச்சயமில்லாத, மொழி தெரியாத ஊரில் சிக்கிக்கொள்கின்றனர். இறுதியில் இறந்த சடலத்துடன் தங்கள் சொந்த ஊரான அயோத்திக்கு அவர்கள் திரும்பிச்சென்றது எப்படி? அவர்களுக்கு உதவியது யார்? அதில் ஏற்பட்ட சிக்கல்கள் என்ன? – இதுதான் படத்தின் திரைக்கதை.

மதம், இனம், மொழிகளைக் கடந்தது மனிதம் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்ல முனைந்திருக்கும் இயக்குநர் மந்திரமூர்த்தி சொற்ப கதாபாத்திரங்களின் வழி அதை நிறுவுகிறார். ‘ஜெய் ஸ்ரீராம்’ பாடலுடன் அயோத்தி மண்ணில் தொடங்கும் படம் தமிழகத்தில் நுழைந்து வேகமெடுக்க தேவையான நேரத்தை எடுத்துக்கொண்டு விரிவடைகிறது. பல்ராமின் ஆதிக்க மனபான்மையால் பாதிக்கப்படும் குடும்பம், தமிழர்கள் மீதான அவரது பார்வை, எதிர்பாரா விபத்து என நீளும் படத்தின் முதல் பாதி கதையின் நோக்கம் தொடர்பான கேள்விகளை எழுப்பினாலும் பெரிய அளவில் தொய்வில்லாமல் நகர்கிறது.

இருவேறு மாநில மண்ணைச் சேர்ந்தவர்கள் ‘மனிதம்’ என்ற ஒற்றைப் புள்ளியில் இணையும் இடம், மொழி என்பது வெறும் தொடர்பியல் ஊடகம் தான் என்பதை விளக்கி, பாஷைகள் புரியாவிட்டாலும் உணர்வுகள் எல்லோருக்கும் பொதுவானது என்பதை படம் நெடுங்கிலும் கடத்தியிருந்த விதம் ஈர்ப்பு. ‘உசுறோட இருக்கறவங்க செஞ்சதா மறந்துட்வாங்க. ஆத்மா மறக்காது’ வசனத்துடன் ஆங்காங்கே வரும் அழுத்தமான எமோஷனல் காட்சிகள் திரைக்கதையின் ஓட்டத்திற்கு உயிர்கொடுக்கின்றன.

‘அயோத்தி’ காட்சிப்படுத்தும் உலகில் மனிதர்கள் அனைவரும் புனிதர்கள். எந்த அளவிற்கென்றால், தீபாவளி அன்று கூட அரசு மருத்துவமனை டீன் கையெழுத்திடுவது, தனியார் மருத்துவமனையினர் எம்பாமிங் செய்ய அரசு மருத்துவமனைக்கு தனது ஊழியரை ஃப்ரீயாக அனுப்பி பணிச்செய்ய சொல்லுவது, காவல் துறையிடம் நடக்கும் சிக்கலில்லாத விசாரணை, ஆவணப் பிழைத்திருத்தம் இருந்தபோதிலும் க்ளியரன்ஸ் செய்து கொடுக்கும் அதிகாரி, பைக்கை விற்று பணம் கொடுக்கும் நண்பர் என நெடுங்கிலும் இத்தனை நல்லுங்களா?. உண்மையில் அப்படியான மனிதம் மிக்க உலகை நாமும் காண ஆசை தான். ஆனால் யதார்த்தம் அதிலிருந்து விலகியிருப்பதாலும், சில இடங்களில் ஹீரோயிசத்தின் மிகையாலும் படத்துடன் ஒன்ற முடியவில்லை.

ஓரிடத்தில், ‘நம்மூர்ல ரேஷன் கார்ட்ல இன்ஷியல் மாத்துறதுக்கே ஒரு மாசம் ஆக்குவாங்க, இத்தனை டாக்குமென்ட் எப்டி சார் வாங்க’ என வசனம் பேசும் சசிகுமார் ஒரேநாளில் எல்லா ஆவணங்களையும் திரட்டுவது அவர் பேசும் யதார்த்த வசனத்துக்கு அவரின் செயல்பாடு ஆகப்பெரும் முரண். மனிதத்தை பேசும் படத்தின் எளிய பிணவறை ஊழியர் ஒருவர், உண்டியல் உடைத்து சிறுவன் கொடுக்கும் காசை வாங்குகிறார். அதேசமயம் போஸ்வெங்கட் போன்ற முதலாளி இலவசமாக உதவ வருவதாக காட்சிப்படுத்தியிருக்கும் விதம் கருத்தியல் நெருடல்.

See Also

என்.ஆர்.ரகுநந்தனின் பின்னணி இசை தேவையான உணர்ச்சிகளை கடத்த உதவியிருக்கிறது. பாடல்கள் ரசிக்க வைத்தாலும், ‘திருட்டு பயல’ பாடல் கதைக்கு தேவையில்லாத திணிப்பு. இறுதியில் வரும் பாடல்களும் வரிகளும் கதைக்கு பலம். மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு காட்சிகளை ரசிக்க வைக்கிறது.

மொத்தத்தில் மனிதநேயத்தை வலியுறுத்தும் படம் தர்க்கப் பிழைகளையும், சில பல குறைகளையும் தாண்டி, அதன் நோக்கத்திற்கு முடிந்த அளவுக்கு நியாயம் சேர்த்திருக்கும் விதத்தில் கவனம் பெறுகிறது.

Pros

Acting

Story

Direction

Cons
What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)