Now Reading
அயலான் விமர்சனம்

அயலான் விமர்சனம்

“இன்று நேற்று நாளை” திரைப்படம் மூலம் அறிவியல் புனைவு ஜானரில் அழுத்தமாக முத்திரை பதித்து கவனிக்கவைத்த இயக்குநர் ஆர்.ரவிக்குமாரின் இரண்டாவது படம். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  ரகுல் ப்ரீத் சிங், யோகிபாபு, ஈஷா கோபிகர், ஷரத் கேல்கர், கருணாகரன், பானுப்பிரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கொடைக்கானலின் பூம்பாறை கிராமத்தில் புல், பூண்டு, பூச்சிக்கும் கேடு விளைவிக்காமல் இயற்கை ஆர்வலராக, பிழைக்கத் தெரியாத நபராக விவசாயம் செய்தபடி வலம் வரும் சிவகார்த்திகேயன், தன் அம்மாவின் கவலைக்கு மனமிறங்கி சென்னைக்கு சம்பாதிக்க வருகிறார்.

மற்றொருபுறம் பூமியின் அடுத்த தசாப்தத்தை ஆளப்போகும் எரிவாயு எனக் கூறி நோவா கேஸ், ஸ்பார்க் எனும் கனிமத்தை பூமியின் பல அடி ஆழத்துக்கு துளை போட்டு எடுக்க சென்னையைச் சேர்ந்த வில்லன் மற்றும் அவரது பெருநிறுவனம் சார்பில் ரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றுக்கு இடையே, மனிதர்களுடன் சண்டை போட்டு பூமியை அழிக்க வரும் ஹாலிவுட் பட ஏலியன்களுக்கு மாறாக, பூமியை வில்லன்கள் குழுவிடமிருந்து காப்பாற்ற  “ய்டூவூய்” எனும் உலகத்திலிருந்து பூமிக்கு வருகை தருகிறது படத்தின் ”ஹீரோ” ஏலியன்.

ஆனால், “பூமியின் மிக மோசமான உயிரினம் மனிதன், அவர்கள் கைகளில் மட்டும் சிக்கிவிடாதே” என தனக்கு கொடுக்கப்பட்ட இன்ஸ்ட்ரக்‌ஷன்களுக்கு மாறாக, தான் வந்த வேலையை முடித்த கையுடன், மனிதர்களுக்கு தன் சுவடுகளை விட்டுச் செல்வதோடு, தன் விண்கலத்தையும் சக்திவாய்ந்த வில்லன் குழுவிடம் பறிகொடுக்கிறது ஏலியன்.

இதனிடையே சிவகார்த்திகேயனுக்கு பயம் காண்பித்து அறிமுகமாகி,  அவரது நண்பர்கள் குழுவில் ஐக்கியமாகும் ஏலியன், தன் விண்கலத்தை வில்லன்கள் குழுவிடமிருந்து எப்படி மீட்டது, சிறு கிராமத்தில் இருந்து வந்த சிவகார்த்திகேயனுக்கும் ஏலியனுக்கும் உள்ள தொடர்பு என்ன, ஏலியன் பூமிக்கு வந்த நோக்கம் நிறைவேறியதா எனும் கேள்விகளுக்கான விடைகளை தமிழ் சினிமாவின் கமர்ஷியல் அம்சங்களுடன் சேர்த்து சொல்லியிருக்கிறார்கள்.

தன் வழக்கமான குறும்பு, துள்ளல் மற்றும் மாஸ் அம்சங்களுடன் திரையில் சிவகார்த்திகேயன்.. ஆனால் முதல் ஹீரோ ஏலியன் “டாட்டூ”. தமிழ் திரையில் ஏலியனை இத்தனை அநாயாசமாக முதன்முறையாக உலவவிட்டுள்ள இயக்குநர் ஆர்.ரவிக்குமார் மற்றும் அவரது ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் பாராட்டுகள். அறிமுகக் காட்சி தொடங்கி, மனிதர்களை கண்டு பயப்படுவது, குழந்தைகளுக்கு மத்தியில் நடமாடுவது, பூமியின் அத்தனை பொருட்களையும் ஸ்கேன் செய்து தெரிந்து கொள்வது என ஏலியனை திரையில் ரசிக்கும்படியாக உலவவிட்ட ஒட்டுமொத்த சிஜி குழுவினருக்கும் பாராட்டுகள்!

சித்தார்த்தின் குரல் க்யூட்டான ஏலியனுக்கு நல்ல தேர்வு. தமிழ், தெலுங்கு சினிமாவின் வழக்கமான பிளாஸ்டிக் ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங். யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களுக்கு தேவையானதைக் கொடுத்து காமெடிக்கு பஞ்சமில்லாமல் செய்கின்றனர்.

See Also

வில்லன்கள் படையில் ஷரத் கேல்கர், ஈஷா கோபிகர் கவனிக்க வைக்கின்றனர். வில்லன்கள் கேம்புக்குள் நுழைந்து அயலான் ஸ்பார்க்கை எடுக்கும்போது தடதடக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மற்ற இடங்களில் ஆர்வமூட்டவில்லை.. ஷங்கரின் சைன்ஸ் ஃபிக்‌ஷன் படங்களில் மேஜிக் செய்யும் ரஹ்மான், அயலானில் மிஸ்ஸிங்!

“பிளாஸ்டிக்.. இது மக்க 300 வருஷமாகும்”, “பூமியின் மிக மோசமான உயிரினம் மனிதர்கள்”  என அறிவியல் மற்றும் அவல நகைச்சுவை கலந்து ஏலியனை மையப்படுத்திய வசனங்கள் ஆங்காங்கே ஈர்க்கின்றன.  வளவளவெனப் பேசும் ஏலியனின் பேச்சைக் குறைத்து சிவகார்த்திகேயன் – ஏலியன் இடையேயான உணர்வுப்பூர்வமான காட்சிகளை இன்னும் அதிகப்படுத்தி இருக்கலாம்.

ஆட்டம், பாட்டம், காமெடி என நம்ம ஊருக்கு ஏற்றபடி ஏலியனில் கமர்ஷியல் தன்மைகளைக் கூட்டியுள்ளது முதல் பாதியில் ரசிக்கும்படியாக இருந்தாலும், சில இடங்களில் அதுவே ஓவர் டோஸாகி விடுகிறது.  முதல் பாதி எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இரண்டாம் பாதி நம்மை ஒன்ற வைக்க மறுத்து, ஏலியன் ட்ராக்கிலிருந்து மாறி வழக்கமான “உலகத்தைக் காப்பாற்றப் போராடும் ஹீரோ” ஜானர் கதைக்குள் சென்று விடுகிறது. ஆனாலும் குழந்தைகளுடன் குடும்பமாக சென்று ரசித்து பொங்கலைக் கொண்டாட சிறப்பானதொரு ஸ்பேஸ்ஷிப் பயணத்தை மேற்கொண்டுள்ளது சிவகார்த்திகேயனின் “அயலான்”!

Pros
Cons
What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)